உள்ளடக்கத்துக்குச் செல்

குயினூரான் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குயினூரான் கோவில் உட்புறத் தோற்றம்

குயினூரான் அல்லது கொமிநூரான் என அழைக்கப்படும் காவல் முனி இலங்கையின் மலையகப் பெருந்தோட்டங்களிலுள்ள நாட்டார் தெய்வங்களுள் ஒன்றாகும். நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை நகரிலுள்ள கல்படை தேயிலைத் தோட்டத்தில் (Campion Estate) குயினூரான் கோவில் அமைந்துள்ளது.  

பின்புலம்

[தொகு]

நாட்டார் வழிபாடானது மலையகத் தமிழர் வாழ்வியலிலும் பண்பாட்டமைவிலும் ஓர் இன்றியமையாத அம்சமாக விளங்குகிறது. தென்னிந்திய விவசாயப் பின்னணியில் சுமந்து வந்த அம்சங்களை மலையகத் தமிழர் பெருந்தோட்டத் தொழிற் சூழலுக்கேற்ப மாற்றியமைத்தும் புதியது தழுவியும் தமக்கென உரிய தனித்துவமான குழுப்பண்புகளை வகுத்துள்ளனர்.[1] தெய்வ வழிபாட்டைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட ஒரு தோட்ட எல்லைக்குள் வாழும் மக்கள் குழுக்களாக ஒன்றிணைந்து தொழில் ரீதியிலும் தோட்டப் பாதுகாப்பு கருதியும், மரபு ரீதியான நிறுவனமயப்படுத்தப்பட்ட பெருந்தெய்வ வழிபாட்டிலும் மாறுபட்ட,[2] ஆகம நெறிகளுக்கு உட்படாத, கூட்டுவழிபாட்டு முறைகளை மலையகம் தோறும் பின்பற்றி வருகின்றனர். இத்தகைய நாட்டார் தெய்வ வழிபாடுகள் தோட்டத் தொழிலாளர்களின் சுதந்திரப் போக்கையும், ஆதிக்க எதிர்ப்பு முறைக்கு வடிகாலாக அமைவதையும், பாதுகாப்புத் தாகத்தையும் விளம்புவதாக அமைகின்றன.[3]

அமைவிடம்

[தொகு]

பெருந்தோட்ட வாழ்வியலோடு இணைந்த வழிபாட்டுத் தெய்வங்களின் அமைவிடங்கள் தோட்ட நுழைவாயில், தோட்ட எல்லைகள், சந்திகள், நீரூற்றுகள், மரத்தடி, மலையுச்சி, ஆற்றங்கரை போன்ற இடங்களிலேயே[4] பரவலாக அமைந்துள்ளன. குயினூரான் கோவில் கல்படை தேயிலைத் தோட்ட எல்லையிலுள்ள உயர்ந்த நிழல்தரும் பெருமரங்களின் அடியில் ஒரு திறந்த வெளிக் கோவிலின் வடிவமைப்போடு அமைந்துள்ளது.

கோவில் அமைப்பு

[தொகு]
குயினூரான் கோவில் முகப்பு

தொழிற்பளு மிகுந்த பெருந்தோட்ட வாழ்வில் தொழிலாளர்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் சென்று வழிபடக் கூடியதாக திறந்த வெளிக் கோவில்களையே[5] பெரும்பாலும் அமைத்துள்ளனர். குயினூரான் கோவில் மரத்தடியில் அமைக்கப்பட்ட ஒரு சிறிய வழிபாட்டிடமாக இருந்து 1998 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டது.

இக்கோவிலின் உட்புறத்தில் தெய்வச் சிலைகளையும் ஏனைய அடையாளச் சின்னங்களையும் கொண்ட ஒரு உட்பிரகார அமைப்பு காணப்படுகிறது. இடது புறத்தில் குயினூரானின் ஆளுயர உருவச் சிலையொன்றும் வலது புறத்தில் சிறிய உருவச் சிலையொன்றும் காணப்படுகின்றன. இச்சிலைகளைச் சூழ மலையக நாட்டார் தெய்வங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுவான அடையாளச் சின்னங்களான வேல், திரிசூலம், கல் போன்றனவும்,[6] நாக சிலையொன்றும், ஆலய மணிகளும் காணப்படுகின்றன. கோவிலைச் சுற்றி ஒரு மதிலும் கோவிலின் பின்புறத்தில் சமையல் செய்வதற்கான ஒரு கட்டிட அமைப்பும் உள்ளன.

