கூடலூர் பல்கண்ணனார்
Appearance
கூடலூர் பல்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று நற்றிணை 200 எண் கொண்ட பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் அமைந்துள்ளது.
நற்றிணைப் பாடல்
[தொகு]“கண்ணி கட்டிய கதிர அன்ன ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில் சாறு என நுவலும் முது வாய்க் குயவ ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப் பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி கை கவர் நரம்பின் பனுவல் பாணன் செய்த அல்லல் பல்குவ வை எயிற்று ஐது அகல் அல்குல் மகளிர் இவன் பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின் எனவே.” நற்றிணை - 200
வழக்கம்
[தொகு]திருவிழா - ஊரில் நடக்கப்போகும் திருவிழாவை மட்பாண்டம் செய்யும் குயவன் தெருத்தெருவாகச் சென்று அறிவிப்பான். அப்போது அவன் நொச்சிப் பூ மாலை அணிந்திருப்பான்.
செய்தி
[தொகு]அப்பாடல் தரும் செய்தி யாதெனில்,தலைவன் பரத்தையிடம் இருந்துவிட்டு இல்லம் மீளப் பாணனைத் தூது அனுப்புகிறான். பாணன் யாழை மீட்டிக்கொண்டு வந்து தலைவன் வரவைத் தலைவிக்குத் தெரிவிக்கிறான். அப்போது தலைவன் பரத்தையை அறியான் என்று பொய்யும் கூறுகிறான்.
தலைவி பாணனுக்குக் கேட்கும்படி ஊர்த் திருவிழாவை அறிவிக்கும் குயவனிடம் கூறுகிறாள். 'குயவ! நீ திருவிழாச் செய்தியைக் கூறும்போது பாணன் பொய்ப் புழுகுகிறான் என்னும் செய்தியையும் சேர்த்துச் சொல் என்கிறாள்.