குஸ்தியா மாவட்டம்
குஸ்தியா மாவட்டம் (Kushtia District) (வங்காள மொழி: কুষ্টিয়া জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் குல்னா கோட்டத்தில் அமைந்துள்ளது. வங்காளதேசத்தின் மேற்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் குஸ்தியா நகரம் ஆகும்.
மாவட்ட எல்லைகள்
[தொகு]குஸ்தியா மாவட்டத்தின் வடக்கில் பத்மா ஆறும், தெற்கில் ஜெனிதக் மாவட்டமும், கிழக்கில் ராஜ்பாரி மாவட்டமும், மேற்கில் மெகர்பூர் மாவட்டம், சௌதங்கா மாவட்டம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் நதியா மாவட்டம் மற்றும் முர்சிதாபாத் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளது.[1]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]1608.80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட குஸ்தியா மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக குஸ்தியா சதர், குமார்காளி, தௌலத்பூர், மிர்பூர், வெரமரா மற்றும் கோச்சா என ஆறு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் ஐந்து நகராட்சி மன்றங்களும், அறுபத்தி ஆறு கிராம ஒன்றியக் குழுக்களும், 658 வருவாய் கிராமங்களும், 973 கிராமங்களும் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 7000 மற்றும் தொலைபேசி குறியிடு எண் 071 ஆகும். இம்மாவட்டம் நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
பொருளாதாரம்
[தொகு]இம்மாவட்டத்தில் பத்மா ஆறு, காளிகங்கா ஆறு, குமார் ஆறு, வைரோப் ஆறு, கோரை ஆறு, மதவங்கா ஆறு, நவகங்கா ஆறு போன்ற ஆறுகள் பாய்வதால், இம்மாவட்டம் நீர் வளமும், மண் வளமும் மிக்கதாக உள்ளது. இங்கு நெல், சணல், கோதுமை, புகையிலை, எண்ணெய் வித்துக்கள், சோளம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், கரும்பு முதலியன பயிரிடப்படுகிறது.
தட்ப வெப்பம்
[தொகு]இம்மாவட்டத்தின் அதிகபட்ச வெப்பநில 37.8° செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 9.2° செல்சியஸ் ஆகவும் உள்ளது. ஆண்டு சராசரி மழை அளவு 1,467 மில்லி மீட்டர் ஆகும்.
மக்கள் தொகையியல்
[தொகு]1608.80 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 19,46,838 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 9,73,518 ஆகவும், பெண்கள் 9,73,320 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.11% ஆக உள்ளது. பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1,210 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 43.3% ஆக உள்ளது.[2]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.
கல்வி
[தொகு]வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.
கல்வி நிலையங்கள்
[தொகு]இம்மாவட்டத்தில் இசுலாமியப் பல்கலைக் கழகம், ஒரு மருத்துவக் கல்லூரி, ஒரு மருத்துவப் பள்ளி, குஸ்தியா தொழில்நுட்ப நிறுவன, நான்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், முப்பது தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள் 30, தனியார் உயர்நிலைப் பள்ளிகள் 173, தனியார் இளையோர் பள்ளிகள் 38, அரசு தொடக்கப் பள்ளிகள் 275, இசுலாமிய சமயக் கல்வி வழங்கும் மதராசாக்கள் 37, ஒரு சட்டக் கல்லூரி, மூன்று ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளது.