உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கரவிலாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கரவிலாசம் என்னும் நூல் சிதம்பரநாத கவி என்பவரால் எழுதப்பட்டது. சிதம்பரநாத கவியைச் சிதம்பரநாத பூபதி என்றும் கூறுவர். இவரது ஆசிரியர் நிரம்ப அழகிய தேசிகர். இந்த்த் தேசிகரின் ஆசாரியர் கமலை ஞானப்பிரகாசர். சிதம்பரநாத கவி தென்பாண்டி நாட்டுக்குச் சென்று ஈசான தேவரின் மாணவரானார், ஈசான தேசிகரின் மாணாக்கர் இருவர். ஒருவர் பிரமோத்தர காண்டம் பாடிய பாண்டிய அரசர் வரதுங்கராம பாண்டியர். மற்றொருவர் இந்த நூலின் ஆசிரியர். வரதுங்க பாண்டியரின் தூண்டுதலால் இந்த நூல் பாடப்பட்டது.

நூல் தோன்றிய காலம் 1575-1600.

புராண நூல்களை வடநூலார் விலாசம் என்றும் கூறுவர். சங்கரவிலாசத்தில் கூறப்படுவது சிவபெருமானாகிய சங்கரனின் புராணம்.

இந்த நூல் பாயிரம், பதிகம் என்னும் பகுதிகளோடு 23 அத்தியாயம் கொண்டது. பாடல் தொகை 1437. இந்த நூல் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி சிவனைப் பற்றிக் கூறும் புராணம். இரண்டாம் பகுதி திருநீறு முதலான சிவ சின்னங்களின் பெருமையைக் கூறுகிறது. மூன்றாம் பகிதி சிவ தலங்களின் பெருமையைக் கூறுகிறது.

நூல் சொல்லும் செய்திகளில் சில
  • கோதம கோதம முனிவன் கங்கையே கோதாவரி
  • பிருகு முனிவர் விட்டுணுவைச் சபித்தார். விட்டுணு சிவனை வழிபட்டுக் காமனைப் பெற்றார்.
  • ததீசி முனிவன் பிரமசரிதத்தையும், கோதமன் இல்லறத்தையும், குறுமுனிவன் என்னும் அகத்தியன் வானப்பிரதத்தையும், துருவசன் சந்நியாசத்தையும் கடைப்பிடித்துச் சிறப்பு எய்தினர்.
இந்த நூலின் பாடல்களில் ஒன்று
கத்திகைக் கருமென் கூந்தல் கன்னிய ரிடத்தில் ஆர்வம்
வைத்துமும் மலத்தின் ஆழ்ந்து மருளுறாது எளியேற்கு இன்ப
முத்தியை வழங்கும் சைவ முனிவரன் கமலை வாழும்
சத்திய ஞானி செம்பொன் சரணினைத் தலைமேல் கொள்வாம்.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரவிலாசம்&oldid=1327671" இலிருந்து மீள்விக்கப்பட்டது