கெவின் கார்ட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெவின் கார்ட்டர்
பிறப்பு(1960-09-13)13 செப்டம்பர் 1960
ஜோகானஸ்பேர்க், தென் ஆபிரிக்கா
இறப்பு27 சூலை 1994(1994-07-27) (அகவை 33)
ஜோகானஸ்பேர்க், தென் ஆபிரிக்கா
பணிஒளிப்பட இதழாளர்

கெவின் கார்ட்டர் (Kevin Carter) (செப்டம்பர் 13, 1960 – சூலை 27, 1994) புலிட்சர் பரிசு பெற்ற தென்ஆப்பிரிக்க புகைப்படப்பத்திரிக்கையாளர் ஆவார்.[1][2][3]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

கெவின் கார்ட்டர் தென் ஆப்பிரிக்காவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய காலத்தில் ஆப்பிரிக்காவில் நிறப் பாகுபாட்டு அரசியல் மேலோங்கியிருந்தது. இளம் வயதிலேயே இவர் இந்த பாகுபாட்டை வெறுப்பவராக இருந்தார்.

கத்தோலிக்கப் பள்ளி ஒன்றில் உயர்நிலைப் பள்ளியை முடித்தபின்பு மருந்தாளுநர் (pharmacist) ஆகும் பொருட்டு மருந்தாளுமையியல் படித்தார். ஆனால் அந்தப் படிப்பைப் பாதியிலேயே விடும்படி ஆயிற்று. இதனால் இவர் இராணுவ சேவைக்கு ஆட்படுத்தப்பட்டார். தரைப்படையை (‌infantry) வெறுத்த இவர் தொழில்முறை வான்படையில் இணைந்தார். 1980 ஆம் ஆண்டில் ஓர் உணவு விடுதியில் கறுப்பினத்தைச் சேர்ந்த உணவு பரிமாறுபவர் ஒருவர் கொடுமையான முறையில் இராணுவ வீரர்களால் நடத்தப்படுவதைக் கண்டு அவருக்காகப் பரிந்து பேசினார். அதனால் மற்ற இராணுவ வீரர்கள் இவரை மிக மோசமாகத் தாக்கினர். பிறகு இவர் வானொலி வர்ணணையாளராக “டேவிட்” என்ற புதிய பெயரில் புதுவாழ்வைத் துவக்கினார். எதிர்பார்த்ததை விட இது மிகக் கடினமாக இருந்ததால் மனத்தளர்ச்சியுற்று தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். இறுதியாக ஒரு புகைப்படப் பத்திரிக்கையாளராக மாறினார்.

ஆரம்பகாலப் படைப்புகள்[தொகு]

1983 ஆம் ஆண்டில் வார இறுதி விளையாட்டுகளைப் புகைப்படம் எடுப்பவராகத் தொழிலில் இறங்கினார். மறு ஆண்டில் “ஜோகன்னஸ்பர்க் ஸ்டார்” எனும் பத்திரிக்கையில் இணைந்தார். கார்ட்டர் தான் முதன்முறையாக “கழுத்தணிக் கொலை” (necklacing) எனப்படும் கொடியதொரு கொலைமுறையைப் பத்திரிக்கையில் புகைப்படமாக வெளியிட்டார்.

புலிட்சர் விருது பெற்ற புகைப்படம்[தொகு]

போரினால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டில் 1993 ஆம் ஆண்டில் கார்ட்டர் ஒரு காட்சியைக் கண்டு நின்றார். உணவு வழங்கும் இடத்தை நோக்கி மெல்லிய முனகலுடன் உடல் நலிந்த பெண் குழந்தையொன்று வழியில் போராடிக் கொண்டிருந்தது. மேலும் நடக்க வலுவில்லாமல் குழந்தை ஓய்வெடுத்த வேளையில் கழுகு ஒன்று அவ்விடத்தில் வந்தமர்ந்தது. கழுகு தன் இறக்கையை விரிக்குமென கார்ட்டர் 20 நிமிடம் காத்திருந்தார். அது விரிக்கவில்லை. எனவே குழந்தையும் கழுகும் இடம்பெறும் வகையில் இக்கோரக்காட்சியைப் புகைப்படமாக எடுத்துவிட்டுக் கழுகை விரட்டினார். புகைப்படம்: சூடானியப் பெண்குழந்தையும் கழுகும் பரணிடப்பட்டது 2011-07-18 at the வந்தவழி இயந்திரம்

இப் புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் முதன் முறையாக 1993 ஆம் ஆண்டு மார்ச் 26 இல் வெளியானது. அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அக் குழந்தைக்கு என்னவாயிற்று என நாளிதழ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டனர். நாளிதழில் ஆசிரியர் குறிப்பாக 'குழந்தைக்கு நடந்து செல்லும் அளவுக்கு ஆற்றல் இருந்தது. ஆனால் அவளின் இறுதி முடிவு என்ன என்பது அறியப்படவில்லை' என்று வெளியிடப்பட்டது. இப்புகைப்படம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாயிற்று.

  • ஃபுளோரிடாவில் இருந்து வெளியான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டைம்ஸ் நாளிதழ் 'குழந்தையின் துன்பத்தைப் போக்காமல் அவள் படும் துயரத்தை சரியான கோணத்தில் படமெடுக்கும் பொருட்டு தன் புகைப்படக் கருவியின் லென்சைச் சரி செய்து கொண்டிருந்த கார்ட்டர் இன்னொரு கொலையாளியாகத் தான் இருக்க முடியும். காட்சியின் இன்னொரு கழுகு' என்று கடுமையாக எழுதியிருந்தது.

1994 ஆம் ஆண்டு மே 23ஆம் நாள் கார்ட்டருக்கு இப்புகைப்படத்திற்காக புகைப்படப்பத்திரிக்கைத் துறையின் உயரிய விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது.

தற்கொலை[தொகு]

1994 ஆம் ஆண்டு ஜீலை 27 ஆம் நாள் கார்ட்டர் தனது மகிழுந்தைத் தான் சிறு வயதில் விளையாடிய ஆற்றங்கரையருகில் கொண்டு நிறுத்தினார். மோட்டார் புகைபோக்கிச் செயல்முறையைப் பயன்படுத்திக் கார்பன் மோனாக்சைடு நச்சால் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். மரணத்தின் போது அவருக்கு வயது 33. தன் தற்கொலைக் குறிப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

  • 'நான் மனத்தளர்ச்சி அடைந்துள்ளேன். ...தொலைபேசி இல்லாமல்....வாடகைக்குப் பணம்; இல்லாமல்....குழந்தை ஆதரவுக்குப் பணம் இல்லாமல்.....கடனடைக்கப் பணம் இல்லாமல்....பணம்!!!..... நான் கொலைகளின் தெளிவான நினைவுகளாலும் பிணங்கள், கோபம் மற்றும் வலியினாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். பசியால் வாடும் மற்றும் காயம்பட்ட குழந்தைகளாலும்.... அதிட்டம் இருந்தால் நான் கென்னோடு சேரப்போகிறேன்.'

மேற்கோள்கள்[தொகு]

  1. McCabe, Eamonn (30 July 2014). "From the archive, 30 July 1994: Photojournalist Kevin Carter dies". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
  2. "First Draft by Tim Porter: Covering War in a Free Society". timporter.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2018.
  3. Karim, Ataul; Duffield, Mark; Jaspers, Susanne; Hendrie, Barbara (June 1996). "Operation Lifeline Sudan – A review". researchgate.net. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவின்_கார்ட்டர்&oldid=3893620" இலிருந்து மீள்விக்கப்பட்டது