சிங்கப்பெருமாள்கோயில் குடைவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பெருமாள்கோயில் குடைவரை, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள்கோயில் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு குடைவரை ஆகும். இவ்வூர் முற்காலத்தில் "நரசிங்க விண்ணகரம்" என அழைக்கப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. தற்காலத்திலும் மக்கள் வழிபடும் வைணவக் கோயிலாக இக்குடைவரைக் கோயில் உள்ளது.

அமைப்பு[தொகு]

இக்குடைவரையின் மண்டபத்தில் முகப்பை அண்டி இரண்டு முழுத்தூண்களையும், இரண்டு அரைத் தூண்களையும் உள்ளடக்கிய தூண் வரிசை உள்ளது. இத்தூண்களின் மேற்பகுதியும், கீழ்ப்பகுதியும் சதுர வெட்டுமுகம் கொண்டனவாகவும் இடைப்பகுதி எண்கோணப்பட்டை வடிவிலும் உள்ளன. இவற்றின் மேல் போதிகை, உத்தரம் ஆகிய உறுப்புக்கள் காணப்படுகின்றன. மண்டபத்தின் பின்பக்கச் சுவரில் கருவறை குடையப்பட்டுள்ளது. கருவறையுள் திருமாலின் சிற்பம் உள்ளது. இக்குடைவரையில் வாயிற்காவலர் சிற்பங்களோ, வேறு சிற்பங்களோ இல்லை.[1]

தொடர்ந்து வழிபாட்டுக்குரிய கோயிலாக இது இருப்பதால், தேவைக்கேற்பப் பிற்காலத்தில் இக்குடைவரையை அண்டிப் பல கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டுக்கள்[தொகு]

இக்குடைவரையின் தூண்களில் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது.[2] இவ்வூரின் பெயரை நரசிங்க விண்ணகரம் எனக் குறிப்பிடும் இக்கல்வெட்டு, இவ்வூரின் பெயரால் இங்குள்ள இறைவரையும் "நரசிங்க விண்ணகரத் தேவர்" என்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 57, 58
  2. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 58