கொடுங்கனவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Sleep of Reason Produces Monsters (Francisco de Goya, c.1797)
The Nightmare (Henry Fuseli, 1781)

கொடுங்கனவு (nightmare) என்பது மூளையில் வலிமையான உணர்வு பூர்வ விளைவை ஏற்படுத்துகின்ற ஒரு விரும்பத் தகாத நிகழ்வாகும். இதனால் பிரதானமாக பயமும் மற்றும் பதட்டம் விரக்தி கவலை என்பனவும் ஏற்படும். இக் கனவுகள் பொதுவாக மன உளைச்சல் அல்லது உடல் ரீதியான பயங்கரமானதாக இருக்கலாம். இவ்வாறு கனவினால் பாதிக்கப்பட்டோர் அவ்வப்போது தூக்கம் கலைந்து எழுந்து மீண்டும் சிறிது நேரத்திற்குத் தூங்க முடியாமல் தவிப்பார்கள்.

சரியான முறையில் உடலை வைத்து தூங்காமை, காய்ச்சல் மற்றும் பதட்டம், விரக்தி போன்ற மன அழுத்த காரணிகளால் இவ்வாறான கொடுங்கனவுகள் ஏற்படுகின்றன. தூங்குவதற்குச் சற்று முன்னதாக உணவு உட்கொள்வதனால் உடலின் வளர்சிதை அதிகரிப்பதோடு மூளையின் செயற்பாடும் அதிகரிக்கும். இது கொடுங்கனவு ஏற்படுவதற்கு பிரதான காரணமாக அமைகின்றது. மீண்டும் மீண்டும் இவ்வாறான கனவு ஏற்பட்டால் வைத்திய ஆலோசனையைப் பெறுவது சிறந்தது. ஏனெனில் கொடுங்கனவுகள் அன்றாட தூக்க வட்டத்தில் செல்வாக்குச் செலுத்தி தூக்கமின்மையை ஏற்படுத்தக் கூடும்.

நிகழ்வும் வகைகளும்[தொகு]

கனவுகள் பற்றிய ஆய்வுகளின் படி 75% வரை கனவுகள் மூலம் எதிர்மறையான உணர்வுகளே தோற்றுவிக்கப்படுகின்றன. எப்படியாகினும், மனிதர்கள் விரும்பத்தகாத கனவுகளையே நினைவில் வைத்திருப்பார்கள்.

கொடுங்கனவு என்பது ஒருவரைத் தூக்க வட்டத்திலிருந்து இடைநடுவே எழுப்பி பயம் போன்ற எதிர்மறை உணர்வை தோற்றுவிக்கின்ற ஒரு வகைக் கனவு எனவும் வரைவிலக்கணப்படுத்த முடியும். இவ்வாறான நிகழ்வுகள் சராசரியாக மாதம் ஒரு முறை ஏற்படும் என கூறப்படுகின்றது. பொதுவாக 5 வயதிற்கு குறைந்த பிள்ளைகளுக்கு கொடுங்கனவுகள் ஏற்படுவதில்லை. இளம் வயதினருக்கே இவ்வாறான கனவுகள் ஏற்படுகின்றன(25 சதவீதம் வரை வாரம் ஒரு முறை கொடுங்கனவுகளை காண்கின்றனர்).

காரணிகளுக்கான கோட்பாடுகள்[தொகு]

கொடுங்கனவுகள் ஏற்பட பல காரணிகள் இருப்பதாக விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சிறுவர்களை மையப்படுத்திய ஆய்வுகளின் படி கொடுங்கனவுகளுக்கும் அவர்களது வாழ்வில் ஏற்படுகின்ற மன அழுத்தத்திற்கும் தொடர்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக சிறுவர்களுக்கு பாடசாலை மற்றும் சமூக காரணிகளால் ஏற்படும் மனஅழுத்தம் காரணமாகவும் கொடுங்கனவுகள் ஏற்படுகின்றன. குடும்ப அங்கத்தவர் அல்லது நெருங்கிய நண்பர் ஒருவரின் மரணத்தை அனுபவித்த சிறுவர்களுக்கே மிக அதிகமாக கொடுங்கனவுகள் ஏற்படுகின்றன.

நித்திரையில் மூச்சுத்திணறல் ஏற்படுகின்ற நோயாளிகளை மையமாகக் கொண்டு கொடுங்கனவிற்கான காரணிகளை கண்டறிவதற்கான மற்றுமொரு ஆய்வு நிகழ்த்தப்பட்டது. நித்திரையில் ஏற்படும் மூச்சுத்திணறல் அல்லது சுவாசிக்க முடியாமையினால் தான் கொடுங்கனவுகள் ஏற்படுகின்றதா என நிரூபிப்பதற்காக இவ் ஆய்வு நிகழ்த்தப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் சுவாசத்திற்கு போதுமான ஒட்சிசன் இன்மையால் தான் கொடுங்கனவுகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கருதினார்கள். ஏவ்வாறாயினும் அவ் எடுகோள் தவறானது என நிரூபிக்கப்பட்டது. அதாவது தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுபவர்களை விட உடல் ஆரோக்கியமானவர்களே கொடுங்கனவினால் அதிகம் பாதிக்கப்படுவதாக அறியப்பட்டது.

