உள்ளடக்கத்துக்குச் செல்

சில்லு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு தொடர் வண்டியின் சில்லுகளில் ஒன்று
பண்டைய மூவுருளியில் உள்ள மூன்று சக்கரங்கள்
மிகப்பழைய சக்கரங்கள் மரத் துண்டால் செய்யப்பட்டன.
சுமேரியர்களால் பயன்படுத்தப்பட்ட சில்லுகளைக் கொண்ட விலங்குகளால் இழுக்கப்படும் தேர்கள். (கி.மு 2600)
உருவம் பொறித்த புத்துலகம் தற்சார்பாக புனைந்த சக்கரம்

சக்கரம் (wheel) அல்லது சில்லு என்பது இறுசிலோ தாங்கியிலோ உருளத்தகு வட்டவடிவ உறுப்பாகும். ஆறு தனி எந்திரங்களில் ஒன்றான கப்பி-இறுசுத் தொகுதியில் சக்கரங்கள் முதன்மை வாய்ந்த உறுப்புகளாகும். இறுசு பூட்டிய சக்கரங்கள், எடைமிகுந்த பொருள்களையும் எளிதாக நகர்த்தி போகுவரத்துக்கு உதவுவதோடு எந்திரங்களில் அரியவினைகளை எளிதாகச் செய்யவும் உதவும். வேறு பல நோக்கங்களுக்காகவும் சக்கரங்கள் பயன்படுகின்றன. எடுத்துகாட்டாக, கப்பல் சக்கரம், திசைதிருப்பச் சக்கரம், குயவர் சக்கரம் சமனுருள் அல்லது சமன்சக்கரம் ஆகியவற்றைக் கூறலாம். சக்கரங்களுக்கான பொதுவான பயன்பாடுகள் போக்குவரத்தில் அமைகின்றன. இறுசில் உருண்டு இயங்கி சக்கரம் உராய்வைப் பெரிதும் குறைக்கிறது. சக்கரங்கள் சுழல, அதற்கு திருப்புமையை அதன் இறுசில் ஈர்ப்பாலோ புற விசை அல்லது திருக்கத்தாலோ தரவேண்டும்.

வரலாறு

[தொகு]

பிந்தைய புதிய கற்காலத்தில் சக்கரங்கள் உருவாக்கிப் பயன்படுத்தப்பட்டன. தொடக்க வெண்கலக் காலத்தின் பிற தொழில்நுட்பப் பெருவளர்ச்சியோடு இவை பின்னிப்பிணைந்து அமைகின்றன. புதிய கற்காலப் புரட்சியில் வேளாண்மையும் மட்பாண்டங்களும் உருவாகிய பின்பும் சில ஆயிரம் ஆண்டுகள் சக்கரமின்றியே கழிந்துள்ளன. புதிய கற்காலப் புரட்சி (கி.மு 9500–6500).

சுமேரிய போர்ச்செந்தர ஒனேகர் பூட்டிய சக்கர வண்டியின் காட்சி" (அண். கி.மு 2500)

ஆலாப் பண்பாடு (கி.மு 6500–5100) மிகப்பழைய சக்கர வண்டியின் உருவத்தை வரைந்த்தாகக் கூறப்பட்டாலும், அலாபியர்கள் சக்கரவண்டியை ஏன், குயவர் சக்கரத்திக் கூட பயன்படுத்தியதற்கான சான்றேதும் கிடைக்கவில்லை.[1]

கி.மு ஐந்தாயிரம் ஆண்டளவில் நடுவண் கிழக்குப் பகுதியில் "உருட்டிகள்" எனும் "மெதுசக்கரங்கள்" சக்கரங்கள் உருவாவதற்கு முன்பே வழக்கில் இருந்துள்ளன. இதற்கான மிகப்பழைய எடுத்துகாட்டு ஈரானில் உள்ள தெப்பே பார்திசுவில்கி.மு5200–4700 அளவில் கண்டுபிடிக்கப்பட்டது.இவை கல்லாலோ களிமண்ணாலோ செய்யப்பட்டு மையத்தில் ஒரு முளையால் தரையில் நாட்டப்பட்டுள்ளன. ஆனால் இதைச் சுழற்ற முயற்சி தேவைப்பட்டுள்ளது. உண்மையான கட்டற்று சுழலும் குயவர் சக்கரம் மெசபடோமியாவில் கி.மு 3500 ஆண்டளவில் ஏன், கி.மு 4000 ஆண்டளவில் இருந்தே பயன்பாட்டில் இருந்துள்ளது.[2] இதன் மிகப்பழைய எச்சம் ஈராக்கில் உள்ள ஊர் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காலம் கி.மு 3100 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது .

