சாமுவேல் சான்டர்சு தெயுலோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாமுவேல் சான்டர்சு தெயுலோன்
தனிப்பட்ட விவரங்கள்
நாட்டினம்ஐக்கிய இராச்சியம்
பிறப்புமார்ச்சு 2, 1812(1812-03-02)
கிறீனிச், இலண்டன், இங்கிலாந்து
இறப்பு2 மே 1873(1873-05-02) (அகவை 61)
டென்ச்லேய்சு, 3 த கிறீன், ஆம்ப்சுட்டெட், இலண்டன்
பணி

சாமுவேல் சான்டர்சு தெயுலோன் (1812-1873) 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும் இங்கிலாந்தில் வாழ்ந்தவருமான கோதிக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞர். இவர் இங்கிலாந்தில் பல கட்டிடங்களையும் நினைவுச் சின்னங்களையும் வடிவமைத்துள்ளார்.

குடும்பம்[தொகு]

தெயுலோன் தென்கிழக்கு இலண்டனில் உள்ள கிறீனிச்சில் 1812 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் பிரெஞ்சுக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர், அலுமாரிகள் செய்யும் தொழில் செய்து வந்தார். தெயுலோனின் உடன்பிறந்தாரான வில்லியம் மில்போர்ட் தெயுலோன் (1823–1900) என்பவரும் கட்டிடக்கலைஞர் ஆனார். 1873 ஆம் ஆண்டு காலமான தெயுலோன் ஐகேட் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது வழி வந்தவரான அலன் தெயுலோன் என்பவர் 2009 ஆண்டில் சாமுவேல் சான்டர்சு தெயுலோன் பற்றிய நூலொன்றை வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

தெயுலோன் வடிவமைத்த, கிழக்கு சசெக்சின் ஆசுட்டிங்சில் (Hastings) உள்ள புனித திரித்துவ தேவாலயம்

ராயல் அக்கடமி பள்ளிகளில் பயின்ற தெயுலோன் 1835 ஆம் ஆண்டில் படிப்பை முடித்துக்கொண்டு, 1838ல் கட்டிடக் கலைஞராகப் பணி புரியத் தொடங்கினார். சார்ச் கில்பர்ட் இசுக்கொட்டின் (George Gilbert Scott) நண்பரான இவர், 1835 ஆம் ஆண்டு சனவரி ஆறாம் தேதி பிரித்தானியக் கட்டிடக்கலைஞர் அரச நிறுவனத்தின் அவை உறுப்பினர் ஆனார். 1841-1842 காலப்பகுதியில் சார்ச் போர்ட்டர் (George Porter) என்பவருக்கு உதவியாளராக இருந்த தெயுலோன் இவான் கிறிசுத்தியன் (Ewan Christian) என்பவரோடு இணைந்து ஐரோப்பாக் கண்டத்தில் நீண்ட ஆய்வுச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டார். இவான் கிறிசுத்தியன் இவருக்கு வாழ்நாள் நண்பராகத் திகழ்ந்தார். பின்னாளில் பிரபுப் பட்டம் பெற்றவரும், இலன்டன் நகரக் கார்ப்பரேசனின் கட்டிடக் கலைஞராக இருந்தவருமான ஓராசு யோன்சு (Horace Jones) என்பவரும் இலன்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில், கட்டிடக்கலைப் பேராசிரியராக விளங்கியவருமான எய்ட்டர் லூயிசு என்பவரும் இந்தச் சுற்றுலாவில் இணைந்திருந்தனர்.

தெயுலோன், விக்டோரிய மறுமலர்ச்சி கோதிக் தேவாலயக் கட்டிடக்கலையில் சிறப்புத் தகைமை பெற்றிருந்தார். எனினும், பல நாட்டுப்புற வீடுகளையும், முழுமையான ஊர்களையும் கூட வடிவமைத்துள்ளார். 1848 ஆம் ஆண்டில் பெட்ஃபோர்டின் ஏழாம் டியூக்குக்காக தோர்னி எசுட்டேட்டில் வடிவமைத்த வீடுகளே இவர் முதர்முதலில் ஈடுபட்ட பெரிய அளவிலான வேலை. கன்டர்பரி மேற்றிராணியார், மால்பரோ டியூக், சென். அல்பான்சின் பத்தாவது டியூக், இளவரசர் ஆல்பர்ட் போன்றவர்களுக்காக இவர் கட்டிடங்களை வடிவமைத்துள்ளார்.