உள்ளடக்கத்துக்குச் செல்

சாஃபோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாஃபோ

சாஃபோ (Sappho) ஒரு பண்டைய கிரேக்கப் பெண் தன்னுணர்வுக் கவிஞர் ஆவார். லெஸ்போஸ் தீவில் பிறந்த இவரை பின் வந்த கிரேக்கர்கள் ஒன்பது தன்னுணர்வுக் கவிஞர்களுள் ஒருவராகக் கொள்வர். வரலாற்றிலும், கவிதையிலும் இவரை லெஸ்போஸ் தீவின் மிட்டிலீனி (Mytilene) என்னும் நகரத்துடன் தொடர்புபடுத்துவது உண்டு. இவர் பிறந்த இடமாக அதே தீவிலிருந்த இன்னொரு நகரான எர்சோஸ் என்னும் நகரையும் சொல்வது உண்டு. இவர் கிமு 630 க்கும் கிமு 612 க்கும் இடையில் பிறந்து கிமு 570 அளவில் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. இவரின் பெற்றோர்கள் ஸ்காமாண்டிரோனிமஸ், கிலெயிஸ் ஆவார்கள். இவருக்கு ஒரு மகள் இருந்ததாகவும் அவளை தனது தாயின் நினைவாக கிளெயிஸ் என்று அழைத்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவர் எழுதி பண்டைக் காலத்தவர் படித்துச் சுவைத்ததாகச் சொல்லப்படும் பெரும்பாலான கவிதைகள் இன்று கிடைத்தில எனினும் தப்பியிருக்கும் பகுதிகள் மூலம் அவரது புகழ் நிலைத்துள்ளது.

வாழ்க்கை[தொகு]

சாஃபோவும் அல்கேயசும், வால்டர்சு கலை அருங்காட்சியகத்தில் இருக்கும் இலாரன்சு அல்மா-தடேமா வரைந்த ஓவியம்

சாஃபோ கிருத்துவுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். கிரேக்கச்செம்மொழி இலக்கியத்தை அறிந்தோர் யாரும் இவரை அறியாமல் இருக்க முடியாது. இவர் உலகத்தின் அபூர்வம் என்றும் அதிசயம் என்றும் புகழாரம் சூட்டப்பட்டவர்.இவர் பண்டைய கிரேக்க நாட்டின் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றான லெஸ்போஸ் என்ற தீவில் ஒரு செல்வக்குடும்பத்தில் பிறந்தவர்.[1] இவரது குடும்பம் அரசியல் காரணங்களால் நாடுகடத்தப்பட்டு சிராக்கூஸ் என்ற நகரில் இருந்தது. சாஃபோவின் சிலை சிராக்குஸ் நகர மண்டபத்தில் இருந்ததற்கான குறிப்பை சரித்திர வல்லுநர் சிசரோ என்பார் வழங்கியுள்ளார்.[2] சிராக்குஸ் நாட்டிலும் இவரின் பேரழகும் பேரறிவும் அனைவரையும் கவர்ந்தன. இந்நகர மக்கள் இவர் நினைவாக கோவில் ஒன்று கட்டி இவருக்கு பெருமை சேர்த்தனர். கீழே குறிப்பில் கண்ட செம்மொழி இலக்கிய சுருங்கிய துணைவனில் கண்டுள்ளபடி சாஃபோ செர்சைலஸ் என்பாரை மணந்து கொண்டு[3] கிலயிஸ் என்ற பெயருடைய மகளைப் பெற்று வளர்த்தார்."[4]

சாஃபோவுக்கு அல்கேயஸ் என்ற பெயருடைய ஆண் கவிஞர் காதலராக இருந்திருக்கிறார். அல்கேயஸ் சாஃபோவை ‘கரு நீலமுடியுடைய தூய்மையான தேன் போன்று புன்முறுவல் பூக்கும் அழகி’ என்று வருணிப்பதற்கான குறிப்பொன்று காணப்படுகிறது. சாஃபோவும் அல்கேயசும் ஒன்றாக உள்ள ஓவியங்கள் இன்றும் கலைக்கூடங்களில் காணப்படுகின்றன. (வலது)

