குடியுரிமை
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
குடியுரிமை (citizenship) என்பது, சிறப்பாக ஒரு நாட்டின் குடிமகனாகவோ குடிமகளாகவோ இருப்பதற்கான உரிமையைக் குறிக்கும். இவ்வுரிமையில் அந்நாட்டு அரசியலில் பங்குகொள்ளும் உரிமையும் அடங்கும். குடியுரிமை சமூக ஒப்பந்தக் கொள்கையின் அடிப்படையில் சில பொறுப்புகளையும், கடமைகளையும் குடிமக்களிடத்தில் எதிர்பார்க்கிறது. பல நாடுகளில் குடியுரிமை அற்றவர், அந்நாட்டுத் தேசிய இனத்தவராகக் கருதப்படுவது இல்லை என்பதுடன் அவர் ஒரு வெளியாராகவே கணிக்கப்படுகிறார். ஒரு நாட்டின் குடியுரிமை கொண்டிருப்பவர் அந்நாட்டைச் சாராத தேசிய இனத்தவராகவும் இருக்கக்கூடும். எடுத்துக் காட்டாக, அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர் அமெரிக்கக் குடிமகனாகக் கருதப்பட்டாலும், தேசிய இன அடிப்படையில் அவர் ஒரு இந்தியத் தேசிய இனத்தவராகக் கணிக்கப்படலாம். தேசிய இனம் என்பது, பிறந்த இடம், பெற்றோர், இனம் ஆகியவற்றில் தங்கியிருக்க, குடியுரிமை என்பது ஒரு சட்டம் சார்ந்த தொடர்பாகவே உள்ளது. குடியுரிமை இழக்கப்படவோ பெற்றுக் கொள்ளப்படவோ கூடியது. ஒரு நாட்டில் பிறத்தல், குறிப்பிட்ட நாட்டுக் குடியுரிமை கொண்ட ஒருவரை திருமணம் செய்தல் போன்றவை சில நாடுகளில் ஒருவருக்குக் குடியுரிமையைப் பெற்றுத்தரக்கூடும்.
குடிமகன்(Citizen) என்ற தகுதி, இறையான்மையுள்ள நாட்டின் அரசியல் சட்டத்தால், கடமைகளும் பொறுப்புகளும் ஒரு நபருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு நாட்டின் குடிமகன் என்ற தகுதி அடைந்தவர்களுக்கு அந்நாட்டில் குடியுரிமை, வாழ்வுரிமை, வாக்குரிமை, வேலை செய்யும் உரிமை, சொத்துக்கள் வாங்கும் உரிமை, தான் வாழும் நாட்டின் அரசிற்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிகாரம், வெளிநாடுகளிடருந்து தன் சொந்த நாட்டிற்கு திரும்பும் உரிமை போன்ற உரிமைகள் கிடைக்கும்.
மேலும் குடிமகன்களுக்கு தன் நாட்டின் சட்ட திட்டங்களை பின்பற்றுதல், வரி செலுத்துதல் மற்றும் கட்டாய இராணுவப் பயிற்சியில் ஈடுபடுதல் போன்ற பல கடமைகளும் பொறுப்புகள் உள்ளது.
குடிமகனுக்குரிய தகுதிகள்
[தொகு]பல்வேறு காரணங்களால் ஒரு நபர் ஒரு நாட்டின் குடிமகனுக்குரிய தகுதிகள் அடைகிறார். ஒரு நாட்டின் பெற்றோர்களுக்கு பிறப்பதாலும், வேறு நாட்டின் குடியுரிமையுள்ள ஆடவனையோ அல்லது பெண்னையோ மணப்பதாலும் அந்நாட்டின் குடிமகன் எனும் தகுதி கிடைக்கிறது.[1][2].
