சிறிய பச்சை அலகுச் செம்பகம்
சிறிய பச்சை அலகுச் செம்பகம் (small greenbilled malkoha, உயிரியல் பெயர்: Rhopodytes viridirostris) என்பது ஒரு பறவை இனமாகும். இது தென்னிந்தியா முழுவதும் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]இப்பறவை காக்கையைவிட அளவில் சிறியது, மெலிந்த தோற்றத்துடன் சற்று நீண்ட வாலுடன் காட்சியளிக்கும். இப்பறவை சுமார் 39 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு ஆப்பில் பச்சை நிறத்தில் இருக்கும். கண்களைச் சுற்றி நீல நிற தூவியற்ற தோல் பகுதி இருக்கும். விழிப்படலம் இரத்த சிவப்பாக இருக்கும். கால்கள் கரும் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் உடலின் மேற்பகுதி பசுமை கலந்த சாம்பல் நிறத்திலும், கீழ்ப்பகுதி கருஞ்சிவப்பாகவும் இருக்கும். வாலின் விளிம்புகள் வெள்ளையாக இருக்கும்.[1]
பரவலும், வாழிடமும்
[தொகு]இப்பறவை தென்னிந்தியா முழுவதும் காணப்படுகிறது. இவை புதர் காடுகள், மலைசார்ந்த மூங்கில் காடுகளில் காணப்படுகின்றன. மலைப் பகுதிகளில் 1000 மீட்டருக்கு மேல் காண இயலாது.
நடத்தை
[தொகு]இப்பறவை தனித்தோ அல்லது இணையாகவோ முட்புதர்களிடையே மறைந்து திரியும். செண்பகத்தைப் போன்ற பழக்க வழக்கங்களைக் கொண்டவை என்றாலும் அப்பறவை போல தரையில் இறங்கி நடப்பதில்லை. பறக்கும் ஆற்றல் அவ்வளவாக இல்லாத இப்பறவை புதருக்கு புதர் தட்டுத் தடுமாறித் தாவி தாவிப் பறந்து செல்லும். மனிதர் நடமாட்டத்தைக் கண்டால் முட்புதர்களிடையே மறைந்து தப்ப முயலுமே அன்றி பறந்து தப்பாது.
இப்பறவை கம்பளிப்பூச்சி, வெட்டுக்கிளி, சிறு ஒணான், சிறு பழங்கள் போன்றவற்றை உணவாக கொள்ளும். இதன் குரலொலி குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.[1]
இனப்பெருக்கம்
[தொகு]இவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யக்கூடியன என்றாலும் மார்ச் முதல் மே வரை சிறப்பாக இனப்பெருக்கம் செய்கின்றன. தரையில் இருந்து ஒன்று அல்லது இரண்டு மீட்டர் உயரத்தில் புதர்களில் மேடை போன்ற கூடு அமைக்கின்றன. இரண்டு முட்டை இடுகின்றன. அரிதாக மூன்று முட்டைகள் இடுவதும் உண்டு. சாக்கட்டி நிறத்தில் வட்ட வடிவமாக முட்டை இருக்கும்.[1]