உள்ளடக்கத்துக்குச் செல்

நிகண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும். தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை நிகண்டுகள். இந் நூல்கள் முற்காலத்தில் உரிச்சொற்பனுவல் என்ற பெயரால் அழைக்கப்பட்டன, ஆயினும் நிகண்டு என்னும் சொல் வடமொழி என்ற கருத்தும் உள்ளது[1]. WORDS MEANING:

சொல்விளக்கம்

[தொகு]

நிகண்டு என்னும் சொல் தொகை, தொகுப்பு, கூட்டம் என்னும் பொருள் தரும். நிகண்டு என்பது தமிழ்ச்சொல்.
நிகர் + அண்டு = நிகரண்டு > நிகண்டு. நிகரான சொற்கள் அண்டிக் கிடப்பவை.
நிகர் என்னும் சொல்லைத் தொல்காப்பியம் பெயர்ச் சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்துகிறது. [2]
சங்கப்பாடல்களில் வரும் 'நிகர்மலர்' என்பது வினைத்தொகை [3]
நிகர் + அண்டவாதி = நிகண்டவாதி [4] HISTORY:

வரலாறு

[தொகு]

இக்காலத்தில் அரிய சொற்களின் பொருளை அறிய அகராதிகளைப் பயன்படுத்துகிறோம். இவை சொல்லிலுள்ள முதலெழுத்து நெடுங்கணக்கு வரிசையைப் பின்பற்றி, வரிசைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன. தற்கால அகராதிகளுக்கு முன்னரே சொற்களுக்கு பொருள் எடுத்துக்கூறும் மரபும் நூற்களும் தமிழில் நெடுங்காலம் உண்டு. இவ்வாறு சொற்களுக்குப் பொருள் கூறும் நூலே நிகண்டு எனப்படுகிறது.

நிகண்டு என்னும் நூல்வகைக்கு முன்னோடி போல் அமைந்தது தொல்காப்பியம். தொல்காப்பியர் அருஞ்சொற்களுக்கு மட்டும் பொருள்கூறிச் செல்கிறார். ஒரு சில எடுத்துக்காட்டுகள்:

  • உரியியலில் அருஞ்சொற்களாகத் தோன்றியவற்றுக்குப் பொருள் தருகிறார். "வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொல் மேன" ("பொருள் வெளிப்படையாகத் தெரிகின்ற சொற்களை விட்டுவிட்டு, பொருள் தெளிவற்ற அரிய சொற்களுக்கு மட்டும் பொருள் கூறுவோம்") என்று குறிப்பிடுகிறார்.
  • மரபியலில் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற்பெயர் முதலியவற்றை நிகண்டுகள் போல் தொகுத்துக் கூறி, அவை தமிழ் மரபுப்படி வழங்கும் வழக்கையும் குறிப்பிடுகிறார்.

நிகண்டுகள் செய்யுள் வடிவில் அமைந்தவை. அவற்றில் ஒருபொருட் பல்பெயர், ஒருசொற் பல்பொருள், தொகைப்பெயர் என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. அவை பெரும்பாலும் நூற்பாவினால் அமைந்தவை. வெண்பா, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை போன்ற பிற பாவகைகளினால் அமைந்த நிகண்டுகளும் உள்ளன.

பண்டைய காலத்தில் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே அரிய தமிழ்ச் சொற்களின் பொருளை அறிய நிகண்டு நூல்கள் தோன்றின. இவை பாடல்களாக உள்ளன. பாடல்களில் சொற்கள் பொருள் பொருள்நோக்கில் பாகுபடுத்தப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. எ.கா: தேவர்-பெயர், மக்கள்-பெயர், இயற்கைப்பொருட்பெயர், செயற்கைப்பொருட்பெயர், செயல் பற்றிய பெயர்கள், பண்பு பற்றிய பெயர்கள் என அவை சொற்களைப் பாகுபடுத்திக் கொண்டுள்ளன. பாடல்களின் அடிகள் பொதுவாக எதுகைத்தொடையாக அமைவது வழக்கம். எனவே சொற்களின் வரிசையும் இரண்டாம் எழுத்து அடுக்கு எதுகை முறையைப் பின்பற்றி அமைந்துள்ளன.

நிகண்டுகளின் வளர்ச்சிப் பாதையில் பிற்கால நிகண்டுகள் ஒரு பொருளைத் தரும் பலசொற்களைத் திரட்டித் தரும் பாங்கினையும் இணைத்துக்கொண்டுள்ளன.

காலவரிசைப்படி நிகண்டுகள் பட்டியல்

[தொகு]

நிகண்டுகளின் தொகுப்புமுறை

[தொகு]

நிகண்டுகளில் பழமையானது திவாகர நிகண்டு. இது இக்கால அகராதி போலச் சொற்களை அகர வரிசையில் அடுக்கி வைத்துக்கொண்டு சொற்களை விளக்கும் வேறு சொற்களைத் தொகுத்துத் தருகிறது. இதற்குப் பின்னர் தோன்றிய நிகண்டுகள் சொற்களை அடுக்கும்போது முதலெழுத்தை அடுத்து நிற்கும் எதுகை எழுத்து அடிப்படையைக் கையாளுகின்றன. முதலெழுத்து அடுக்குமுறை ஏட்டைப் பார்த்துப் பொருள் உணர்ந்துகொள்ள ஏத்ததாக அமையும். எதுகை எழுத்தடுக்கு முறைமை நூற்பாக்களை மனனம் செய்து மனத்தில் பதிய வைத்துக்கொள்ள ஏதுவாக அமையும். [5]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005
  • சோ.இலக்குவன், கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,
  • சு.ஆனந்தன், தமிழ் இலக்கிய வரலாறு,கண்மணப்பதிப்பகம்.,திருச்சி.

மேற்கோள்கள்

[தொகு]
  1. எனினும் இச் சொல் நீளமாக இருந்ததனாலோ அல்லது இடைக் காலத்திலேற்பட்ட வடமொழிச் சொற்பயன்பாட்டு மோகம் காரணமாகவோ நிகண்டு என்ற வடமொழிப் பெயரே பிற்காலத்தில் நிலைபெற்று விட்டது என்னும் கருத்து உள்ளது.
  2. கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே (தொல்காப்பியம் 3-561 இந்த ஆட்சியில் பெயர்ச்சொல்) நிகர் என்பது உவமை உருபுகளில் ஒன்று. (தொல்காப்பியம் 3-282 இந்த ஆட்சியில் இது வினையெச்சம்)
  3. (நற்றிணை 391, குறுந்தொகை 311, அகம் 11, 83, 371).
  4. (உயிர் பரமாணுத்திரளோடு நிகராக ஒன்றி உலகம் இயங்குவதைக் கூறுபவன்) மணிமேகலை 27 சமயக்கணக்கர் தம்திறம் கேட்ட காதை)
  5. திருச்செந்தூர் அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு, செந்தமிழ்ப் பிரசுரம் – வெளியீடு – எண் 54, சு. வையாபுரிப்பிள்ளை பதிப்பு, அச்சகம் – மதுரைத் தமிழ்ச் சங்கம் முத்திராசாலை அச்சகம், 1931

தொகைப்பெயர் உதாரணம்

[தொகு]
  • நானிலம்
  • ஐம்பூதம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகண்டு&oldid=3744235" இலிருந்து மீள்விக்கப்பட்டது