தேசிய குடியுரிமை
[தொகு]வரையறை
[தொகு]சிந்தனையாளர் ஸ்டார்க், “ஒரு தேசத்தின் அரசு, தனி நபர்கள் அடங்கிய ஒட்டுமொத்த மக்களின் முடிவுகளை, செயல்பாடுகளை, நலன்களை சட்ட ரீதியாக பாதுகாக்கிறது. இவ்வாறு அரசின் பாதுகாக்கிறது. இவ்வாறு அரசின் பாதுகாப்புக்கு உரியவர்கள், குடிமக்கள் ஆவர்என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு நாட்டின் அரசுடன் மக்களுக்கு தொடர்பு உள்ளது. பாதுகாப்பை எதிர்பார்பது மக்களின் உரிமை ஆகும். அதே நேரத்தில் நாட்டு அரசின் சட்ட திட்டங்களுக்கு பணிந்து நடக்க வேண்டும். சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற பென்விக் வரையறை செய்துள்ளார்.
தேசிய குடியுரிமை சட்ட வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவம்
[தொகு]அரசின் சட்டத்தால் தேசியக் குடியுரிமை விதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால், சட்ட விதிகள் ஒரே சீராக இல்லாத காரணத்தால் பல பிரச்சனைகள் எழுந்தன. இதனால் எந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றிருக்காத நிலை, இரட்டை குடியுரிமை போன்ற பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர 1930-ம் ஆண்டு ஹேக் நகரில் கூடிய மாநாட்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை பல நாடுகள் ஏற்றுக் கொண்டன. இதன் வாயிலாக எந்த தேசத்தின் குடியுரிமையையும் பெற்றிருக்காத நிலை போன்றவற்றிற்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது.1957-ம் ஆண்டு, திருமணமான பெண்களின் தேசியக் குடியுரிமை சார்ந்த உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இறுதியாக ஆனால் அதே நேரத்தில் முக்கியத்துவத்தில் சற்றும் குறையாத எந்த நாட்டின் தேசியக் குடியுரிமையையும் பெற்றிராத நிலைக்கு தீர்வு காணக் கூடிய உடன்படிக்கை 1961-ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சர்வதேச சட்டப்படி ஓர் அரசு தேசியக் குடியுரிமையை காப்பதற்காக ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தலையிடலாம். இப்படி தலையிடுவதை தேசியக் குடியுரிமையின் அடிப்படையில் நியாயப்படுத்தலாம்.
சிந்தனையாளர் ஸ்டார்க் வரையறை செய்துள்ளபடி சர்வதேச சட்டம், தேசியக் குடியுரிமை சார்ந்த கீழ்கண்ட அம்சங்களை கொண்டுள்ளது:
- ராஜதந்திரிகள் மற்றும் ராஜதந்திர சார்பாளர்களின் உரிமை பாதுகாப்புக்கு தேசியக் குடியுரிமை வழிவகை செய்துள்ளது.
- மற்ற நாடுகளுக்கு எதிராக குடிமக்கள் செய்யும் தவறுகளை அரசு தடுக்காவிட்டால் அல்லது மற்ற நாடுகளுக்கு எதிராக தீங்கு விளைவிக்கக் கூடிய செயல்களில் குடிமக்கள் ஈடுபடுவதை அரசு அனுமதித்தால், அப்படிப்பட்ட நபர்களின் நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அரசுதான் பொறுப்பாகும்.
- சாதாரணமாக தேசியக் குடிமக்களை ஏற்க அரசு மறுப்பதில்லை. தேசியக் குடியுரிமை என்று குறிப்பிடப்படுவது, ஓர் அரசிடம் காட்டப்படுகின்ற விசுவாசத்தையே.
- ஒரு தேசத்தின் குடிமக்கள், நாட்டுக்காக கட்டாயம் ராணுவப் பணி ஆற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படலாம்.
- தன் நாட்டின் குடியுரிமை பெற்றவரை குற்றப்பிரச்சனை காரணமாக வெளிநாட்டுக்கு திருப்பி அனுப்ப ஒரு தேசம் மறுக்கக் கூடும். இதுவும், தேசியக் குடியுரிமை சார்ந்த பிரச்சனைதான்.
- யுத்த காலத்தின் போது, பொதுவாக எதிரி யார் என்பது தேசியக் குடியுரிமையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
- குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் சுயதேசக் குடியுரிமை உடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அரசுக்கு உரிமை உள்ளது.