3500 கி.மு நான்காம் ஆயிரப் பிந்திய அரைப்பகுதியில், சக்கரம் பூட்டிய வண்டியின் தோன்றியதற்கான முதல் சான்று, மெசபடோமியாவிலும் (சுமேரிய நாகரிகம்) வட காக்காசசிலும் (மைகோப்பியப் பண்பாடு) நடுவண் ஐரோப்பாவிலும் (குக்குதேனி-திரிப்பில்லியப் பண்பாடு) கிடைத்துள்லது. எனவே சக்கரம் எங்கே எந்தப் பண்பாட்டில் முதலில் தோன்றியது என்ற கேள்விக்கான விடை தீர்க்கப்படாமலே உள்ளது.

தெற்கு போலந்து குடியிருப்பொன்றில் (பன்னல்பீக்கர் பண்பாடு) அகழ்ந்தெடுக்கப்பட்ட மிகப்பழைய களிமட்பானையில் நான்கு சக்கரங்களும் இரண்டு இருசுகளும் உள்ள தேர்வண்டியின் படம் தெட்டத் தெளிவாக நன்கு வரையப்பட்டுள்ளது.[3]

சுலோவேனியாவைச் சேர்ந்த இலியூபிலியானா அருகில் அமைந்த சுதேர் கமாய்னேவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பழைய இருசு பூட்டிய சக்கரம் (மார்ழ்செசு மரச் சக்கரம்) இப்போது 2σ-வரம்புகள் முறைவழியாக கி.மு 3340–3030 ஆண்டளவினதாகவும் அதனுடைய இருசு கி.மு 3360–3045 கால அளவினதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.[4]

தொடக்கநிலைப் புதிய கற்கால ஆரைபூட்டிய ஐரோப்பியச் சக்கரங்களின் இருவகைகள் இருந்துள்ளன. இவற்றில் ஒன்று, ஆல்ப்சு மலையின் முந்துவரலாற்றுக் குடியிருப்பில் கண்டெடுத்த தேர்க்கட்டுமானப் பருதிவகையாகும் (இதில் இலியூபிலியான மார்ழ்செசு சக்கரம் போல ஆரையும் சக்கரமும் ஒன்றாகச் சுற்றுகின்றன). மற்றொன்று, அங்கேரியின் பாதேன் பண்பாட்டுவகை ஆகும் (இதில் ஆரை சுற்றுவதில்லை). இவை இரண்டுமேகி.மு 3200–3000 கால அளவைச் சார்ந்தவை.[5]

சீனாவில் தேரைப் பயன்படுத்த தொடங்கியதும் கி.மு 1200 அளவில் சக்கரம் பயனில் உள்ளது என்பது உறுதி.[6] என்றாலும், பார்பியேரி -லோ[7] கி.மு 2000 ஆண்டளவிலேயே சீனச் சக்கர வண்டிகள் இருந்ததாக வாதிடுகிறார்.

பிரித்தானியாவில் கிழக்கு ஆங்கிலியாவைச் சேர்ந்த மசுட்டுப் பண்ணையில் ஒரு மீட்டர் விட்டமுள்ள பெரிய மரச்சக்கரம் 2016 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கி.மு1,100–800 ஆண்டுகலைச் சார்ந்த்தாகு. மேலும் இது பிரித்தானியவின் மிக முழுமையான தொடக்கநிலைவகைச் சக்கரமாகும். இச்சக்கரத்தில் குடமும் அமைந்துள்ளது. அதன் அருகில் குதிரை முதுகெலும்பு கிடைத்துள்ளதால் இது குதிரை இழுத்த வண்டிச் சக்கரமாகலாம் எனக் கருதப்படுகிறது. நீருள்ள நஞ்சையின் சரிவான பரப்பின் குடியிருப்பில் இது கிடைத்ததால் குடியிருப்புக்கும் அருகாமை கொல்லிகளுக்கும் இருந்த உறவு தெரிய வந்துள்ளது.[8]

