குணசேகரன் ராஜசுந்தரம் இறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குணசேகரன் ராஜசுந்தரம் (ஆங்கிலம்: Gunasegaran Rajasundram); (பிறப்பு: 1977 - இறப்பு: 16 சூலை 2008) என்பவர் அரச மலேசிய காவல் துறைக் கைதியாக இருந்த போது காவல் துறை அறையில் மரணம் அடைந்தவர். போதைப்பொருள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டவர். கோலாலம்பூர், செந்தூல் காவல்துறை தலைமையகத்தில் (Sentul Police Headquarters) குணசேகரன் ராஜசுந்தரம் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.[1]

2008-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி மாலை 6.45 மணி அளவில் செந்தூல் போலீஸ் தலைமையகத்தில் அவரின் கட்டைவிரலின் ரேகை எடுக்கப் பட்டபோது அவர் சுருண்டு கீழே விழுந்தார். அதே நாளில் கோலாலம்பூர் மருத்துவமனையில் (Kuala Lumpur Hospital) இரவு 7.40 மணிக்கு இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.[2]

பொது[தொகு]

குணசேகரன் ராஜசுந்தரம் தொடர்பான இந்த நிகழ்வு, காவல்துறையின் செயல்முறைகள் பற்றிய விவாதத்தில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. ஏனெனில் இது மலேசியக் காவல் துறையினரின் பிரச்சினைகளில் ஒன்றாகவும் கருதப் படுகிறது.

அத்துடன் நடக்கும் தவறுகளை அம்பலப் படுத்துபவர்களின் பாதுகாப்பு; காவலின் போது மனித உரிமை மீறல்கள்; விசாரணை நடைமுறைகள்; காவல்துறையினரின் நடைமுறைகள் போன்ற கூறுகளும் உள்ளடக்கப்பட்டு உள்ளன.

சந்தேகத்தின் பேரில் கைது[தொகு]

குணசேகரன் கள் விற்பனை செய்யும் கடையில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். போதைப்பொருள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டார். செந்தூல் போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப் பட்டார்.

அவருடன் ரவி சுப்ரமணியம் (Ravi Subramaniam); சுரேஷ் எம். சுப்பையா (Suresh M Subbaiah); செல்வச் சந்திரன் கிருஷ்ணன் (Selvach Santhiran Krishnan); மற்றும் அறியப் படாத ஒரு மலாய்க்காரர் (unknown Malay male) ஆகிய நான்கு கைதிகள் இருந்தனர்.

கட்டை விரல் ரேகைப் பதிவு[தொகு]

2008 ஜூலை 16-ஆம் தேதி மாலை 6.45 மணியில் இருந்து 7.00 மணிக்குள் செந்தூல் போலீஸ் தலைமையகத்தில் அவரின் கட்டை விரல் ரேகைப் பதிவு செய்யப் பட்டது. அப்போது அவர் சுருண்டு தரையில் விழுந்தார். அதே அன்றைய நாளில் கோலாலம்பூர் மருத்துவமனையில் இரவு 7.40 மணிக்கு இறந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

போதைப்பொருள் பயன்பாட்டினால் குணசேகரனுக்கு மரணம் ஏற்பட்டு இருக்கலாம் என அவரின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகம் அளித்த புதைகுழி அனுமதியில் (burial permit), இறப்பிற்கான காரணம் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

வன்முறையினால் மரணம் நிகழ்ந்து இருக்கலாம்[தொகு]

இருப்பினும், இறந்தவரின் குடும்பம் அதை நம்ப மறுத்தது. போதைப் பொருளைத் தவறாகப் பயன்படுத்தினார் என்பதற்குப் பதிலாக காவல் துறையின் வன்முறையினால் மரணம் நிகழ்ந்து இருக்கலாம் என்று வாதிட்டது.

குணசேகரனின் மரணம் குறித்து குடும்பத்தினர் அறிந்ததும், குணசேகரன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதைப் பார்த்தவர்கள்; காவலில் வைக்கப்பட்டதைப் பார்த்தவர்கள்; நேரில் கண்ட சாட்சிகள்; போன்றவர்களிடம் குணசேகரனின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர்.

சுயநினைவு திரும்பாமல் உயிர் இழந்து இருக்கலாம்[தொகு]

குணசேகரன் கைது செய்யப்பட்ட போது, உடல் ரீதியாக தாக்கப் பட்டதாகத் தெரிய வந்தது. செந்தூல் காவல் நிலையத்தில், குணசேகரன் மேலும் தாக்குதலுக்கு உள்ளானார். இதனால் குணசேகரன் சுயநினைவு திரும்பாமல் உயிர் இழந்து இருக்கலாம் என்று குணசேகரனின் குடும்பத்தினர் வாதிட்டனர்.

2010 அக்டோபர் 25-ஆம் தேதி குணசேகரன் த/பெ ராஜசுந்தரம் இறந்ததற்கான காரணத்தை கண்டறியும் விசாரணை நடைபெற்றது. மரண விசாரணை நீதிமன்றத்தால் ஒரு வெளிப்படையான தீர்ப்பும் (open verdict) வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கியவர் சித்தி சகிரா பிந்தி முகதாருதீன் (Siti Shakirah binti Mohtarudin).

