காற்றுச்சுரங்கம்
காற்றுச்சுரங்கம் (Wind tunnel) என்பது காற்றியக்கவியல் ஆராய்ச்சிகளில் பயன்படும் கருவியாகும். இது திண்மப் பொருட்களைச் சுற்றி காற்றோட்டத்தை ஆராயப் பயன்படுகிறது. இது குழல்வடிவ காற்றோட்ட வழியையும் ஆய்வுப்பொருள் மையத்தில் நிறுவப்படும் அமைப்பையும் கொண்டிருக்கிறது.[1] ஆய்வுப்பொருளைச் சுற்றி காற்றோட்டத்தை ஏற்படுத்த ஒரு திறன்மிகுந்த சுழல்விசிறியைக் கொண்டிருக்க வேண்டும்; சுழல்விசிறி காற்றோட்டத்தை நேர்ப்படுத்த இதழ்களைக் கொண்டிருக்க வேண்டும். காற்றோட்டத்தால் ஆய்வுப்பொருள் மீது ஏற்படும் விசைகளை அளக்க, ஆய்வுப்பொருள் உணர்வுத்திறன் மிகுந்த தாங்கிகளால் தாங்கப்பட்டிருக்கும்; அல்லது, ஆய்வுப் பொருளைச் சுற்றிய காற்றோட்டத்தைக் கண்டறிய புகை அல்லது கண்டுணரக்கூடியப் பொருளேதேனும் செலுத்தப்படுகிறது. மிகப்பெரும் காற்றுச்சுரங்கங்களில் வானூர்தி அல்லது தானூர்திகளின் முழுமாதிரிகளே பயன்படுத்தப்படுகின்றன; ஆனால் இவற்றை இயக்குவதற்கு பெருமளவு பொருட்செலவு ஏற்படும், ஆதலால் இவற்றின் பல பணிகள் கணினி மாதிரியமைத்தல் மூலம் செய்யப்படுகின்றன. வாகனங்கள் மட்டுமன்றி கட்டிடம் மற்றும் பாலம் போன்ற பெரிய கட்டமைப்புகளைச் சுற்றிய காற்றோட்டத்தை ஆராயவும் காற்றுச்சுரங்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதன்முதலில் முழுதும் சூழப்பட்ட காற்றுச்சுரங்கங்கள் 1871-இல் கண்டறியப்பட்டன; அளவில் பெரிய காற்றுச்சுரங்கங்கள் இரண்டாம் உலகப்போரின்போது கட்டமைக்கப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ed.). Osprey. p. 281. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780850451634.