ஆல்மெக்கியர் முறையான சக்கரத்தை உருவாக்கா விட்டாலும், அவர்களும் சில அமெரிக்கப் பண்பாடுகளும் அதை நெருங்கியதொரு முயற்சியை மேற்கொண்டுள்ளனர். கி.மு 1500 கால அளவிலான சிறுவரின் பொம்மைகளில் சக்கரம் போன்ற பணிக்கற்கள் அமைந்துள்ளதால் இந்நிலை டெரிய வந்துள்ளது.[9] அமெரிக்கப் பண்பாடுகளில் பேரளவில் சக்கரம் உருவாகாமைக்கான காரணம் சக்கர வண்டியை இழுக்கவல்ல பெரிய விலங்குகள் கால்நடையாக வளர்க்க்ப்படாமையே ஆகும் எனக் கருதப்படுகிறது.[சான்று தேவை] முந்து கொலம்பிய அமெரிக்கப் பண்பாடுகளில் அமைந்த கால்நடையாக அமெரிக்கக் காட்டெருமையை வளர்ப்பது மிக அரிய பணியாகும்; 12,000 ஆண்டுகளுக்கு முன்பு பல குதிரை வகைகள் அங்கே வாழ்ந்தன என்றாலும் பின்னர் அவை அழிந்தொழிந்தன.[10] கொலம்பசு வருகையின் போது ஆந்தெசு மலைக்கு அப்பால் மேற்கு அரைக்கோள மிகப்பெரிய விலங்கான இலாமா கால்நடையாகப் பரவவில்லை (வளர்த்தெடுக்கப்படவில்லை).

நூபியர்கள்கி.மு 400 ஆண்டளவில் மட்பாண்டம் செய்யவும் நீராழிகளிலும் சக்கரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.மேலும் இவர்கள் எகுபதியில் இருந்து ஏற்றுமதி செய்த புரவி பூட்டிய தேர்களைப் பயன்படுத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

எத்தியோப்பியா, சோமாலியாவைத் தவிர சகாரா உட்பகுதி ஆப்பிரிக்காவில் கி.பி 19 ஆம் நூற்றாண்டு வரை சக்கரம் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் ஐரோபியர் அங்கு குடியேறியதுமே நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது.

கோயில்தேரின் எடைமிகுந்த திண்மச் சக்கரம். முன்னணியில் சாலையில் உள்ள ஆரைகள் பூட்டிய சக்கரங்கள் உள்ள மிதிவண்டியும்
மரப்பலகைகளால் உருவாக்கப்பட்ட பொன்ம விளிம்பு வட்டை பூட்டிய திண்சக்கரம்

தொடக்கநிலைச் சக்கரங்கள் இருசுபூட்டும் துளையுள்ள மரவட்டுகளாகவே இருந்தன. மிகப்பழைய சக்கரங்களில் சில மரத்திம்மையாலான கிடைப்பலகைகளால் அமைந்துள்ளன. சீரற்ர மரக் கட்டமைப்பால் மரத்திம்மையின் கிடைப்பலகைகளால் ஆகிய சக்கரம் நெடுக்குப்பலகையின் வட்ட்த் துண்டௌகளால் ஆகிய சக்கரத்தை விட தரங்குறைந்ததாக இருந்தது.

எட்ரூசுகான் தெரில் அமைந்த ஆரைபூட்டிய சக்கரம், கி.மு 6ஆம் நூற்றாண்டின் இரண்டாம் கால்பகுதி
அரோகால்யா பகுதியின் வெண்கலத் தகட்டு ஆரைபூட்டிய சக்கரம், கி.மு 1000 .

ஆரைச் சக்கரங்கள் அண்மையில் தான் புனையப்பட்டன. இதனால் வண்டிகளின் எடை குறைந்தது. எனவே, வண்டிகளை வேகமாக ஓட்ட முடிந்தது. வடமேற்கு இந்தியாவின் சிந்துவெளி நாகரிகத்தில், வரிகள் இட்ட களிமண்ணால் ஆகிய பொம்மைச் சக்கர வண்டிகள் கண்டெடுக்கப்பட்டன, இந்த வரிகள் பொறுக்காகவோ வண்ணத்தால் தீட்டப்பட்டோ அமைந்துள்ளன. இவை ஆரைகளைக் குறிக்கலாம் எனக் கருதப்படுகிறது.[11] மேலும் எழுத்து இலச்சினையிலும் ஆரையொத்த வடிவக் குறியீடு உள்ளது[12] இது கி.மு மூன்றாம் ஆயிரத்தைச் சேர்ந்ததாகும். கி.மு 2000 அளவில் மிகப்பழைய ஆரை மரச்சக்கரங்கள் ஆந்திரனோவோ பண்பாட்டில் கிடைத்துள்ளன. விரைவில் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்குக் காக்காசசு வட்டாரக் குதிரைப் பண்பாடுகளில் ஆரைச் சக்கரம் பூட்டிய போர்த்தேர்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன.இவர்கள் நடுவண் தரை நாடுகளுக்குச் சென்று அம்மக்களுடன் கலந்தனர். மினோவன் நாகரிகத்தின் ஓங்கல் அங்கே குன்றியதும் ஏதென்சும் சுபார்ட்டாவும் எழுச்சி பெற்று முந்து செவ்வியல் பண்பாட்டை உட்கவர்ந்து செவ்வியல் கிரேக்கப் பண்பாடு எழவும் இவர்கள் காரணமகியுள்ளனர். கெல்டிக் தேர்களில் அவர்கள் சக்கரத்தின் பருதியில் இரும்பு விளிம்பை கி.மு முதல் ஆயிரத்தில் அறிமுகப்படுத்தினர்.