குடியுரிமைக்கும் இருப்பிடத்தில் வசிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு
[தொகு]குடியுரிமை என்பது தேசத்தின் அரசோடு கொண்டுள்ள பிணைப்பை சார்ந்த்தாகும். குறிப்பிட்ட இடத்தில் வசிப்பது என்பது வாழ்வதோடு மட்டுமே சம்பந்தப்பட்டதாகும். குடியுரிமை பெற்றவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. இருப்பிடத்தில் வசிப்பவர்களுக்கு இந்த அம்சங்கள் பொருந்தாது.
டி.பி. ஜோஷிக்கும், மத்திய பாரத அரசுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு நபரின் வசிப்பிடம் என்பது அவரது நிரந்தர இருப்பிடமாகும். பூர்வீக இருப்பிடம் என்பது ஒருவர் எந்த இடத்தில் பிறந்தாரோ அதை அடிப்படையாகக் கொண்டதாகும் என்று விளக்கியுள்ளது.
தேசிய இனத்துக்கும், குடியுரிமையும் ஒன்றுதான் என பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல. சர்வதேச சட்டப்படி தேசிய இனம் என்பதன் வாயிலாக, ஒரு நாட்டுக்கும் தனி நபருக்கும் இடையிலான சட்ட ரீதியான உறவை குறிப்பிடுகிறோம்.
குடியுரிமை என்பதன் வாயிலாக அரசின் சட்டத்திற்கும், தனி நபருக்கும் இடையிலான உறவுகளை குறிப்பிடுகிறோம். இதை வேறு வார்த்தையில் சொன்னால், சர்வதேச சட்ட ரீதியாக, தேசிய இனம் சார்ந்த உரிமை என்பது குடிமையுரிமை மற்றும் இயல்புரிமையை குறிப்பிடுகிறது.குடிமக்களின் உரிமை என்பது முழுக்க முழுக்க அரசின் சட்டம் சார்ந்த அம்சமாகும். ஒரு நாட்டின் குடிமக்கள் அனைவரும் தேசிய இனம் சார்ந்த உரிமையை பெற்றிருக்க முடியும் என்பது சாத்தியமானதே. ஆனால் தேசிய இனம் சார்ந்த அனைவரும் சம்மந்தப்பட்ட நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.
தேசியக் குடியுரிமை பெறுகின்ற வழிகள்
[தொகு]- 1. பிறப்பின் அடிப்படையில்
ஒரு நபர் எந்த நாட்டின் தேசிய உரிமை அவருக்கு கிடைக்கிறது. பிறப்பின் வாயிலாக பெற்றோரின் தேசிய உரிமை கிடைக்கின்ற சாத்தியம் உள்ளது.[3]
- 2. இயல்பின் அடிப்படையில்
இயல்பு நிலை வாயிலாக தேசிய உரிமைக் கிடைக்கக் கூடும். ஒருவர் வெளிநாடு ஒன்றில் நீண்ட காலம் வசித்து வந்தான், அந்த நாட்டின் குடியுரிமையை அவர் பெறுகிறார். இது இயல்பின் அடிப்படையிலான தேசியக் குடியுரிமை என்று சொல்லப்படுகிறது.
- நோட்டிபாம் வழக்கு
1881-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தவர், பிரடரிக் நோட்டிபாம். 1905-ம் ஆண்டு கவுதமாலாவுக்கு சென்றார். பிறப்பின் அடிப்படையில் அவர் ஜெர்மன் குடியுரிமை கொண்டவர். 1939 வரை அவர் ஜெர்மன் குடிமகனாக இருந்தார். 1905-ம் ஆண்டிலிருந்து கவுதமாலாவில் அவர் வங்கிப்பணி வர்த்தக நடவடிக்கை, தோட்டத்தொழில் ஆகியவற்றை கவனித்து வந்தார். ஆனால் ஜெர்மனியுடனான வர்த்தக உறவுகளை அவர் கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வந்தார். ஜெர்மனிக்கு அவர் பலமுறை சென்று வந்துள்ளார்.
