காரணம் காரிய வரைபடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரணக் காரிய வரைபடம் (Cause and effect diagram):

காரணம் இல்லாமல் எந்த காரியமும் நடைபெறுவதில்லை. ஒரு சிக்கலுக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். ஆகவே, அந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டுமானால், அதன் காரணங்களை ஆராய்ந்து அவற்றை எல்லாம் படிப்படியாக நீக்க வேண்டும். காரணங்களை எல்லாம் பட்டியலிட்டு ஆராய்வதைக் காட்டிலும் ஒரு படமாக வரைந்து ஆராயும்போது அது எளிதாகவும் தீர்மானிப்பது விரைவாகவும் இருக்கும். ஒரு சிக்கலுக்கு என்னவெல்லாம் காரணங்களாக அமைகின்றன என்பதை வகைப்படுத்திக் காட்டும் படம்தான் காரணக் காரிய வரைபடம்.

சிக்கலுக்கான காரணங்களை முதன்மைக் காரணங்கள் என்றும் துணைக்காரணங்கள் என்றும் பிரித்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு பொருள் ஒதுக்கப்படுகிறது என்றால், அதற்கு அந்தப் பொருள் செய்யப் பயன்படும் உலோகம் ஒரு காரணமாக இருக்கலாம். செய்யும் முறை, செய்யும் பணியாளர்கள், செய்யும் பொறிகள் என்று பல முதன்மைக் காரணங்கள் இருக்கலாம். உலோகம் என்ற முதன்மைக் காரணத்தை எடுத்துக் கொண்டால், உலோகத்தின் குணங்கள் சீராக இல்லாமை, வலுவில்லாமை அல்லது கடினமாக இருப்பது என்று பல துணைக் காரணங்கள் உண்டு. இதையெல்லாம் படமாக வரைந்தால் படத்தில் காட்டியதுபோல காட்சியளிக்கும்.

இப்படம் ஒரு மீன்முள் போல காட்சியளிப்பதால் இதற்கு மீன்முள் வரைபடம் என்றும், டாக்டர் இஷிகாவா என்பவர் முதன் முதலில் இதை வரைந்து பயன்படுத்தியதால், ‘இஷிகாவா வரைபடம்’ என்றும் இது பெயர் பெறும்.

சிக்கலுக்கான காரணங்களை முதலில் எண்ணப்புயல் மூலம் கண்டுபிடிக்க வேண்டும். இந்தக் காரணங்களை முதன்மைக் காரணங்களாகவும், துணைக் காரணங்களாகவும் பகுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீனின் முதுகெலும்பு போன்ற ஒரு கோட்டை வரைந்து கொண்டு அதன் வலது முனையில் ஒரு கட்டத்தை வரைந்து அதில் சிக்கலை நோக்கிச் சாயந்திருக்குமாறு முதன்மைக் காரணங்களுக்கான கோடுகளை வரைந்துக் கொள்ள வேண்டும். அதன் முனைகளில் முதன்மைக் காரணத்தை ஒரு கட்டத்தில் எழுதிக் கொள்ள வேண்டும். அந்த முதன்மைக் காரணக் கோட்டுக்கு இரண்டு பக்கங்களில் கிளைக் காரணங்களையும் எழுத வேண்டும்.

காரணக் காரிய வரைபடத்தை வரைந்து முடித்த பின்னர் சிக்கலை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதற்கு 40 : 60 என்ற விதி பயன்படும்.

எந்த ஒரு சிக்கலையும் 40% தீர்க்க வேறொருவர் துணையில்லாமல் நம்மால் முடியும். மீதி 60% சிக்கலை மற்றவர்கள் அல்லது அவர்களுடைய துணையோடுதான் தீர்க்க வேண்டும்.

தரவட்டத்தில் மற்றவர்கள் துணையில்லாமல் நம்மால் தீர்க்கக் கூடியதை மட்டும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுக் கொள்கையாகும். எனவே, காரணக் காரிய வரைபடத்திலிருந்து நம்மால் தீர்க்க முடிந்த காரணங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டு சிக்கலைத் தீர்க்க வேண்டும்.

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

1.முழுத்தரமேலாண்மை-முனைவர் ப.அர.நக்கீரன்,பாவை வெளியீடு,சென்னை

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரணம்_காரிய_வரைபடம்&oldid=3002283" இலிருந்து மீள்விக்கப்பட்டது