ஆரப்போக்கிலும் (இடது) தொடுகோட்டுப்போக்கிலும் (வலது) கம்பி ஆரைகள் அமைந்த சக்கரங்கள். இரண்டிலும் வளிம வட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன
மடிப்பு வகை மிதிவண்டியின் வார்ப்பு பொன்மக் கலவைச் சக்கரங்கள்.இதி வளிம வட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆரைச் சக்கரங்கள், 1870 களில் கம்பிவகை ஆரைகளும் வளிம வட்டைகளும் புனையப்படும் வரையில், பெரிதும் மாற்றம் ஏதும் இன்றியே தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தன.[13] கம்பி ஆரைகள் இழுப்பில் இருப்பதால் சக்கரங்கள் விறைப்பாகவும் இலேசாகவும் அமைந்தன.முதலில் ஆரப்போக்கில் அமைந்த ஆரைகள் நாளடைவில் தொடுகோட்டுப் போக்கில் அமையலாயின. இவை சீருந்துகளில் பிந்தைய 20 ஆம் நூற்றாண்டில் பரவலாகின. இப்போது வார்ப்புப் பொன்மக் கலவைச் சக்கரங்கள் பெருவழக்கில் உள்ளன; எடை சிறப்புக் கூறாகும்போது வடித்த பொன்மக் கலவைச் சக்கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
 1. V. Gordon Childe (1928). New Light on the Most Ancient East. p. 110.
 2. D. T. Potts (2012). A Companion to the Archaeology of the Ancient Near East. p. 285.
 3. Anthony, David A. (2007). The horse, the wheel, and language: how Bronze-Age riders from the Eurasian steppes shaped the modern world. Princeton, N.J: Princeton University Press. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-05887-3.
 4. Velušček, A.; Čufar, K. and Zupančič, M. (2009) "Prazgodovinsko leseno kolo z osjo s kolišča Stare gmajne na Ljubljanskem barju", pp. 197–222 in A. Velušček (ed.). Koliščarska naselbina Stare gmajne in njen as. Ljubljansko barje v 2. polovici 4. tisočletja pr. Kr. Opera Instituti Archaeologici Sloveniae 16. Ljubljana.
 5. Fowler, Chris; Harding, Jan and Hofmann, Daniela (eds.) (2015). The Oxford Handbook of Neolithic Europe. OUP Oxford. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0191666882. p. 109.
 6. Dyer, Gwynne, War: the new edition, p. 159: Vintage Canada Edition, Randomhouse of Canada, Toronto, ON
 7. Barbieri-Low, Anthony (February 2000) "Wheeled Vehicles in the Chinese Bronze Age (c. 2000-741 B.C.)", Sino-Platonic Papers
 8. "Bronze Age wheel at 'British Pompeii' Must Farm an 'unprecedented find'". BBC. பார்க்கப்பட்ட நாள் 2016-02-18.
 9. Ekholm, Gordon F (April 1946). "Wheeled Toys in Mexico". American Antiquity 11 (4): 222–228. https://archive.org/details/sim_american-antiquity_1946-04_11_4/page/222. 
 10. Singer, Ben (May 2005). A brief history of the horse in America. Canadian Geographic Magazine. Archived from the original on 19 August 2014. {{cite book}}: Unknown parameter |deadurl= ignored (help)
 11. Ghosh, A. (1989). An Encyclopedia of Indian Archaeology. New Delhi: Munshiram Manoharlal. p.337; Rao, L.S. (2005–06). The Harappan Spoked Wheels Rattled Down the Streets of Bhirrana, District Fatehabad, Haryana. “Puratattva” 36. pp.59–67.
 12. காண்க Molded tablet and Bull seal, Harappa.
 13. bookrags.com – Wheel and axle

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Wheels
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Automobile wheels
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லு&oldid=3581737" இலிருந்து மீள்விக்கப்பட்டது