கா. சூரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவப்பெரியார் கா. சூரன் (ஆகத்து 1, 1881 - 1956) இலங்கையின் வடக்கே வடமராட்சியில் அமைந்துள்ள தேவரையாளி சைவ வித்தியாசாலையின் நிறுவனராகவும் முதல்வராகவும் இருந்தவர். இவர் ஒரு சமூக முன்னோடியுமாவார். பதிகங்கள் பாடுவதிலும் கவியாற்றுவதிலும் வல்லவர். முற்போக்கு எண்ணம் கொண்டவர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

1881 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கரவெட்டியில் பிறந்தார். தந்தையார் வே. காத்தார், தாயார் வள்ளி ஆகியோருக்கு மூத்த புதல்வனாகப் பிறந்தார். கரவெட்டியில் இருந்த உவெசுலியன் மிசன் கிறித்தவப் பாடசாலையில் 5 ஆம் வகுப்புவரை கல்வி கற்றார். 1917 இல் வதிரியில் மாணிக்கம் என்பவரை மணஞ் செய்தார். பிள்ளைகள் மகள் சிவபாக்கியம், மகன் ஏகாம்பரம்.

சமூகப்பணிகள்[தொகு]

  • தேவரையாளி சைவவித்தியாசாலையின் நிறுவனர். தேவரையாளி ஆரம்பப் பாடசாலையை வதிரி ‘வண்ணஞ்சீமா’ என்ற காணியில் சிறு கொட்டிலில் தொடக்கி பின்னர் 1917 இல் தற்போது அமைந்திருக்கும் இடத்தில் பிரவேசம் செய்வித்தார். 1919 இல் பாடசாலை பதிவு செய்யப்பட்டது.
  • 1923 ஆம் ஆண்டில் வதிரியில் அண்ணமார் கோவிலில் நடைபெற்ற ஆடு பலியிடுதலை சைவப்பெரியார் சூரன் பலிபீடத்தில் தன் தலையை வைத்து ஆட்டை வெட்டுவதற்கு முன்னர் தன் தலையை வெட்டுங்கள் எனக் குரல் கொடுத்து அந்த ஊரில் பலியிடுதலை நிறுத்திவைத்தார்[1]. அதன் பின்னர் அந்த அண்ணமார் கோவில் பிள்ளையார் கோவிலாக மாறியது. இந்த நிகழ்வுகள் பற்றி பேராசிரியர் கா. சிவத்தம்பி பல இடங்களில் எழுதியிருக்கிறார்.

தொடர்பான பதிவுகள்[தொகு]

சைவப்பெரியார் சூரன் எழுதியவை[தொகு]

  • பராசக்தி படவிமர்சனம் – சுதந்திரன் பத்திரிகையில் பிரசுரமானது. இது எட்டுப்பக்கங்களைக் கொண்ட சிறிய பிரசுரமாகவும் 1953 இல் 15 சத விலையில் வெளிவந்தது. பராசக்தி படவிமர்சனம் என்ற பெயரில் அமரர் வல்லிபுரம் கந்தசாமி நினைவு வெளியீடாக 10.03.2004 இல் மீளவும் வெளியிடப்பட்டது.
  • மகாத்மா காந்தி மறைந்தபோது அவர் மீது பல இரங்கற்பாடல்களை எழுதியவர்.
  • சூரன் சுயசரிதை (பதிப்பாசிரியர்: ராஜ சிறீகாந்தன், 2004, பக்கம் 148.

ஏனையவர்கள் எழுதியவை[தொகு]

  • சூரனின் நினைவுதினத்தில் வெளியிடப்பட்ட ‘கல்வெட்டு’
  • கல்கி "இலங்கையில் ஒரு வாரம்" என்ற கட்டுரையின் 8 ஆம் அத்தியாயத்தில் சைவப்பெரியார் சூரன் பற்றியும் அப்போது இலங்கையில் நிலவிய தீண்டாமை பற்றியும் 08.09.1950 இல் வெளிவந்த கல்கி இதழில் எழுதியுள்ளார்.

நினைவுச்சின்னம்[தொகு]

  • சைவப்பெரியார் சூரன் சிலை தேவரையாளி இந்துக்கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வுருவச் சிலைக்கு 06.02.2004 இல் அப்போதைய அதிபர், மா. குட்டித்தம்பி அடிக்கல் நாட்டினார். வடமராட்சி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருந்த வி. அருளானந்தம் 14.06.2004 இல் சூரன்சிலையை திறந்து வைத்தார்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

  1. வதிரி பூவற்கரையான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._சூரன்&oldid=3050147" இலிருந்து மீள்விக்கப்பட்டது