தெய்வத்தின் உருவ அமைப்பு

[தொகு]

குயினூரான் ஒரு ஆண் காவல் தெய்வ உருவோடு சித்திரிக்கப்படுகிறார். மஞ்சள் நிற வேட்டியும் தலைப்பாகையும் அணிந்தபடி கழுத்தில் மாலைகளுடனும் கையில் அரிவாளுடனும் நின்றபடி காட்சி தருகிறார்.

வழிபாட்டுக் காரணம்

[தொகு]

பிரித்தானியர் ஆட்சியில் இலங்கையின் மத்திய மலைப் பிரதேசங்களில் தேயிலைத் தோட்டங்கள் பெரும் மலைக்காடுகளை அழித்தே உருவாக்கப்பட்டன. இவை கொடிய வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த வனப்பிரதேசங்களாக[7] இருந்தன. தமக்கு அன்னியமான நிலப்பரப்பில், அன்னியமான சூழ்நிலையில், தொழில் செய்யும் நிலைக்கு ஆளானவர்களுக்கு[8] பாதுகாப்பு என்பது ஒரு அடிப்படைப் பிரச்சினையாக இருந்துள்ளது. இப் பாதுகாப்புக்கான தாகம் மலையகப் பெருந்தோட்டங்களுக்கேயுரிய தனித்துவமான காவல் தெய்வங்களின் பரவலான உருவாக்கத்திற்கும் தொடர் இருப்பிற்கும் வழிகோலியது.

குயினூரான் ஒரு காவல் தெய்வமாவார். இவர் தோட்டத்துக்கும், தோட்டத் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி வருபவர் என்பது மக்கள் நம்பிக்கை. குயினூரானுக்கு நேர்த்தி வைத்தால் நடக்காத காரியங்கள், நீண்டகால வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும் என தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமன்றி வெளியூர் மக்களும் நம்பி வழிபடும் அளவுக்கு பிரசித்தி பெற்ற தெய்வமாக அவர் விளங்குகிறார்.

வழிபடு முறைமை

[தொகு]

இக்கோவிலில் மாதம் ஒருமுறை பௌர்ணமி தினத்தன்று மக்கள் கூடி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கோவிலின் வருடாந்தத் திருவிழா ஆனி மாதம் நடைபெறும்.

குயினூரான் முனிக்கு நேர்த்தி வைப்போரும் தூர இடங்களிலிருந்து கோவிலுக்கு வருகை தருவோரும் கோவிலின் பின்புறத்திலுள்ள சமையல் செய்யும் இடத்தில் படையலுக்காய் சமையல் செய்வது வழமையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. முரளிதரன், சு. 2002. வரவும் வாழ்வும்: மலையக நாட்டாரியல் சிந்தனைகள். கொட்டகலை: சாரல் வெளியீட்டகம். பக். 24.
  2. விஜயச்சந்திரன், எஸ். 1993. இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் குடும்ப, குல, தோட்டத் தொழில்நிலை வாழ்க்கையோடு இணைந்த குழுநிலை வழிபாட்டு முறைகள் - இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்துநிலையும், தொகுதி 1: பண்பாட்டுப் பின்புலம் (பதிப்பாசிரியர்: சிவத்தம்பி, கா). கொழும்பு: உதயம் நிறுவன வெளியீடு. பக். 69.
  3. முரளிதரன், சு. 2002. பக். 23.
  4. விஜயச்சந்திரன், எஸ். 1993. பக். 73.
  5. முரளிதரன், சு. 2002. பக். 23.
  6. முரளிதரன், சு. 2002. பக். 20.
  7. சாரல்நாடன். 2003. மலையகத் தமிழர் வரலாறு. கொட்டகலை: சாரல் வெளியீட்டகம். பக். 18.
  8. சாரல்நாடன். 2003. பக். 15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயினூரான்_கோவில்&oldid=3511072" இலிருந்து மீள்விக்கப்பட்டது