சங்க காலத் தமிழர் போர் மரபுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்க காலத்தில் தமிழர் போர் மரபுகள் அறப்போர் முறையைச் சார்ந்ததே ஆகும். அகம், புறம் என வாழ்வை இரண்டாகப் பகுத்து புறம் என்று போர்முறைகளுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். அவர்களது போர்முறை நேர்மையாக இருந்தது. காலை சூரிய உதயத்தின் போது, முரசறைந்து போர் தொடங்குவர். சூரியன் மறையும் வரை மட்டுமே போர் நடைபெற்றது. பின் முரசறைந்து போரை நிறுத்துவர். எத்துனை நாள் போராயினும் இதுவே வழக்கானது. பகைவர் ஆயுதத்தை இழந்த போதும், போரில் தோற்றோடும் போதும் அவர் மேல் படை செலுத்தாத அறநெறி இருந்தது. அவர்களுக்கு தகுந்த வாய்ப்பளிக்க மறுநாள் போர் செய்தனர். ஓடி ஒளிந்தாரைக் கொல்லாமல் அவர்கள் வரும் வரை காத்திருந்து போர் புரியும் வீரம் இருந்தது. இறந்தோருக்கு இரங்கும் குணம் இருந்தது.

போர் அறிவிப்பு[தொகு]

ஒருமன்னன் பகைவரோடு போரிடக் கருதுவானாயின், கருதியவுடன் படை எடுக்க மாட்டான். தனது கருத்தைப் பகைவரது நாட்டார்க்குப் பறையறைந்து தெரியப் படுத்துவான். அப்போது

"ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடையீரும் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வரைப் பெறாதீரும் எம் அம்பு கடி விடுதும் நும்மரண் சேரும், என்று அறிவிக்கப்படும். இதனால் தமிழர் போர் தொடங்கும் போது அற நெறியுடன் தொடங்கினர் என அறியலாம்.
பலிபெறு நன்னகரும் பள்ளியிடனும்

ஒலிகெழு நான்மறையோர் இல்லும்- நலிவொரீஇப்
புல்லா; இரியப் பொருநர் முனை கெடுத்த
வில்லார்க்கு அருள் சுரந்தான் வேந்து.[1]
போர் நடக்கும் நாட்டில் மறவர்கள், பலியிடப்படும் கோவில்களுக்கும், துறவிகள் வாழும் பள்ளிகளுக்கும், வேதவொலி மிக்க அந்தணர்களின் இல்லங்களுக்கும் எந்த நலிவையும் செய்யவில்லை இவை போன்ற தக்கார் உறையும் இடங்களை நீக்கிப் பிற இடங்களில் போரிட்டுப் பகைவரை வென்றுள்ளனர். அவ்வாறு அறநெறிப்படி போரிட்ட மறவர்களுக்கே மன்னனும் சிறப்பு செய்தான். அதுவே அரசியல் அறமாகக் கருதப்பட்டது.

ஆநிரை கவர்தல்[தொகு]

போர் அறிவிப்பைச் செய்தும் உணர மாட்டாதவை பசுக்களாகும். எனவே பசுக்களைப் பாதுகாக்க விரும்பி ஆநிரைக் கவர்தல் நடைபெறும். அவ்வாறு கவர்ந்து திரும்பும்போது அப்பசுக்களுக்கு உணவினை வழங்கி, அவற்றிற்கு ஊறு செய்யாமல் ஓட்டிச் செல்வர்.

பூப்புனைதல்[தொகு]

மறவர் போர் தொடங்கும் போது நிகழ்வுக்கேற்ற அடையாளப் பூவைச் சூடுதல் வழக்கம். ஆநிரை கவரச் செல்வோர் வெட்சிப் பூவையும், ஆநிரையை மீட்கப் போவோர் கரந்தைப் பூவையும், பகைவர் நாட்டின் மீது படை எடுப்போர் வஞ்சிப் பூவையும், அரணைக் காப்போர் நொச்சிப் பூவையும், அரணத்தை முற்றுகை இடுவோர் உழிஞைப் பூவையும், ஒரு களத்தில் புக்குப் போரிடுவோர் இரு திறத்தாரும் தும்பைப் பூவையும், போரில் வெற்றி எய்தியோர் வாகைப் பூவையும் சூடுவர். இவ்வாறு பூச்சூடுங்கால் உண்மைப் பூவைச் சூடுவதோடு பொற்பூவைப் புனைதலும் உண்டு. அரசர் மறவர்க்கு பொற்பூ வழங்கிச் சிறப்பித்தலும் உண்டு. முருகன் கிரவுஞ்ச மலையை வெல்லுங்கால் காந்தட் பூச் சூடினான் என்றும், சிவபெருமான் முப்புரத்தை எரித்த காலத்தில் உழிஞைப் பூச்சூடினான் என்றும் கூறுவர்.

நாட்கோள்[தொகு]

படை எடுக்க விரும்பும் மன்னர் நன்னாளும் நன்முழுத்தமும் அறிந்து தொடங்குவர். அந்நேரத்தில் அரசனும் உடன் செல்ல முடியாதிருந்தால் தனக்கு மாறாகத் தன் குடையையாவது, வாளையாவது புறவீடு விடுவான். அது நாட்கோள் எனப்படும்.

நெடுமொழியும், வஞ்சினமும்[தொகு]

படைவீரர்களான மறவர்கள் தம் அரசர் முன்னும் பகை மறவர்களின் முன்னும் நெடுமொழி (தற்பெருமை) கூறிக் கொள்வர். தனது மாமன்னனுக்குத் தன்னுடைய மேம்பாட்டை வீரன் ஒருவன் தானே எடுத்து உரைப்பது நெடுமொழி கூறல் எனப்படும். மன்னர்கள் போர் தொடங்கும் முன் வஞ்சினம் மொழிவர். வஞ்சினம் என்பது 'இன்னது செய்வேன் நான். அவ்வாறு செய்யேனாயின் இன்னன் ஆகுக' என்று வலிய சினத்தில் கூறும் சொல் ஆகும்.

பகைநாட்டழிவு[தொகு]

வஞ்சியார் எனப்படும் வஞ்சி மாலை அணிந்த வீரர்கள் பகைவரது நாட்டு எல்லையுள் புகுந்து போருக்கு அடியிடுவர். ஊரை நெருப்பிட்டுக் கொளுத்துவர். ஊர் மனைகளில் கொள்ளையும் இடுவர். கரும்பும், நெல்லும் செழித்த வயல்களில் நெருப்பு மூட்டி அழிப்பர். நீர் தேக்கி வைத்த குளம் முதலியவற்றின் கரைகளை உடைத்துவிடுவர். உழிஞை மறவர் பகைவரது கோட்டைகளை இடித்துத் தரை மட்டமாக்கிக் கழுதை ஏர் கொண்டு உழுவர்; கவடு விதைப்பர். மற்றொரு வகையில் இரு திறத்து மன்னரும் தும்பைப் பூச்சூடி போருக்குச் செல்லுங்கால் போர் ஊருக்குள் நடைபெறாமல் குறிப்பிட்ட ஒரு போர்க்களத்தில் நடைபெறும். இரு திறத்துப் படைகளும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் இரு திறத்தாருக்குமே மிக்க அழிவு ஏற்படும்

பாசறை நிலை[தொகு]

வஞ்சி மறவர்களது படை பகைவர்நாட்டில் புகுந்து ஊர் எல்லையில் தங்கும். அரசன் தங்குவதற்குப் பசிய மூங்கிலால் அறை வகுப்பர். (பசுமை+அறை=பாசறை) அதனைச் சுற்றி மறவர்கள் தங்குவதற்குத் தழைகளை வெட்டி மேற்கூரையாக இட்டுச் சிறுசிறு அறைகள் வகுக்கப்படும். அங்கே ஊரில் வாழ்வது போன்ற எல்லா அமைப்புகளும் இருக்கும். எனவே அது புதிதாகக் கட்டப்பட்ட ஊரைப் போலவே காணப்படும். இது கட்டூர் எனப்படும். (கட்டு + ஊர் = கட்டூர், பாசறை) ஒரு பக்கம் யானைகள் முழங்கும்; ஒருபக்கம் ஆடல் பாடல் மகளிரின் கூத்து நடக்கும். பாசறையில் தங்கியுள்ள மன்னனுக்குப் பகைவர் திறையளிப்பர். பாசறை மன்னன் தம் மறவர்க்குப் பெருஞ்சோறளித்தலும் உண்டு. போர்க்களம் புகுந்த மறவர் நெடுநாள் பாசறையில் தங்கியிருந்து போரிட்டு வருவர். அப்போது அவர்களுக்கு வழங்கும் உணவு அளவுக்கு உட்பட்டே இருக்கும். அந்நாட்களில் ஒரு நாள் மன்னன் மறவர்க்கு உணர்ச்சி பெருகுதல் வேண்டிக் கறிவிரவிய பெருஞ்சோற்றுத்திரள்களை அளிப்பான், இதுவே பெருஞ்சோறு எனப்படும்.

மகள் மறுத்தல்[தொகு]

வஞ்சி மன்னன் பகை மன்னர்களிடம் மகள் வேண்டுவான். காஞ்சியார் மகளைக் கொடுக்க முடியாதென மறுத்துப் பேசுவர். உழிஞை மறவன் மகள் வேண்டுவான்; நொச்சி மன்னன் மகள் தர மறுப்பான். உழிஞை வேந்தன் நொச்சியானது மகளைக் கேட்பான்; நொச்சியான் மகள் தர மறுப்பான். இவ்வாறான காரணங்களுக்காகப் போர் நடைபெறலும் உண்டு.

உயிர் நீத்தல்[தொகு]

போரில் விழுப்புண்பட்ட மறவன், மீண்டும் உயிர் வாழ விரும்பாமல் தன் புண்ணைத் தானே வேலால் கிழித்துக் கொண்டு உயிர் நீப்பதும் உண்டு. போரில் தனது அரசன் இறந்ததைக் கண்டு தாமும் உடன் இறப்பதற்காகச் சில மறவர்கள் உயிர் விட்டலும் உண்டு. சில மறவர் செஞ்சோற்றுக் கடன் வாய்ப்பதற்காகத் தமதுயிரை அவியாக (பலியாக) இடுதலும் உண்டு.

முடி புனைதல்[தொகு]

பகைவரது மதிலை அழித்த மன்னன் தனது வாளைப் புண்ணிய நீராட்டுவான். முடிசூடித் தானும் புண்ணிய நீராடுவான். முடிபுனைந்த நாளை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடுவான்.

போர்ப்படை[தொகு]

போரிடுங்கால் யானை, குதிரை, தேர் என்பன கையாளப்படும். மறவர் இவற்றை இயக்கியும் இவற்றின் மீது அமர்ந்து கருவி கொண்டும் போரிடுவர். படையின் முதற்பகுதி தூசிப்படை அல்லது தார் எனப்படும். வில், அம்பு, வாள், குந்தம், ஆழி, வேல் முதலிய கருவிகள் போரில் பயன்படுத்தப்படும். கருவிகள் தம்மீது பாயாமல் பொருட்டுக் கிடுகு (கேடயம்) கையாளப்படும். கருவிகளில் வேல் என்பதே முதன்மையானது. போரிடுங்கால் துடி, முரசம், வளை, வயிர் போன்ற இசைக்கருவிகள் முழங்கும்.

உசாத்துணை[தொகு]

தா. ம. வெள்ளை வாரணம். புறப்பொருள் வெண்பாமாலை. திருப்பனந்தாள் மட வெளியீடு.1967

மேற்கோள்கள்[தொகு]

  1. புறப்பொருள் வெண்பாமாலை.துறை-பேராண் வஞ்சி