கைரேகை
கைரேகை' (Fingerprint) என்பது ஒரு மனித விரலின் மேல் தோலுக்கும் அதற்கு அடியில் கீழடுக்காகவுள்ள திசுக்களுக்கும் இடையில் உள்ள முகடுகளைக் குறிக்கிறது. மனிதர்களின் கைகள் புழங்கும் இடங்களில் விட்டுச் செல்லும் தடயம் எனவும் இது அறியப்படுகிறது. இவ்வாறு விட்டுச் செல்லப்பட்ட கைரேகை தடயங்களை மீட்டெடுப்பது தடய அறிவியலின் ஒரு முக்கியமான செயல் முறையாகும். ஒரு விரலின் மேலிருக்கும் ஈரப்பதம் மற்றும் எண்ணெய்ப் பசை காரணமாக கண்ணாடி அல்லது உலோகம் போன்ற மேற்பரப்புகளில் கைரேகைகள் உருவாகின்றன. தோலில் உள்ள உராய்வு முகடுகளின் உச்சிகளை காகிதம் போன்ற மென்மையான மேற்பரப்பிற்கு மாற்றப்படுவது கைரேகை பதிவெடுத்தல் எனப்படும். மை அல்லது பிற பொருட்களை பயன்படுத்தி முழுமையான கைரேகையையும் நம்மால் மீட்டெடுக்க முடியும். கைரேகை பதிவுகள் பொதுவாக விரல் மற்றும் கட்டைவிரலின் கடைசி இணைப்புத் திண்டின் பதிவுகளை கொண்டிருந்தாலே போதுமானது. இருப்பினும் கைரேகை அட்டைகளில் பொதுவாக விரல்களின் கீழ் மூட்டு பகுதிகளையும் சேர்த்து பதிவு செய்கிறார்கள்.
மனித கைரேகைகள் விரிவானவையாகும். கிட்டத்தட்ட இவை தனித்துவமானவையாகவும் உள்ளன. ஒரு நபரின் வாழ்க்கையில் நீடித்தவை, அவை மனித அடையாளத்தின் நீண்டகால குறிப்பான்களாக இருக்கப் பொருத்தமானவை மற்றும் மனிதன் இறக்கும்வரை மாற்றவே முடியாத அடையாளம் இதுவென்று கூறலாம். தங்கள் அடையாளத்தை மறைக்க விரும்பும் நபர்களை அடையாளம் காணவும் அல்லது இயலாமையால் ஆற்றலை முற்றிலும் இழந்திருக்கின்ற அல்லது இறந்த நபர்களை அடையாளம் காணவும், அல்லது ஓர் இயற்கை பேரழிவினால் பாதிக்கப்பட்டு அடையாளம் காண முடியாமல் தவிப்பவர்களை அடையாளம் காணவும் காவல்துறையினர் அல்லது பிற அதிகாரிகளால் கைரேகை பதிவு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உயிரியல்
[தொகு]எந்தவொரு ஒளிபுகா பொருளின் மேற்பரப்பிலும் ஒரு கைரேகை உருவாகிறது. மனித விரலில் உள்ள உராய்வு முகடுகளின் அழுத்தத்தின் தோற்றமே கைரேகையாகும் [1]. இரண்டு கைரேகைகளை பொருத்திப் பார்ப்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்றும் மிகவும் நம்பகமான உயிரியளவியல் நுட்பங்களில் ஒன்றாகும். கைரேகையை பொருத்திப் பார்த்தல் என்பது கைரேகையின் வெளிப்படையான அம்சங்களை மட்டுமே அடிப்படையாகக் கருதுகிறது [2].
ஓர் உராய்வு முகடு என்பது விரல்கள் மற்றும் கால்விரல்களின் மேல்தோலின் மீதுள்ள உயர்த்தப்பட்ட பகுதியாகும். இத்தகைய முகடுகளை மேற்தோல் முகடுகள் என்றும் அழைப்பார்கள். தோலின் மேற்பகுதியான மேல்தோலுக்கும் கீழ்பகுதியான அடித்தோலில் பற்றியிருக்கும் திசுக்கள் போன்றவற்றால் விளைகின்றன. தூண்டப்பட்ட அதிர்வுகளை பெருக்க இந்த மேல்தோல் முகடுகள் உதவுகின்றன, எடுத்துக்காட்டாக, விரல்கள் ஒரு சீரற்ற மேற்பரப்பில் துலங்கும்போது சிறந்த அமைப்புடன் உணர்வில் ஈடுபடும் உணர்ச்சி நரம்புகளுக்கு சமிக்ஞைகளை சிறப்பாக கடத்துகின்றன [3]. சொரசொரப்பான மேற்பரப்புகளைப் பிடிக்கவும் இந்த முகடுகள் உதவுகின்றன. இதேபோல ஈரமான நிலையில் மேற்பரப்புடன் நல்ல தொடர்பை மேம்படுத்தவும் இவை உதவுகின்றன [4].
வகைப்பாடுகள்
[தொகு]கணினிமயமாக்கலுக்கு முன்பு சேகரித்து வைக்கப்பட்டிருந்த பெரிய கைரேகை களஞ்சியத்தின் உள்ளடக்கத்திலிருந்தே மனிதர்களால் பொருத்திப் பயன்படுத்தப்பட்டன[5]. கைரேகைகளின் வகைப்பாடு அமைப்பு கைரேகைகளை அவற்றின் குறிப்பிடத்தக்க குணாதிசயங்களின்படி தொகுத்து வைக்கிறது. எனவே இவ்வகைப்பாட்டின் உதவியால் கைரேகைகளின் பெரிய தரவுத்தளத்தில் உள்ள ஒரு கைரேகையை தேர்ந்தெடுத்து பொருத்த உதவுகிறது. பொருந்த வேண்டிய வினவல் கைரேகையை ஏற்கனவே இருக்கும் தரவுத்தளத்தில் இடம்பெற்றுள்ள கைரேகைகளின் துணைக்குழுவுடன் ஒப்பிடலாம்[2]. தொடக்க கால வகைப்பாட்டு அமைப்புகள் பல அல்லது அனைத்து விரல்களிலும் வட்ட வடிவங்களின் இருப்பு அல்லது இல்லாமை உள்ளிட்ட பொதுவான முகடு வடிவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jude Hemanth & Valentina Emilia Balas, ed. (2018). Biologically Rationalized Computing Techniques For Image Processing Applications. Springer. pp. 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319613161.
- ↑ 2.0 2.1 Stan Z. Li (2009). Encyclopedia of Biometrics: I - Z Volume 2. Springer Science & Business Media. p. 439. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387730028.
- ↑ Roberta Kwok (29 January 2009). "Fake finger reveals the secrets of touch". Nature. http://www.nature.com/news/2009/090129/full/news.2009.68.html.
- ↑ "Fingerprint grip theory rejected". BBC. 12 June 2009. http://news.bbc.co.uk/2/hi/health/8093134.stm.
- ↑ Engert, Gerald J. (1964). "International Corner". Identification News 14 (1).