1931-ம் ஆண்டுக்குப் பிறகு லீச்சென்தடீனுக்கு அவர் சென்றார். அங்குதான் அவரது சகோதரர் வாழ்ந்து வந்தார்.1938-ம் ஆண்டு அவர் கவுதமாலாவை விட்டு வெளியேறினார். லீச்சென்ஸ்டீனை அடைந்த பிறகு தனது வழக்குரைஞர் வாயிலாக லீச்சென்ஸ்டீனின் இயல்பார்ந்த குடியுரிமை கோரி அவர் விண்ணப்பம் அனுப்பினார்.அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1939-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந் தேதி இயல்பார்ந்த குடியுரிமை வழங்கப்பட்டது.
அதன்பிறகு அவர் லீச்சென்ஸ்டீனின் குடிமகனாகவே நடந்து கொண்டார். கவுதமாலா சம்பந்தப்பட்ட உறவை அவர் பொருட்படுத்தவில்லை. 1940-ம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் கவுதமாலாவிற்கு திரும்பினார். அவர் லீச்சென்ஸ்டீன் பாஸ்போர்ட்டு வைத்திருந்தார். கவுதமாலாவில் வெளிநாட்டவர் தொடர்பான பதிவேட்டில் அவர் லீச்சென்ஸ்டீன் குடியுரிமை பெற்றவர் என்று பதிவு செய்யப்பட்டது. போர் நடவடிக்கைகளையடுத்து 1943-ம் ஆண்டு அவரது சொத்து பறிமுதல் செய்யப்பட்டது. கவுதமாலா அரசால் அவர் கைது செய்யப்பட்டார். அவர் அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர் அமெரிக்காவுக்கு அனுப்பட்டார். அங்கு 2 ஆண்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 1944-ம் ஆண்டு கவுதமாலாவில் அவருக்கு எதிராக 57 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவை யாவும் அவரது சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்பது சம்பந்தப்பட்டவையே. அமெரிக்க சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அவர் கவுதமாலாவிற்கு திரும்பிச் செல்ல விரும்பினார். ஆனால் கவுதமாலாவிற்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 1946-ம் ஆண்டு அவர் லீச்சென்ஸ்டீனுக்கு சென்றார். அதன்பிறகு அவர் அங்கேயே வாழ்ந்து வந்தார். 1949-ம் ஆண்டு, கவுதமாலாவில் உள்ள அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 ஆண்டுகள் லீச்சென்ஸ்டீனில் அவர் வசித்ததால் அவருக்கு ஆதரவாக லீச்சென்ஸ்டீன் அரசு வாதிட்டது. சர்வதேச நீதிமன்றத்தில் 1911-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி லீச்சென்ஸ்டீன் அரசு வழக்கு தொடுத்தது. 1953-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி வெளியிடப்பட்ட தீர்ப்பு, நீதிமன்றத்தின் அதிகாரவரம்பு குறித்து கவுதமாலா தெரிவித்த பூர்வாங்க எதிர்ப்பை நிராகரித்துவிட்டது. இரண்டாவது அம்சம், 10 மில்லியன் சுவிஸ் ப்ராங்க் இழப்பீடு குறித்த கோரிக்கையை விசாரணைக்கு அனுமதிப்பது தொடர்பானதாகும். கவுதமாலாவிற்கு எதிராக லீச்சென்ஸ்டீன் இந்த பிரச்சனையில் பாதுகாப்புகோருவது சரியில்லை என்பதற்கு ஆதரவாக 11, எதிர்ப்பாக 3 என்ற அடிப்படையில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இவ்வாறு நோட்டிபாம் சார்பாக லீச்சென்ஸ்டீன் விடுத்த கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. மேலும் இயல்பார்ந்த தேசியக் குடியுரிமையை நோட்டிபாமுக்கு லீச்சென்ஸ்டீன் வழங்கியது குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. லீச்சென்ஸ்டீன் நோட்டிபாம் வாழ்ந்த காலம் தொடர்பான பிரச்சனையும் சர்வதேச நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. இயல்பார்ந்த தேசியக் குடியுரிமை வழங்கப்பட்டது சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு ஏற்புடையதுதானா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் நீதிமன்றம் சில முடிவுகளை எடுத்தது.நோட்டிபாம், கவுதமாலாவில் தான் 34 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அங்குதான் வர்த்தகமும் நடத்தியுள்ளார். 1943-ம் ஆண்டு போர் நடவடிக்கைகளையடுத்து அவர் வெளியேற்றப்பட்டார். அதுவரை கவுதமாலாதான் அவரது வர்த்தக கேந்திரமாக இருந்துள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது லீச்சென்ஸ்டீனில் அவர் குறுகிய காலமே வாழ்ந்துள்ளார். அங்கு அவருக்கு நிரந்தர இருப்பிடம் இல்லை.
