சிந்தாமணி நிகண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்தாமணி நிகண்டு 1876 ஆம் ஆண்டுப் பதிப்பு,
அப்போது நூலாசிரியர் அகவை 33
இதற்கு ஞானமூர்த்தி என்பவர் பொருளுதவி செய்துள்ளார்.
புதுவை குமாரவேல் முதலியார் இயற்றிய நேரிசைவெண்பா ஒன்றுடன் சேர்த்து இதில் 401 பாடல்கள் உள்ளன

சிந்தாமணி நிகண்டு [1] என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் 1876-இல் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வாழ்ந்த ச.வைத்தியலிங்கம்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. இதன் புதிய பதிப்பு 2013-இல் வெளிவந்துள்ளது, பதிப்பாசிரியர்கள் [2] இந்த நூலின் மூலத்தோடு மூலப்பாடல்களுக்கான உரையையும், நூலில் கூறப்பட்ட சொற்பொருளுக்கான அகராதியையும் உருவாக்கி இணைத்துள்ளனர்.

நூலமைதி[தொகு]

நூலானது 386 விருத்தப் பாடல்களால் ஆனது. மற்றும் ஆசிரியர் எழுதிய காப்புச் செய்யுள் ஒன்று, அவையடக்கச் செய்யுள் ஒன்று, அ. சிவசம்புப்புலவர் எழுதிய சிறப்புப் பாயிரப் பாடல் 12 - என 400 பாடல்களைக் கொண்டது. சூடாமணி நிகண்டு நூலின் முதல் 11 தொகுதிகள் போல விருத்தப்பாவால் இதனைச் செய்துள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார. [3] விருத்தப் பாவால் அமைந்த நூல் ஆதலால் சொற்களின் இரண்டாம் எழுத்து ஒன்றிவரும் எதுகை முறையில் இதில் உள்ள சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பதிப்பாசிரியர்கள் இவற்றை அகர-வரிசையில் தொகுத்து நூலின் இறுதியில் பதிப்பித்துள்ளனர்.

தமிழில் நுழைந்துள்ள வடசொற்கள் பலவற்றுக்கும், நிகண்டை இயற்றிய ஆசிரியர் தம் வடமொழிப் புலமையால் தமிழில் நுழைத்துள்ள வடசொற்கள் பலவற்றுக்கும் இந்த நூலில் பொருள் காணமுடியும். [4]

நிகண்டு - எடுத்துக்காட்டுப் பாடல்[தொகு]

ஆகமன் [5] சிவனே ஆகமனம் [6] வந்து சேருதல் பேர்
ஏகபிங்கலன் [7] குபேரன் ஏகாக்கம் கரும்பிள்ளைக்கு [8] ஆம்
சாகரணம் [9] விழிப்பு சாகியே அகிலயம் [10] [11] தான்
சேகமே தெளிதல் என்ப சேகிலி அரம்பை [12] ஆமே [13] [14]

அடிக்குறிப்பு[தொகு]

  1. வல்லவை ச. வைத்தியலிங்கர் (1843 - 1901). சிந்தாமணி நிகண்டு (மூலமும் உரையும் அகராதியும்). யாழ்ப்பாணம்: நோக்கு, கொட்டிவாக்கம், சென்னை 96 பதிப்பு ஆண்டு 2013. 
  2. வ. ஜெயதேவன் & இரா. பன்னிருகைவடிவேலன்
  3. நூலின் அவையடக்கப் பாடல்
  4. பிற தள இணைப்பைச் சொடுக்கி ஆய்ந்து இதனைத் தெரிந்துகொள்ளலாம்.
  5. ஆகம் என்னும் உடலுக்கு மன்னன் சிவன்
  6. ஆக-மனம் என்னும் மன-உணர்வு சிவன் உடலில் வந்து சேர்தல்
  7. பிங்கலன் என்னும் சொல் செல்வனைக் குறிக்கும். தனிப்பெருஞ் செல்வன் குபேரன்
  8. காகம்
  9. சாகரணம் = விழிப்புணர்வு
  10. சாகி = அகிலயம் (உலகம்), ஆலமரத்தின் அயலே உள்ள இடத்தை ஆலயம் என்பது போல அகிலமாமாகிய உலகத்தின் அயலே உள்ள இடம் அகிலயம்
  11. சிவன் "ஆலமர் செல்வன்" எனக் குறிப்பிடப்படுகிறான் (சிறுபாணாற்றுப்படை 97, "ஆல்கெழு கடவுள்" எனக் குறிப்பிடப்படுகிறான் (திருமுருகாற்றுப்படை 256)
  12. அரம்பை = வாழைமரம், வாழைமரம் போன்ற பெண்
  13. நிகண்டு பாடல் 1
  14. பொருள் நோக்கில் பிரித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தாமணி_நிகண்டு&oldid=3351360" இலிருந்து மீள்விக்கப்பட்டது