சாவித்திரி (1941 திரைப்படம்)
| சாவித்திரி | |
|---|---|
சுவரிதழ் | |
| இயக்கம் | ஒய். வி. ராவ் |
| தயாரிப்பு | ராயல் டாக்கீஸ், மதுரை |
| இசை | கமல்தாஸ் குப்தா துறையூர் ராஜகோபால் ஷர்மா |
| நடிப்பு | ஒய். வி. ராவ் வி. ஏ. செல்லப்பா கே. சாரங்கபாணி டி. எஸ். துரைராஜ் கே. துரைசுவாமி சாந்தா ஆப்தே எம். எஸ். சுப்புலட்சுமி டி. எஸ். கிருஷ்ணவேணி கோல்டன் சாரதாம்பாள் |
| விநியோகம் | ராயல் டாக்கீஸ் |
| வெளியீடு | செப்டம்பர் 5, 1941 |
| நீளம் | 16 ரீல் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சாவித்திரி என்பது 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை யரகுடிப்பட்டி வரதராவ் (ஒய். வி. ராவ்) இயக்கினார். இத்திரைப்படத்தில் ஒய். வி. ராவ் சத்தியவானாகவும், சாந்தா ஆப்தே சாவித்திரியாகவும், எம். எஸ். சுப்புலட்சுமி நாரதராகவும் நடித்தனர்.[1]
கதைக்களம்
[தொகு]சாவித்திரி அழகான, கற்பு மிக்க இளவரசி. அண்டை இராச்சியங்களில் உள்ள இளவரசர்கள் அவளுடைய அழகையும் தூய்மையையும் கண்டு அஞ்சுகின்றனர். எனவே யாரும் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதனால் சாவித்திரியின் தந்தையான மன்னர் அஸ்வபதி அவளை வெளியே சென்று தனக்கு ஏற்ற கணவனைத் தேடச் சொல்கிறார். அவள் ஒரு இளைஞனைக் காண்டு காதல் கொள்கிறாள். அவன் பெயர் சத்தியவான். போரில் தோல்வியுற்று காட்டுக்கு விரட்டபட்ட சால்வ நாட்டு பார்வையற்ற மன்னனான துயுமத்சேனனின் மகன் ஆவான். சாவித்திரி அந்த இளைஞனை தனது இராச்சியத்திற்கு அழைத்து வருகிறாள். இதற்கிடையில், அஸ்வபதியிடம் வரும் நாரதர், சத்தியவானின் ஆயுள் இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ளது என எச்சரிக்கிறார். இருப்பினும், சாவித்திரி சத்தியவானை கணவனாக நினைத்துவிட்டதால் அவனையே திருமணம் செய்து கொள்ளவதாக உறுதியாக இருக்கிறாள். மகளின் மன உறுதியைக் கண்டு இறுதியில் அரசர், அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். நாரதர் சாவித்திரியடம் சில நோன்புகளை உபதேசிக்கிறார். அதை பக்தியுடன் கடைபிடித்தால் நன்மை உண்டாகும் என்று கூறுகிறார். அதை ஏற்கும் சாவித்திரி காட்டில் தன் கணவருடன் வசிக்கச் செல்கிறாள். அங்கு அவள் துறவற வாழ்க்கையை மேற்கொள்கிறாள். நாரதர் கூறிய நோன்புகளை கடைபிடித்து வாழ்ந்துவருகிறாள். நோன்பு முடியும் நாளில் சாவித்திரி தன் கணவனுடன் விறகு வெட்டுவதற்காக காட்டிற்குள் செல்கிறாள். சத்தியவான் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும்போது, சரிந்து விடுகிறான். யமன் வந்து அவனது உயிரை எடுத்துக்கொள்ள வருகிறான். சத்தியவான் தருமத்தில் சிறந்தவன் என்பதால் தானே வந்ததாக யமன் கூறுகின்றான். சாவித்திரி யமனைப் பின்தொடர்கிறாள். ஆனால் யமன் தன்னைப் பின்தொடர்ந்து வரவேண்டாம் என்று கூறுகிறான். ஆனால் அவள் யமனிடம் தர்மத்தைப் பற்றிப் பேசுகிறாள். அவளுடைய பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட எமன், சத்தியவானின் உயிரைத் தவிர வேறு எந்த வரத்தையானாலும் கேட்கலாம் என்கிறான். காட்டில் வசிக்கும் தன் தன் மாமனார் துயுமத்சேனன் மீண்டும் ஆட்சியையும், பார்வையையும் பெறவேண்டும் என்று கேட்கிறாள். எமன் அந்த வரத்தைத் தருகிறாள். சாவித்தரி மீண்டும் எமனைப் பின் தொடர்ந்து ஒவ்வொரு வரமாக அதாவது தன் தந்தையின் இராச்சியத்திற்கு ஒரு வாரிசைக் கேட்கிறாள், இறுதியாக தனக்கென 100 குழந்தைகளைக் கேட்கிறாள். இது யமனை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளுகிறது. அவளுக்கு 100 குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், அந்தக் குழந்தைகளை அவளுக்குக் கொடுக்க சத்தியவான் உயிருடன் இருக்க வேண்டும். இந்த நல்லொழுக்கமுள்ள பெண்ணின் வாதங்களால் முழுமையாக ஈர்க்கப்பட்ட யமன், சத்தியவானின் உயிரைத் திருப்பித் தருகிறான்.