குறிப்பாக இயல்பார்ந்த குடியுரிமை கோரி விண்ணப்பித்த போது அவருக்கு அங்கு நிரந்தர வசிப்பிடம் இல்லை. அதுமட்டுமல்லாமல் தனது வர்த்தக நடவடிக்கைகளை கவுதமாலாவில் இருந்து லீச்சென்ஸ்டீனுக்கு மாற்றுகின்ற எண்ணமும் அவருக்கு இல்லை. எனவே லீச்சென்ஸ்டீனின் குடியுரிமை கொண்டவர் நோட்டிபாம் என்பதை ஏற்க முடியாது என சர்வதேச நீதிமன்றம் திட்டவட்டமாக் கூறிவிட்டது.
இதன் அடிப்படையில் நோட்டிபாம் சார்பில் லீச்சென்ஸ்டீன் வழக்கு தொடர முடியாது என்பதையும் உறுதிபட உரைத்தது.
3. மீண்டும் பெறுதல்
[தொகு]ஏதேனும் சில காரணங்களால் சிலர் குடியுரிமையை இழக்கக் கூடும். சிலர் நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு, இழந்த குடியுரிமையை மீண்டும் பெற முடியும்.
4.தாழ்த்துதல்
[தொகு]ஒரு நாடு போரில் தோல்வியடையக் கூடும் அல்லது மற்றொரு நாட்டில் கைப்பற்றப்படக் கூடும். இதில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்தாலும் சம்பந்தப்பட்ட நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் வெற்றியடைந்த நாட்டின் அல்லது தேசத்தை கைப்பற்றிய நாட்டின் குடிமக்களாகிவிடுவார்கள்.
5. இணைப்பு
[தொகு]ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு உடைமையாகக் கூடும். இணைப்பின் வாயிலாக இது நிகழக் கூடும். இவ்வாறு நேர்ந்தால் எந்த நாட்டோடு குறிப்பிட்ட தேசம் சேருகிறதோ அந்த நாட்டின் குடியுரிமையை சேருகின்ற நாட்டு மக்கள் பெறுவார்கள்.
இவை தவிர வேறுசில வழிகளும் உள்ளன. ஒரு நபர் வேறொரு நாட்டின் பிரதான சேவையில் ஈடுபடுத்தப்பட்டால், அவர் அந்த நாட்டின் குடியுரிமையை பெறுவதும் சாத்தியமே.
தேசிய குடியுரிமை இழப்பு
[தொகு]1. விடுவிப்பு
[தொகு]சில நாட்டின் விதிமுறைகள், விடுவிப்பு காரணமாக தேசியக் குடியுரிமை இழப்பு நேரும் என்ற வரையறை செய்துள்ளன. இது தொடர்பாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டால் அவை பரிசீலிக்கப்படும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் குடியுரிமையிலிருந்து விடுவிக்கப்படுவார்.
2. பறிப்பு
[தொகு]சிலர் அரசின் முன் அனுமதியின்றி வேறு நாட்டில் வேலை தேடிக் கொண்டால், சம்பந்தப்பட்ட அரசு குடிமகனின் குடியுரிமையை பறித்துவிடும். இதன் வாயிலாக குடியுரிமை இழப்பு ஏற்படும்.
3. வெளிநாட்டில் நீண்டகாலம் தொடர்ந்து வசித்தல்
[தொகு]சொந்தநாட்டை விட்டு விட்டு வெளிநாட்டில் நீண்ட காலம் தொடர்ந்து வசித்தால், குடியுரிமை இழப்பு ஏற்படும். சில நாடுகளில் இப்படிப்பட்ட விதிமுறைகள் உள்ளன.