சாஃபோவும் இளம்பெண்களும்[தொகு]

சாஃபோவுக்கு இளம்பெண் காப்பக பொறுப்பாளராக இருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இளம்பெண்களுக்கு பலவகையான திறன்களையும் அறிவுக்கூறுகளையும் வழங்குவதே இவரின் பணியாக இருந்திட்ட போதிலும், இவர் அவர்கள் ஒருசிலரின் அழகைக்கண்டு மயங்கியவராகவும் அவரழகை அனுபவிக்கும் வேட்கை மிக்கவராகவும் இருந்திருக்கிறார் என்பதை அவரின் கவிதைகள் மூலமாகவும் அவரின் பண்புகளை விளக்கும் கலைக்கூடங்களில் இன்றும் காணப்படும் ஓவியங்கள் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.[5]

கிரேக்க நாட்டில் கிமு ஆறாம் நூற்றாண்டு போன்ற பண்டைய நாட்களில் இத்தகு ஓரினச் சேர்க்கைப் பழக்கம் உடையவரை பிற்காலங்களில் கிபி 19, 20 மற்றும் 21 ம் நூற்றாண்டுகளில் வெறுத்து ஒதுக்கப் படுவது போன்று எந்த காழ்ப்பு உணர்ச்சியும் அவர்பால் காட்டப்படவில்லை. லெஸ்பியன் (Lesbian), ஓரினச்சேர்க்கையுள்ள பெண், லெஸ்பியனிசம் (Lesbianism) பெண்களில் ஓரினச்சேர்க்கை என்ற சொற்கள் கிபி 19ம் நூற்றாண்டு முதற்கொண்டே வழக்கத்தில் உள்ளன. மேற்கண்ட இரண்டு சொற்களுக்கும் இவர் காரணமானவர் என்று கருதப்படுகிறார்.[6] இதோடுமட்டுமல்லாமல் இவர் பெயர் தழுவிய சாஃபிக் (Sapphic), சாஃபிசம் (Sappism) என்ற சொற்களும் இவரது பெயரிலிருந்து பிறந்த பெண்களின் ஓரினச் சேர்க்கையைக் குறிக்கின்ற சொற்களாக இருக்கின்றன.[7][8]

சாஃபோவும் சாக்ரடீசும்[தொகு]

கிரேக்க நாட்டு தத்துவமேதை சாக்ரடீஸ் ஓரினச் சேர்க்கை கொண்ட ஆண் விரும்பி. இவரின் ஆண் காதலர்கள் அல்சிபையாடிஸ், சார்மௌஇடிஸ், பேட்ரஸ் ஆகிய மூவருமாவர். இதைபோன்றே சாஃபோவும் ஓரினச்சேர்க்கை கொண்ட பெண் விரும்பி. இவரின் பெண்காதலர்கள் கிரின்னா, அத்திஸ், அன்க்டோரியா ஆகிய மூவருமாவர். சாக்ரடிஸ் ஒர் ஆண்விரும்பி (Gay) என்றால் சாஃபோ ஒரு பெண்விரும்பி (Lesbian) என்பது வெளிப்படையாகின்றது. காதற்கலையை (Art of love) இருவரும் ஓரினச்சேர்க்கை (Homosexuality) மூலமே கண்டிருக்கிறார்கள் என்பதும் புலனாகின்றது.[9]

சாஃபோவுக்கு பெண்களிடம் ஈடுபாடு அதிகமாக இருந்ததற்கான குறிப்புகள் இவர் கவிதைகளில் காணப்படுகின்றன. இவரின் தனிப்பற்றுக்குப் பாத்திரமான அத்தீஸ், அனக்டோரியா ஆகியோர் பெயரையே தலைப்பாகக் கொண்ட கவிதைகள் இவரது காதலின் செறிவை உணர்த்துகின்றன. சாஃபோவின் கவிதைகள் தன் ஊணர்ச்சிப் பாக்கள் (Lyrics) என்ற வகையைச் சேர்ந்தன. இவை லயர்(Lyre) என்ற இசைக் கருவியின் இசையுடன் இணைத்து அக்காலத்தில் பாடப்பட்டன. சாஃபோ ஒன்பது முது பெரும் கிரேக்க மொழிக் கவிஞருள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