நடிப்பு
[தொகு]
|
|
தயாரிப்பு
[தொகு]சாவித்திரி பாத்திரத்தில் நடித்த சாந்தா ஆப்தே மராத்தி, இந்திப் படங்களில் புகழ் பெற்ற நடிகையாவார். அவருக்கு தமிழ் தெரியாது. இப்படத்தில் பாடி நடிப்பதற்காக இவர் ஓராண்டு பூனாவில் ஓராண்டுகாலம் ஆலிரியர் ஒருவரிடம் தமிழ் கற்றார்.[1] எம். எஸ். சுப்புலட்சுமி இத்திரைப்படத்தில் நாரதராக நடித்தார்.[2] இப்படம் கல்கத்தாவில் உள்ள நியூ தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது. சாவித்திரியின் தோழிகளில் ஒருத்தியாக வி. என். ஜானகி நடித்தவர்.
இத்திரைப்படத்தின் இயக்குநரான ஒய். வி. ராவ் நான்கு இந்திய மொழிகளில் (இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம்) திரைப்படங்கள் தயாரித்த முதலாவது இயக்குநர் ஆவார்.[2]
இசை
[தொகு]கமல் தாஸ் குப்தா இசைக்குவுக்கு பொறுப்பாளராக இருந்தார். துறையூர் எம். ராஜகோபால் சர்மா இசையமைத்தார். "ப்ருஹி முஹுந்தேதி" என்பது சதாசிவ பிரமேந்திரரின் கிருதி. மற்ற பாடல் வரிகளை பாபநாசம் சிவன் எழுதினார்.
| வ.எண் | பாடல் | பாடகரக்(கள்) | நீளம் (நி:நொ) |
|---|---|---|---|
| 1 | "ப்ருஹி முஹுந்தேதி" | எம். எஸ். சுப்புலட்சுமி | 02:17 |
| 2 | "மனமே கணமும் மறவாதே" | 01:55 | |
| 3 | "அக்கினி என்றறியாயோ கற்புடைய மங்கையரை" | 02:34 | |
| 4 | "தேவியைப் பூஜை செய்வாயே" | 02:08 | |
| 5 | "மங்களமும் பெறுவாரும்" | 02:10 | |
| 6 | "சொல்லு குழந்தாய்" | 03:21 | |
| 7 | "தேவியைப் பூஜை செய்வாய்" | 03:30 | |
| 8 | "ஜெயதேவியே ஜகதாம்பிகே கருணையை அருள்வாய் தேவி" | சாந்தா ஆப்தே | 02:17 |
| 9 | "ஆனந்தமான உல்லாசமுடன் விலையாடுவோம் படுவோம் பாட்டுகளை" | 01:54 | |
| 10 | "அதோ தேவி, அதோ போகிறான்.. இஹ பர சுகமும்" | 02:43 | |
| 11 | "மாயே, என்னாடு தாயே" | 01:59 | |
| 12 | "குலமிகு பிறவியின்" | 02:19 | |
| 13 | "நாதன் உயிர்க்கு மன்றாடும்" | வி. ஏ. செல்லப்பா | 02:54 |
வெளியீடு
[தொகு]சாவித்திரி 1941 செப்டம்பர் 4 அன்று மதுரை, திருச்சி, கோயம்புத்தூரில் வெளியிடப்பட்டது.[3]சென்னையில் இது அக்டோபர் 17 அன்று வெளியிடப்பட்டது.[4]
வரவேற்பு
[தொகு]இப்படம் படம் வசூலில் தோல்வியடைந்தது. திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை, "எம். எஸ். சுப்புலட்சுமி, ஒய். வி. ராவ், செல்லப்பா, சாந்தா ஆப்தே ஆகியோரின் சிறந்த நடிப்பிற்காகவும், எம். எஸ். சுப்புலட்சுமியின் பல பாடல்கள் வெற்றி பெற்றதற்காகவும் இந்தப் படம் நினைவுகூரப்படுகிறது" என்று கூறினார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Randor Guy (5 March 2010). "Savithiri (1941)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 7 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170307135901/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/savithiri-1941/article3020665.ece.
- ↑ ராண்டார் கை (5 மார்ச் 2010). "Savithiri (1941)". தி இந்து. Retrieved 6 மார்ச் 2010.
- ↑ "Savithiri". The Indian Express: pp. 2. 30 August 1941. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19410830&printsec=frontpage&hl=en.
- ↑ "Savithiri". The Indian Express: pp. 4. 18 October 1941. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19411018&printsec=frontpage&hl=en.