4. துறத்தல்
[தொகு]ஒரு நபர் தானாகவே முன்வந்து குடியுரிமையை துறக்கலாம். வேறொரு நாட்டின் குடியுரிமையை பெற்ற பிறகு பூர்வீக நாட்டின் குடியுரிமையை சிலர் துறந்துவிடுகிறார்கள். இரண்டு நாடுகளின் குடியுரிமைகளை ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியாது என சில நாடுகளில் விதிகள் உள்ளன. அப்படிப்பட்ட நிலையில் ஒரு நாட்டின் குடியுரிமையை துறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
5. பதலி
[தொகு]சில நாடுகளில் 'குடியுரிமை பதலி' நடைமுறையில் உள்ளது. ஒரு நாட்டின் குடியுரிமையை கைவிட்டு விட்டு மற்றொரு நாட்டின் குடியுரிமையை ஏற்பது குடியுரிமை பதலி ஆகும்.
இரட்டை குடியுரிமை மற்றும் பெண்களின் தேசிய குடியுரிமை
[தொகு]பல்வேறு நாடுகளில் உள்ள சட்ட முரண்பாடுகள் காரணமாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடியுரிமையை வைத்திருப்பது தொடர்பான பிரச்சினை எழுகிறது. உதாரணமாக ஒரு பெண் வேறொரு நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் சொந்த குடியுரிமையை வைத்து கொள்வதுடன், திருமணத்தின் அடிப்படையிலான குடியுரிமையையும் பெற முடியும்.
பிறப்பின் வாயிலாகவும் இரட்டைக் குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தை பிறப்பின் போது வெளிநாட்டில் வசித்து வந்தால், சொந்த நாட்டின் குடியுரிமையுடன், பிறந்த நாட்டின் குடியுரிமையும் அந்த குழந்தைக்கு கிடைக்கிறது. எந்த குடியுரிமை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுகின்ற உரிமை அந்த குழந்தைக்கு உண்டு.உரிய வயது வந்த பிறகு அந்த உரிமையை குழந்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். எந்த நாட்டின் குடியுரிமை வேண்டும் என்பதை முடிவு செய்ய உதவக் கூடிய வகையில் சர்வதேச உடன்படிக்கைகளும் உள்ளன.
போர் வாயிலாக எழும் பிரச்சனைகள் அடிப்படையில் இரட்டைக் குடியுரிமை விவகாரம் எழுகிறது. இதற்கு தீர்வு காண 1930-ம் ஆண்டு ஹேக் நகரில் கூடிய மாநாட்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 3 முதல் 6 வரையிலான சட்டப்பிரிவுகளில் திருமணமான பெண்களின் தேசியக் குடியுரிமை குறித்து கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளின் படி ஒரு பெண் வெளிநாட்டவரை மணந்து கொண்டால், கணவனின் தேசியக் குடியுரிமையை தானாகவே பெற்று விடுகிறார். திருமணமான பெண்களின் தேசியக் குடியுரிமை தொடர்பான உடன்படிக்கை, இந்த இரட்டை தேசிய குடியுரிமை தொடர்பான பிரச்சனையை தீர்ப்பதில் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.
1948-ம் ஆண்டு மனித உரிமைகள் தொடர்பாக பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச சாசனம், இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் கொண்டதாகும். 15-வது சட்டப்பிரிவு(1) ஒவ்வொருவருக்கும் தேசியக் குடியுரிமை உண்டு என்று கூறுகிறது. 15-வது சட்டப்பிரிவு(2) எவரது குடியுரிமையும் உரிய காரணமின்றி மாற்றவும் முடியாது. ஆனால் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் சார்ந்த 1996-ம் வருட சர்வதேச உடன்படிக்கையில் இந்த ஷரத்துக்கள் இடம் பெறவில்லை என்பது துரதிஷ்டவசமானதாகும்.
