சிப்சம் பலகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிப்சம் பலகைப் பிரிசுவர்.

சிப்சம் பலகை (gypsum board) என்பது, இரண்டு தடித்த கடதாசி அட்டைகளிடையே சிப்சம் சாந்தை வைத்து அழுத்துவதால் உருவாக்கப்படும் ஒருவகைப் பலகை ஆகும். இது கட்டிடங்களின் உட்புறச் சுவர்கள், உட்கூரைகள் போன்றவற்றை உருவாக்குவதில் பயன்படுகிறது. சிப்சம் சாந்து எரியும் தன்மையற்றது என்பதால், தீக்காப்புத் தேவைகளுக்கு சிப்சம் பலகைகள் பெரிதும் பயன்படுகின்றன. கடதாசி அட்டைகள் நீர் ஒழுக்குகள் ஏற்பட்டு ஈரமானால் பூஞ்சணங்கள் வளர்வதற்கு வாய்ப்பாக அமையும். இதனால் கடதாசி அட்டைகளுக்குப் பதிலாக இழைக்கண்ணாடித் தகடுகளைப் பயன்படுத்துவதும் உண்டு.

சிப்சம்[தொகு]

சிப்சம் பலகைகளில் முக்கியமான சேர்பொருள் சிப்சம் ஆகும். இது, படிவுப் பாறைகளில் நீரகற்றிய கல்சியம் சல்பேட்டுப் பளிங்கு வடிவில் காணப்படும் கனிமப் பொருள். இயற்கையில் காணப்படும் இக் கனிமத்தில் 21% வேதிமுறையில் சேர்ந்துள்ள நீர் உள்ளது. வெட்டியெடுக்கப்படும் சிப்சம் பாறைகள் உடைக்கப்பட்டுப் பின்னர் நுண்ணிய தூளாக அரைக்கப்படும். நீற்றுதல் என்னும் வழிமுறை மூலம் தூளாக்கிய சிப்சத்திலிருந்து நீரின் பெரும்பகுதி அகற்றப்படும். இதன்போது சிப்சம் 350 பாகை பரனைட் வெப்பநிலைக்குச் சூடாக்கப்படுவதால் அதில் அணைந்துள்ள நீரின் முக்கால் பகுதி நீக்கப்பட்டுவிடும். நீறிய சிப்சம் எனப்படும் இதுவே சிப்சம் பலகை உற்பத்தியில் பயன்படுகின்றது.

தவிர செயற்கை சிப்சமும் சிப்சம் பலகை உற்பத்தியில் பயன்படுவது உண்டு. செயற்கை சிப்சம், படிம எரிபொருள்களைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்களில் துணை விளைபொருட்களாக உருவாகும் வளிமங்களிலிருந்து கந்தகமகற்றுவதன் மூலம் பெறப்படுகின்றது. 2008 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் சிப்சம் பலகை உற்பத்தியில் பயன்பட்ட சிப்சத்தின் ஏறத்தாழ 28% செயற்கை சிப்சம் எனக் கணிக்கப்பட்டுள்ளது[1].

வரலாறு[தொகு]

19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அகத்தீன் சக்கெட் (Augustine Sackett) என்பவர் நான்கு படை உரோமத் தாள்களுக்கு இடையே சிப்சம் சாந்தை வைத்துப் பலகைகளாகத் தயாரித்தார் இது "சக்கெட் பலகை" (Sackett Board) என அழைக்கப்பட்டது. இதுவே சிப்சம் பலகைகளுக்கு முன்னோடி ஆகும். சக்கெட் பலகைகள் சுவர்களுக்கு உகந்த முடிப்பாக அமையவில்லை. ஆனால். இதன் மேல் சிப்சம் சாந்தைப் பூசி முடிப்புச் செய்ய முடியும். 1910 ஆம் ஆண்டுக்கும் 1930 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளால் தற்காலத்தில் பயன்படுவது போன்ற சிப்சம் பலகைகள் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து காற்றடக்கல் நுட்பங்களைப் பயன்படுத்திப் பலகைகளை நிறை குறைந்தவையாகச் செய்யவும் முடிந்தது. தீத்தடுப்புத் தேவைகளுக்குப் பயன்படத்தக்க "X" வகைச் சிப்சம் பலகை 1960 க்குப் பிற்பட்ட காலப்பகுதியில் அறிமுகமானது.

சாதக அம்சங்கள்[தொகு]

சிப்சம் பலகைகள் பயன்பாட்டுக்கு ஏற்ற பல சாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளன. இது பல்வகைப் பயன்பாட்டுத்தன்மை கொண்டதாக இருப்பதுடன், நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும், ஒப்பீட்டளவில் மலிவானதாகவும் உள்ளது. இவை தவிர இதன் தீயெதிர்ப்புத் தன்மையும், ஒலி நொய்தாக்கல் (Sound Attenuation) தன்மையும் இதனைப் பல தேவைகளுக்கும் உகப்பான கட்டிடப்பொருள் ஆக்குகின்றன.

வகைகள்[தொகு]

பல்வேறு கட்டிடத் தேவைகளுக்குப் பயன்படும்படி பல வகையான சிப்சம் பலகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பின்வருவன இவற்றுள் அடங்குகின்றன:

  • சிப்சம் சுவர்ப்பலகை
  • சிப்சம் உட்கூரைப்பலகை
  • நீரெதிர்ப்பு சிப்சம் பலகை
  • சிப்சம் பின்புலப் பலகை
  • வெளிப்புற சிப்சம் அடிப்பரப்புப் பலகை
  • தீயெதிர்ப்பு சிப்சம் பலகை

குறிப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்சம்_பலகை&oldid=3865660" இலிருந்து மீள்விக்கப்பட்டது