சீட்டஞ்சேரி காலீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீட்டஞ்சேரி காலீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் சீட்டஞ்சேரி என்னுமிடத்தில் உள்ளது. யாதவ குலத்தைச் சேர்ந்த சீட்டண்ணன், குரும்பண்ணன், சாத்தண்ணன் தத்தம் பசுக்கூட்டங்களோடு வாழ்ந்த இடங்கள் முறையே சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி, சாத்தணஞ்சேரி என்றழைக்கப்பட்டதாகக் கூறுவர்.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக காலீசுவரர் உள்ளார். இறைவி சிவகாமசுந்தரி ஆவார். முக்களா மரம் கோயிலின் தல மரமாகும்.[1]

அமைப்பு[தொகு]

ஐந்து நிலையைக் கொண்ட ராஜ கோபுரம், இரண்டு கொடி மரங்கள், அருகில் பச்சைக்கல் நந்தி ஆகியவை காணப்படுகின்றன. மணிபுங்க மரத்தின் அடியில் சுயம்புவாய் இறைவனின் திருமேனி உள்ளது. மூலவர் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். மகாமண்டபம், உற்சவ மண்டபம், ஊஞ்சல் மண்டபம், யாகசாலை மண்டபம், அர்த்த மண்டபம், சிறிய தான மண்டபம் ஆகிய மண்டபங்களைக் கொண்டு கோயில் உள்ளது. கணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதிகள் உள்ளன. அதிகார நந்தி, அறுபத்துமூவர், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. வெளிச்சுற்றில் கோயிலின் குளம் உள்ளது.[1]

திருவிழாக்கள்[தொகு]

பிரதோஷம், சிவராத்திரி, பௌர்ணமி, சித்திரை திருவிழா உள்ளிட்ட விழாக்கள் இங்கு பெரு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]