பெண்களுக்கு எதிரான பாரபட்சங்கள் ஒழிப்புத் தொடர்பாக 1979-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி ஜ.நா பொது சபை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் படி ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் தேசியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.இதேபோல குடியுரிமையை மாற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும்.வெளிநாட்டவரை மணந்தாலோ அல்லது குடியுரிமையை மாற்றினாலோ அவர்களுக்கு அந்த உரிமை எந்தவித பாரபட்சமும் இன்றி வழங்கப்படும்.அவர் மீது குடியுரிமையற்ற நிலையோ அல்லது கணவரின் தேசியக் குடியுரிமையோ கட்டாயம் ஏற்க வேண்டும் என்பது திணிக்கப்படமாட்டாது.
எந்த நாட்டின் குடியுரிமையும் அற்ற நிலை
[தொகு]சில வேளைகளில் சிலர் எந்த நாட்டின் குடியுரிமையும் அற்று தவிக்கின்ற அவலநிலை ஏற்படுகிறது. சர்வதேச சட்டப்படி இது கொழுந்துவிட்டு எரியும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாத ஒருவர் சர்வதேச சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் எதையும் அனுபவிக்கமுடியாது.
'ஸ்டோயிக்'குக்கும் பொது அறங்காவலருக்கும் இடையிலாட வழக்கு
[தொகு]1919-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட வெர்சைல்ஸ் உடன்படிக்கையின் படி ஜெர்மன் பிரஜைகளின் சொத்தை கைப்பற்ற நட்பு நாடுகளுக்கு முழு உரிமை கிடைத்தது. இதன்படி 'ஸ்டோயிக்' என்பவரின் உடைமைக்களும் பறிமுதல் செய்யப்பட்டடன. இதையடுத்து அவர் ஒரு வழக்கு தொடுத்தார். நான் ஜெர்மன் பிரஜை கிடையாது. எனவே வெர்சைல்ஸ் உடன்படிக்கை எனக்கு பொருந்தாது என்று தனது வழக்கில் குறிப்பிட்டார். இந்த வழக்கு தொடுக்கப்பட்ட போது ஸ்டோயிக் ஜெர்மனியில் தான் வசித்து வந்தார். அவர் 1872-ம் ஆண்டு பிரஷ்யாவில் பிறந்தார். 1895-ம் ஆண்டு பிரஷ்ய குடியுரிமையிலிருந்து அவர் விடுபட்டார். இந்த விடுபடல் ஜெர்மன் சட்டப்படியானதாகும். அவர் ஜெர்மன் குடியுரிமை கோரி ஒரு போதும் விண்ணப்பிக்கவில்லை. 1896-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் பெல்ஜியத்தை விட்டு வெளியேறினார். பின்னர் இங்கிலாந்துக்கு சென்றார். இங்கிலாந்தையே தனது நிரந்தர வசிப்பிடமாக்கிக் கொண்டார். ஆனால் இங்கிலாந்தில் இயல்பார்ந்த குடியுரிமையை அவர் பெறவில்லை.
1916-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். 1918-ம் ஆண்டு அவர் திருப்பி அனுப்பட்டார். ஸ்டோயிக் ஜெர்மன் குடிமகன் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒருவர் எந்த நாட்டின் குடிமகன் என்பதை தீர்மானிப்பதில் உள்ளாட்சி சார்ந்த விதிமுறைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இதன் அடிப்படையில் குடிமை தீர்மானிக்கப்படுகிறது என்று ரசல் ஜே திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதே விதிமுறை ஓப்பன்ஹிமுக்கும் - கேட்டமோலுக்கும் எதிரான வழக்கிலும் பின்பற்றப்பட்டது. 1930-ம் வருட ஹேக் உடன்படிக்கையின் 2-வது ஷரத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாத மக்கள் கடலில் கொடியற்று அலைந்து திரியும் கப்பல்களைப் போன்றவர்கள் என்று ஓப்பன்ஹிம் குறிப்பிடுள்ளார்.
உடன்படிக்கைகள்
[தொகு]எந்த நாட்டின் குடியுரிமையும் அற்ற நிலையைத் தணிப்பது தொடர்பான உடன்படிக்கை 1961. இந்த உடன்படிக்கை 1975-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி அமலுக்கு வந்தது. 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் நிலவரப்பபடி 36 நாடுகள் இந்த உடன்படிக்கைக்கு ஏற்பளிப்பு நல்கியுள்ளன. இதை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இந்த 36 நாடுகளில் இந்தியா இடம் பெறவில்லை.