ஏற்படக்கூடிய விளைவுகள்[தொகு]

கொடுங்கனவுகளினால் ஏற்படும் விளைவுகள் தூக்கத்தின் தரத்தில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது தொடர்பாக இளங்கலை மாணவர் குழு ஒன்றினால் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்கள் அசாதாரண தூக்க வடிவமைப்பைக் கொண்டிருந்தார்கள் என ஆய்வு கூறியது. கொடுங்கனவினால் பாதிக்கப்பட்டவர்களும் தூக்கமின்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் போலவே காணப்பட்டார்கள். அதாவது இவ்வாறான கனவினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சாதாரண மக்களைப் போன்று ஒய்வு கிடைப்பதில்லை. இவர்கள் தரமான தூக்க வடிவமைப்பைக் கொண்டிருப்பதில்லை. இரவு நேரங்களில் அடிக்கடி தூக்கம் கலைவதனாலும் மற்றும் மீண்டும் நித்திரைக்குத் திரும்புவதில் உள்ள பயம் காரணமாகவுமே தூக்க வடிவமைப்பு பாதிக்கப்படுவதாக கருதப்படுகின்றது.

சிகிச்சை[தொகு]

பிராய்ட் மற்றும் யுங் ஆகிய ஆய்வாளர்களிடையே கொடுங்கனவு பற்றி ஒரு பொதுவான கருத்து காணப்பட்டது. இருவரும் இது ஒரு தீர்வு காணப்படக்கூடிய பிரச்சினை என்றே கூறினார்கள்.

கலிடே(1987) சிகிச்சை வழிமுறைகளை நான்கு வகைப்படுத்தினார். மேற்படி வழிமுறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறைகளை இணைத்துப் பயன்படுத்துவதால் சிறந்த கிகிச்சையை வழங்க முடியும். (ஆங்கிலப் பதங்கள் தரப்பட்டுள்ளன.)

  • ஆனாலிட்டிக்( Analytic) மற்றும் கதாற்றிக்(cathartic) வழிமுறை.
  • ஸ்ரோறி லைன் ஆல்ரரேசன்( Story-line alteration) அணுகுமுறை.
  • பேஸ் அன்ட் கொன்கர்( Face-and-conquer) அணுகுமுறை.
  • உணர்ச்சி மற்றும் அது தொடர்பான நடத்தை பற்றிய(Desensitization and related behavioral) அணுகுமுறை.

ஒரு கற்பனையை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்கின்ற ஒரு வகை தொழில்நுட்பமானது Trauma and Dreams(1996) என்ற புத்தகத்தில் முதன் முதலாகக் குறிப்பிடப்பட்டது. நான்கு பகுதிகளைக் கொண்ட சிகிச்சை முறையானது க்ரக்கோ மற்றும் ஸட்ரா(2006) ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. முதல் இரு பகுதிகளும் கொடுங்கனவுகள் எவ்வாறு தூக்கமின்மையுடன் தொடர்புபட்டுள்ளன என்பதையும்; அது எவ்வாறு இடையூறான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதையும் மையப்படுத்தியதாக இருந்தது. மற்றைய இரு பகுதிகளும் மனிதனின் கற்பனைத் தொகுதியை(human imagery system) மையப்படுத்தியதாக அமைந்தது. முதலாவதாக நோயாளி ஒரு கொடுங்கனவினைத் தெரிவு செய்யுமாறு கூறப்பட்டது. ஆனால் அதிக அழுத்தம் ஏற்படுத்தும் கனவு தான் தெரிவு செய்யப்பட வேண்டியதில்லை. யோசப் நெய்தரிட்(Joseph Neidhardt) என்பவரால் உருவாக்கப்பட்ட விதிமுறைக்கு அமைய “உங்கள் விருப்பப்படி கொடுங்கனவினை மாற்றியமைக்குமாறு கூறப்பட்டது. இதன் விளைவாக ஒரு புதிய வேறுபட்ட கனவு உருவாக்கப்படும். இது மன அழுத்தக்காரணியில் இருந்து வேறுபட்டதாக கூட அமைய முடியும். இறுதியாக புதிய கனவினை மீளப் பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தப்படும். பொதுவாக ஒருவரின் தீர்க்கப்படாத பிரச்சினை காரணமாகவும் கொடுங்கனவு ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் நீண்டகால மன உளைச்சலும் இதற்குக் காரணமாக அமையலாம். எவ்வாறாயினும் மருந்து மூலமோ அல்லது உளவியல் சிகிச்சை மூலமோ இது குணப்படுத்தக் கூடிய ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுங்கனவு&oldid=2747605" இலிருந்து மீள்விக்கப்பட்டது