காலம்[தொகு]

ஸ்ட்ராபோ என்பவர் கூற்றுப்படி சாஃபோ, மிட்டிலீனியைச் சேர்ந்த அல்சீயஸ் (பிறப்பு கிமு 620), பித்தாக்கஸ் (கிமு 645 - 570) என்பவர்களது சமகாலத்தவர் ஆவார். அத்தீனியஸ் என்பவரோ சாஃபோ லிடியாவைச் சேர்ந்த அல்யாத்தெஸ் (Alyattes - கிமு 610 - 560) வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் என்கிறார்.

சாஃபோவின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரே சமகாலத்து மூலம் அவரது கவிதைகள் மட்டுமே. ஆனாலும் அறிஞர்கள் அவற்றிலிருந்து வரலாற்றுத் தகவல்களைப் பெறமுடியும் என்று நம்பவில்லை. இவர் பற்றிய பெருமளவிலான வாழ்க்கைக் குறிப்புக்களைப் பெற உதவும் பிற்காலத்து மூலங்கள் குறித்தும் சந்தேகங்கள் உள்ளன.[10][11]

சாஃபோவின் கவிதைகளும் கிரேக்கத் தொன்மவியலும்[தொகு]

சாஃபோ எழுதிய கவிதைகளில் இருநூரு கவிதைகள் இது வரை கண்டறியப்ப்ட்டுள்ளன. அதில் பதினாறாவது துணுக்கும் நாற்பத்தி நான்காவது துணுக்கும் கோமர் காப்பியங்களை ஒட்டி எழுதப்பட்டவை. அதனால் சாஃபோ கோமர் காப்பியங்களை அதிகம் அறிந்தவராக அறியப்படுகிறார்.[12]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

 1. Herodotus and Claudius Aelianus have Scamandronymus. P. Oxy. 1800 fr. 1 has Scamander or Scamandronymus. The Suda offers a plethora of possibilities: Simon, Eumenus, Eerigyius, Ecrytus, Semus, Camon, Etarchus or Scamandronymus.
 2. Page, Sappho and Alcaeus, p. 225-6.
 3. (Campbell 1982, p. 5
 4. Holt Parker, "Sappho Schoolmistress பரணிடப்பட்டது 2019-08-15 at the வந்தவழி இயந்திரம்" (orig. pub. Transactions of the American Philological Association 123 (1993), pp. 309-51.
 5. Eva Stehle, "Sappho's Gaze: Fantasies of a Goddess and Young Man," p. 195 n. 10
 6. Judith Hallett, "Sappho and Her Social Context: Sense and Sensuality," pp. 126f
 7. Douglas Harper, (2001), "Lesbian" An Online Etymology History
 8. Douglas Harper, (2001), "Sapphic" An Online Etymology History
 9. Campbell 1982, p. 21
 10. Campbell, D. A. (ed.) (1982). Greek Lyric 1: Sappho and Alcaeus (Loeb Classical Library No. 142). Harvard University Press, Cambridge, Mass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-99157-5. {{cite book}}: |first= has generic name (help); Invalid |ref=harv (help)
 11. Page, D. L., Sappho and Alcaeus, Oxford, Clarendon Press, (1955).
 12. Rutherford, Richard. Classical Literature: A Concise History. Wiley-Blackwell, 1991. pg. 151.

Oxford Concise Companion to Classical Literature, M.C. Howatson and Ian Chilvers, Oxford University Press, 1993

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஃபோ&oldid=3671163" இலிருந்து மீள்விக்கப்பட்டது