இந்த உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள பிரதான ஷரத்துக்கள் வருமாறு ;
- எந்த நாட்டின் குடியுரிமையும் அற்றவருக்கு, அவர் எந்த நாட்டில் பிறந்தாரோ அந்த நாடு குடியுரிமையை வழங்க வேண்டும். பிறப்பின் அடிப்படையிலோ அல்லது சட்டத்தின் அடிப்படையிலோ இதை நல்க வேண்டும்.
- திருமணத்தின் அடிப்படையில், குழந்தை குடியுரிமை வழங்க வேண்டும்.
- ஒருவருக்கு எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லையெனில் சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிறப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட நாடு குடியுரிமை வழங்க வேண்டும். ஆனால் இதில் சில நிபந்தனைகளை கட்டாயம் விதிக்க வேண்டும்.
- குழந்தை ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பிறக்காவிட்டாலும் கூட குழந்தையின் தந்தையோ அல்லது தாயோ சம்பந்தப்பட்ட நாட்டைச் சார்ந்தவரக இருந்தால், குழந்தைக்கு அந்த தேசத்தின் குடியுரிமையை அளிக்கலாம். இதுவும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டதே. விண்ணப்பத்தின் அடிப்படையிலோ அல்லது சட்டத்தின் அடிப்படையிலோ இதை செய்ய வேண்டும்.
- திருமணத்தின் அடிப்படையிலோ அல்லது திருமண உறவு முடிவுக்கு வந்த தன் அடிப்படையிலோ குடியுரிமை இழப்பு ஏற்பட்டால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேச குடியுரிமை அளிக்கலாம்.
- ஒருவர் வெளிநாட்டுக்கு சென்று நீண்ட காலமாகிவிட்டது என்பதன் அடிப்படையிலோ அல்லது குடிமை பேரேட்டில் பெயரை பதிவு செய்யவில்லை என்ற அடிப்படையிலோ அல்லது வேறு காரணத்தைக் காட்டியோ ஒருவரின் குடியுரிமையை பறிக்கக்கூடாது.
- வெளிநாட்டில் இயல்பு குடியுரிமை அல்லது குடியுரிமை துறப்பு என்ற அடிப்படையில் ஏற்கனவே உள்ள குடியுரிமையை பறித்துவிடக்கூடாது.மேலே கூறிய நிகழ்வுகள் உறுதிப்படுத்தப்பட்டால்தான் குடியுரிமை இழப்பை அமலாக்க
வேண்டும்.
- ஏழாவது ஷரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது நீங்கலாக, ஒருவர் தனது குடியுரிமையை பொதுவாக இழப்பது கிடையாது. குடியுரிமை இழப்பிலிருந்து மக்களை காக்க வேண்டிய கடமை உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு உண்டு.
நடவடிக்கைகள்
[தொகு]ஒரு நாட்டின் குடியுரிமையையும் பெற்றிராத நிலைக்கு தீர்வுகாண கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
- தகுந்த காரணமின்றி ஒருவரின் தேசியக் குடியுரிமையை எந்த நாடும் பறிக்கக்கூடாது.
- எந்த நாட்டின் தேசியக் குடியுரிமையும் அற்றவர்களுக்கு தாராளமாக குடியுரிமை வழங்க சம்பந்தப்பட்ட அரசு முன்வர வேண்டும்.
- எந்த நாட்டின் குடியுரிமையும் அற்றவர்களுக்கு சர்வதேச உடன்படிக்கையின் வாயிலாக சில உரிமைகள் வழங்கப்படவேண்டும்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.chanrobles.com/article4.htm Article IV of the Philippine Constitution
- ↑ http://www.law.cornell.edu/uscode/text/8/chapter-12/subchapter-III/part-I 8 USC Part I - Nationality at Birth and Collective Naturalization8 USC Part I - Nationality at Birth and Collective Naturalization
- ↑ இந்தியக் குடியுரிமை கோரும் விண்ணப்பம்