கெயின்சியப் பொருளியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருளியலில், கெயின்சியப் பொருளியல் (Keynesian economics) அல்லது கெயின்சியக் கோட்பாடு (Keynesian theory) என்பது 20 ஆம் நூற்றாண்டின் பிரித்தானியப் பொருளியலாளர் ஜான் மேனார்ட் கெயின்சு என்பவரின் எண்ணக்கருக்களைத் தழுவி எழுந்த கொள்கை ஆகும். இக்கொள்கை, தனியார் துறையில், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்னும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இதனை, வட்டி வீதம், வரிவிதிப்பு, பொதுத் திட்டங்கள் போன்றவற்றை உகந்த முறையில் கையாள்வதன் மூலம் செய்யமுடியும் என்கிறது.

கெயின்சியப் பொருளியலின் அடிப்படைக் கோட்பாடுகள் முதன் முதலில், 1936 ஆம் ஆண்டில், வேலைவாய்ப்பின் பொதுக் கோட்பாடும், வட்டியும், பணமும் என்னும் நூலில் வெளியிடப்பட்டது. கெயின்சின் கோட்பாடு, சில தனியாட்களினதும் நிறுவனங்களினதும் நுண்மட்டச் செயற்பாடுகள், பருப்பொருளியல் கூட்டு விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்கிறது.