குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோயில்
புவியியல் ஆள்கூற்று:12°59′15″N 80°05′37″E / 12.987532°N 80.093513°E / 12.987532; 80.093513
பெயர்
பெயர்:குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோயில்
ஆங்கிலம்:Kundrathur Thiruooraga Perumal Temple
அமைவிடம்
ஊர்:குன்றத்தூர்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஊரகப் பெருமாள்
தாயார்:திருவிருந்தவல்லி
ஆகமம்:வைகானஸம்
சிறப்பு திருவிழாக்கள்:சுவாமி-தாயார் திருக்கல்யாணம், வைகுண்ட ஏகாதசி, கருட சேவை, ஆடிப்பூரம், நவராத்திரி, அனுமன் ஜெயந்தி
வரலாறு
தொன்மை:900 ஆண்டுகள்
அமைத்தவர்:குலோத்துங்க சோழன்
தொலைபேசி எண்:+91 44 2478 0436

திருஊரகப் பெருமாள் கோயில் என்ற வைணவத் திருக்கோயில், இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர் ஊரில் அமைந்துள்ளது. மூலவர்: திருஊரகப் பெருமாள். தாயார்: திருவிருந்தவல்லி.[1] மூலவர், மேற்கு நோக்கி, காஞ்சிபுரம் ஊரகப் பெருமாள் சன்னதியை நோக்கும் கருத்தில் கொண்டு எழுந்தருளியுள்ளார். தாயார் கிழக்கு நோக்கி, தனிசன்னதி கொண்டுள்ளார்.

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 48 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°59'15.1"N, 80°05'36.7"E (அதாவது, 12.987532°N, 80.093513°E) ஆகும்.

கோயில் வரலாறு[தொகு]

குலோத்துங்க சோழ மன்னன் குன்றத்தூரை உள்ளடக்கிய பகுதியை ஆண்டு வந்த சமயத்தில், அவனுக்கு தோஷம் ஒன்று உண்டானது. பல தலங்களில் பரிகாரம் செய்தும் பலனில்லை. ஒருநாள் திருமால் அவனது கனவில் முதியவர் வடிவில் தோன்றி, தான் காஞ்சிபுரத்தில் திருஊரகப் பெருமாளாக அருளுவதாகவும், தன்னை அவ்விடத்தில் வந்து வழிபட, தோஷநிவர்த்தி பெறும் என்றும் கூறவே, அதன்படி மன்னன் காஞ்சிபுரம் சென்று, திருஊரகம் என்னும் திவ்ய தேசத்தை அடைந்தான். அங்கு பெருமாள் ஆதிசேஷன் (என்ற நாகம்) வடிவில் இருந்ததைக் கண்டான். அதுவரையில் பெருமாளை முழு உருவத்துடன் பார்த்து வந்த மன்னனுக்குத் தான் சரியான கோயிலுக்குத் தான் வந்திருக்கிறோமா என்ற குழப்பம் ஏற்பட்டது. அன்றிரவு அங்கேயே தங்கி இருந்த மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள், தானே அத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் எழுந்தருளியிருப்பதாக உணர்த்தினார். அதன் பின்னர் ஊரகப் பெருமாளை தரிசித்து தோஷம் நீங்கப் பெற்றான். பெருமாளுக்கு நன்றிக் கடனாக குன்றத்தூரில் உள்ள இத்தலத்தில் கோயில் கட்டினான். பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதி வடிவில் அவருக்குக் காட்சி கொடுத்ததால், அதே வடிவிலேயே, பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சிலை வடித்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டான். மேலும், சுவாமிக்கு 'திருஊரகப் பெருமாள்' என்று பெயர் சூட்டினான்.[2]

மற்ற சன்னதிகள்[தொகு]

திருவிருந்தவல்லி தாயார் சன்னதி, கல்யாணராமர் (சீதை, லட்சுமணனும் கூடிய) சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, ஆண்டாள் சன்னதிகளும் இங்கு உள்ளன.

திருவிழாக்கள்[தொகு]

பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சுவாமி தாயார் திருக்கல்யாணம், வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு, புரட்டாசி 4-வது சனிக்கிழமை பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை, ஆடிப்பூரம், நவராத்திரி, அனுமன் ஜெயந்தி ஆகிய திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

கோயில் நேரங்கள்[தொகு]

பக்தர்களின் நலனுக்காக, காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலையில் 5.30 மணி முதல் இரவு 8.30 வரையிலும், தரிசனத்திற்காக கோயில் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ooraga Perumal-Kundrathur>Tamilnadu>Temple>திருஊரகப்பெருமாள்". Dinamalar.
  2. "Ooraga Perumal- Kundrathur>Tamilnadu Temple>திருஊரகப்பெருமாள்". Dinamalar.