காருக்குறிச்சி அருணாசலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காருக்குறிச்சி அருணாசலம் (Karukurichi Arunachalam, 1921 - 8 ஏப்ரல் 1964)[1] தமிழகத்தைச் சேர்ந்த, புகழ்பெற்ற நாதசுவரக் கலைஞர்.

இசை வாழ்க்கை[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ள ஒரு ஊர் காருகுறிச்சி. இந்த ஊரில் அருணாசலம் 1921 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் பலவேசம்பிள்ளை. இந்த ஊரிலுள்ள கோயிலில் நாதசுவரம் வாசித்துக் கொண்டிருந்த இவர், சில திரைப்படப் பாடல்களுக்கும் நாதசுவர இசையைச் சிறப்பாகச் செய்து கொடுத்துப் புகழ் பெற்றிருக்கிறார். இவரின் நாதசுவரக் கச்சேரிகளுக்கு யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளையும், நீடாமங்கலம் சண்முக வடிவேலும் இணைந்து சிறப்புத் தவில் வாசித்துள்ளார்கள்[2].

இசைத்துறையில் நுழையக் காரணம்[தொகு]

காருகுறிச்சியிலிருந்த பெரும் பண்ணையாரின் இல்லத் திருமணத்திற்குக் கூறைநாடு நடேசபிள்ளை என்னும் புகழ்பெற்ற நாகசுர வித்வான் வந்திருந்தார். அவருடைய பணி மாப்பிள்ளை அழைப்பிற்கு நாகசுரம் இசைக்க வேண்டும். இதற்கிடையில், நெல்தானியம் அளந்து கொடுக்கும் பரம்பரை வேலையாகப் பலவேசத்திற்கு இருந்தபோதிலும், அவ்விழாவிற்கு மாலைகள் கட்டிக்கொடுக்கும் பணியில் இருந்தார். பெரும் பண்ணையார் நடேச பிள்ளைக்கு அளித்த மரியாதை பலவேசம் பிள்ளைக்கு கலைக்கு சமூகத்தில் உள்ள மரியாதையை உணர்த்தியது. தானும் கலைஞனாக வரவேண்டும் என்று எண்ணம் கொண்டு, சேரன்மகாதேவி சேர்ந்த ஒரு நாகசுரக் கலைஞரிடம் கற்கச்சென்றார். வயதும் சூழலும் ஒத்து வராததால், தனக்குப் பதிலாக தன் மகன், அருணாசலம் கற்கட்டும் என்று பலவேசம் முடிவு செய்தார். இந்தச் சூழல்தான் அருணாசலத்தை நாகசுரக் கலைஞராக மாற்றியது.[3]

நாகசுர ஆசிரியர்கள்[தொகு]

அருணாசலம், சுத்துமல்லி சுப்பையா கம்பர் என்பவரிடம் நாகசுரமும், களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் பயிலத் தொடங்கினார். கற்றபின் சிறிய சிறிய கச்சேரி வாய்ப்புகள் வந்தபோதும், கலைமேல் உள்ள விருப்பத்தால் இன்னும் அதிகம் கற்க விரும்பினார். தஞ்சாவூரில் பிறந்த நாகசுரக் கலைஞரிடம் கற்றால்தான் இன்னும் கலை மெருகேறும் என்று பலவேசம் நினைத்தார். அதன்படி திருவாவடுதுறை இராசரத்தினம் பிள்ளையிடம் தன் மகனை சீடனாக்க விரும்பினார்.

காருகுறிச்சியில் உள்ள கு. எ. பண்ணையில் நாகசுரம் வாசிக்க வந்திருந்தார் இராசரத்தினம் பிள்ளை. அவருடன் வாசிக்க வந்த “காக்காயி” நடராச சுந்தரத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, துணைக்கு யாராவது ஒரு சிறு பிள்ளை வேண்டும் என்றார் இராசரத்தினம் பிள்ளை. மணிசர்மா என்பவர் உடனே சென்று அருணாசலத்தை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். பையனின் திறமையைக் கண்ட ராசரத்தினம்பிள்ளை, தன்னுடனே இருக்கட்டும் என்று கூறினார். அன்று முதல், காருகுறிச்சி அருணாசலம், திருவாவடுதுறை ராசரத்தினம்பிள்ளையின் சீடரானார்.

நட்பு வட்டம்[தொகு]

அருணாசலத்திடம் மக்கள் நன்மதிப்பு தந்திருந்தனர். தம்பிக்கோட்டைப் பண்ணையார் பாலசுப்பிரமணிய தேவர் போன்றவர்கள் இவரிடம் பெரும் பற்று கொண்டிருந்தனர்.

சிறப்பு[தொகு]

சென்னைத் தமிழிசைச்சங்கத்தின் இசைவிழாவில் நடைபெற்ற காருகுறிச்சி அருணாசலத்தின் நாகசுரக் கச்சேரியை, வானொலி நிலையத்தார், வழக்கத்திற்கு மாறாக, நள்ளிரவு வரை ஒலிபரப்பினர்.

தவில் கலைஞர்கள்[தொகு]

காருகுறிச்சி அருணாசலத்தின் கச்சேரிக்குப் பலர் தவில் வாசித்திருந்தாலும், புகழ்பெற்ற சில தவில் கலைஞர்கள் உடன் வாசித்திருந்தனர். திருமுல்லைவாயில் முத்துவீர்ப்பிள்ளை, கும்பகோணம் தங்கவேல் பிள்ளை, நாச்சியார்கோவில் ராகவாப்பிள்ளை, வலங்கைமான் சண்முகச்சுந்தரம்பிள்ளை, வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி பிள்ளை, பெரும்பள்ளம் வெங்கடேசபிள்ளை, கரந்தை சண்முகப் பிள்ளை, நீடாமங்கலம் சண்முகப்பிள்ளை, யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்திபிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

திரைப்படப் பங்களிப்பு[தொகு]

அருணாசலம் தனது நாகசுர இசையைக் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவு செய்திருப்பதோடு, சில திரைப்படங்களிலும் வழங்கியுள்ளார். கொஞ்சும் சலங்கை என்னும் திரைப்படத்தில், எஸ். ஜானகி பாட, அருணாசலம் நாகசுரம் வாசித்துள்ள “சிங்காரவேலனே” என்ற பாடல் மிகவும் பிரபலமானதாகும்.

இறப்பு[தொகு]

காருக்குறிச்சி அருணாசலம் கோவில்பட்டியில் உள்ள தன் இல்லத்தில், 1964 ஏப்ரல் 8 அன்று காலமானார்.

சான்றாதாரம்[தொகு]

  • மங்கல இசை மன்னர்கள்-தஞ்சாவூர் பி.எம்.சுந்தரம்பிள்ளை - மெய்யப்பன் தமிழாய்வகம் - சிதம்பரம் -டிச. 2001

மேற்கோள்கள்[தொகு]

  1. சுந்தரம், பி. எம். (டிசம்பர் 2013). மங்கல இசை மன்னர்கள். சென்னை: முத்துசுந்தரி பிரசுரம். பக். 244. 
  2. 'காத்திருக்கிறேன்' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 102), தினமணி இசைவிழா மலர் (2008-2009)
  3. "காருக்குறிச்சியின் நாத சுகம்". தி இந்து (தமிழ்). 7 ஏப்ரல் 2016. 8 ஏப்ரல் 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

  1. solvanam.com › இயலிசை
  2. www.sramakrishnan.com/?p=652 பரணிடப்பட்டது 2016-04-11 at the வந்தவழி இயந்திரம்