கோயம்புத்தூர் மாவட்டக் காவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயம்புத்தூர் மாவட்டக் காவல் அல்லது கோவை மாவட்டக் காவல் என்பது தமிழ்நாடு காவல் துறையின் கோயம்புத்தூர் மாவட்டக் காவல் பிரிவு ஆகும். இது கோயம்புத்தூர் மாநகர் மற்றும் கோயம்புத்தூர் புறநகர் பகுதியான போத்தனுரைத் தவிர்த்து மாவட்டம் முழுமையிலும் தன் செயல் எல்லையைக் கொண்டுள்ளது. நேரடியாக இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான அல்லது இந்தியக் காவல் பணி தகுதி வழங்கப்பட்ட ஒரு காவல் கண்காணிப்பாளரால் (Superintendent of Police SP) நிருவகிக்கப்படுகிறது. காவல் கண்காணிப்பாளருக்குக் கீழே இரு கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளர்களும் (Additional Deputy Superintendent of Police ADSP) இரு துணைக் காவல் கண்காணிப்பாளர்களும் பணிபுரிகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டக் காவல் அலுவலகம் (DPO) கோயம்புத்தூர் மாநகரில் ஸ்டேட் பேங்க் சாலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் செயல்படுகிறது.

வால்பாறை, பெரியநாயக்கன் பாளையம், பேரூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் துணைக் காவல் கண்காணிப்பு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவ்வலுவலகங்களில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்(DSP) செயல்படுகிறார்கள். ஆய்வாளர்களாகப் பணி புரிந்து பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெற்றவர்களும், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டவர்களும் இப் பதவிகளை வகிக்கின்றனர்.

இந்தத் துணைக் காவல் கண்காணிப்பாளர்களுக்குக் கீழ் பல காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இக்காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், எழுத்தர்கள், காவலர்கள், ஓட்டுனர்கள் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

மாவட்டக் காவல் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களும் பணிபுரிகின்றனர். இவர்களுடைய பணிகளில், காவல் கண்காணிப்பாளரின் நேர்முக உதவியாளரில் தொடங்கி, உதவியாளர் வரை பல்வேறு பணி நிலைகள் உள்ளன. இப்பணியாளர்களில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாகத் தேர்வு பெற்றவர்கள், மற்றும் காவல் பணியில் இருக்கும் பொழுது உயிர் நீத்தோரின் வாரிசு அடிப்படையில் தகுந்த கல்வித்தகுதியுடன் பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோர் அடங்குவர்.

கோயம்புத்தூர் மாவட்டக் காவல் வலை தள முகவரி: http://coimbatoredistrictpolice.com/ பரணிடப்பட்டது 2011-02-07 at the வந்தவழி இயந்திரம்