வெளிப்படையான தீர்ப்பு[தொகு]

வெளிப்படையான தீர்ப்பு என்பது, காரணத்தைக் கூறாமல் மரண விசாரணையைக் கண்டறிவதைக் குறிப்பதாகும். அதாவது, நடுவர் மன்றத்தால் குணசேகரனின் மரணம் சந்தேகத்திற்கு உரியதாகக் கருதப்பட்டது; ஆனால் வெளிப்படையான தீர்ப்பு எதுவும் வழங்க முடியாத நிலை என்று பொருள் படுகிறது.

மரண விசாரணை அதிகாரியின் ஆறு பக்க தீர்ப்பு அறிக்கையின்படி, சாட்சியங்களின் அடிப்படையில் குணசேகரன் எவ்வாறு இறந்தார் என்பதற்கு இரண்டு விதமான பதிப்புகள் இருந்தன.

ஆறு பக்க தீர்ப்பு[தொகு]

முதல் பதிப்பு: இறந்தவரின் கட்டைவிரல் ரேகையைப் போலீசார் பதியும் போது அவர் மயங்கி விழுந்தார்; போதைப் பொருள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார்.

இரண்டாவது பதிப்பு: நேரில் பார்த்த மூன்று சாட்சிகளின் சாட்சியங்களின்படி இறந்தவரைக் கைது செய்த காவல்துறை அதிகாரியால் இறந்தவர் தாக்கப்பட்டு இருக்கலாம்; அதுவே அவரின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம்.

மரண விசாரணை அதிகாரியின் கருத்தின்படி இரண்டு பதிப்புகளும் ஏற்றுக் கொள்ளப் படலாம். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை மறுக்க முடியாத முதன்மையான ஆதாரமாகும்.[3]

வெளிப்படையான தீர்ப்பு மறுபரிசீலனை[தொகு]

2010 நவம்பர் 3-ஆம் தேதி, குணசேகரனின் குடும்பத்தினர், குறிப்பாக அவரின் சகோதரி கங்கா கௌரி ராஜசுந்தரம், மரணம் தொடர்பான விசாரணையில் வழங்கப்பட்ட வெளிப்படையான தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார்.[4]

மொத்தம் 23 சாட்சிகள் சாட்சியம் அளித்து உள்ளனர். திடீர் மரணம் என காவல் துறையால் வகைப் படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் அந்த சாட்சியங்களின் உண்மை நிலையைக் குணசேகரனின் குடும்பத்தினரால் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

குணசேகரனின் மறைவுக்கான உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ள அவரின் குடும்பம் இன்னும் காத்து இருக்கிறது.

அரசு சாரா நிறுவனங்கள்[தொகு]

இந்த வழக்கு, மலேசிய வழக்கறிஞர்கள் சம்மேளனம் (The Malaysian Bar); சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு (World Organization against Torture) உள்ளிட்ட பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2010 அக்டோபர் 29-ஆம் தேதி, மலேசிய வழக்கறிஞர்கள் சம்மேளனம் தன் அறிக்கையில் குணசேகரனின் மரண விசாரணையின் செயல் திறனைப் பற்றி கேள்வி எழுப்பி உள்ளது.[5] 2009 ஆகஸ்ட் 17-ஆம் தேதி,

  • மக்களின் நாடாளுமன்றம் (The People's Parliament);
  • சுவாராம் (SUARAM);
  • சிம்மா இசுலா மலேசியா (Jemaah Islah Malaysia);
  • கொள்கை முன்முயற்சிகளுக்கான மையம் (Centre for Policy Initiatives);
  • ஊடக சுதந்திரத்திற்கான எழுத்தாளர்கள் கூட்டணி (Writers Alliance for Media Independence)

ஆகிய அமைப்புகள் மரணம் தொடர்பான விசாரணைச் செயல்பாட்டு நடைமுறை குறித்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Devaraj, Prema (28 May 2015). "No excuse for deaths in police custody - Three cases of deaths in police custody i.e. Cheah Chin Lee, Gunasegaran s/o Rajasundram and P Chandran". Aliran. பார்க்கப்பட்ட நாள் 26 February 2022.
  2. Thevarajan, R. (24 July 2012). "Deaths in custody: Police shouldn't probe police". Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 26 February 2022.
  3. "Malaysian Bar".
  4. "The Quest for Coronial Recommendation: A Sought-After Voice in Malaysian Death Inquest Verdicts - Ganga Gowri a/p Raja Sundram v Pendakwa Raya[30] and Chung Sui Keong (deceased).[31] Thus, it is believed that a coroner may be led to think that, he or she is strictly confined to inspect and discern the cause of death in his verdict, and should not do anything more than that, including providing recommendations". UMLR | University of Malaya Law Review (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 February 2022.
  5. "The Malaysian Bar is deeply concerned with the "open verdict" delivered by the coroner's court on 25 Oct 2010 in the inquest to determine the cause of Gunasegaran s/o Rajasundram's death. Coroner Siti Shakirah bt Mohtarudin found insufficient evidence to record a conclusion. The Malaysian Bar urges coroners to be bold in highlighting discrepancies and failings during inquests so that the truth of a tragedy will see the light of day". பார்க்கப்பட்ட நாள் 26 February 2022.