கான்பிராங்க் பன்னாட்டு தொடர்வண்டி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கான்பிராங்க் பன்னாட்டு தொடர்வண்டி நிலையத்தின் தோற்றம்

கான்பிராங்க் பன்னாட்டு தொடர்வண்டி நிலையம் (எசுப்பானியம்: Estación Internacional de Canfranc) எசுப்பானிய பிரனீசில் கான்பிராங்க் சிற்றூரில் அமைந்துள்ள முன்னாள் பன்னாட்டு தொடர்வண்டி நிலையம் ஆகும். இது பிரான்சிய பாவு நிலையத்தையும் காங்பிராங்கையும் இணைத்த பிரனீசு மலைத்தொடரின் கீழான மலையூடு தொடர்வண்டிப் பாதையின் ஓர் முனையில் அமைந்துள்ளது. 1928இல் திறக்கப்பட்ட இந்தக் கட்டிடம் 240 மீற்றர் நீளமானது; 156 கதவுகளையும் 300 சன்னல்களையும் கொண்டதாயுள்ளது.

எசுப்பானிய தொடர்வண்டிகளும் பிரான்சிய தொடர்வண்டிகளும் வெவ்வேறு அகல இருப்புப்பாதைகளைக் கொண்டிருந்ததால் அனைத்து பயணிகளும் அவர்களது உடமைகளுடன் வண்டி மாற வேண்டியிருந்தது. பிரான்சிய இருப்புப்பாதை 1,435 millimetres (4.708 ft) அகலத்தையும் எசுப்பானிய இருப்புப்பாதை 1,672 millimetres (5.486 ft) அகலத்தையும் கொண்டிருந்தன. இதனால் தொடர்பயணம் தடைபட்டதால் பெரிய கட்டிடம் தேவைப்பட்டது.[1]

இந்த நிலையத்தின் தேவை திடீரென 1970இல் முடிவுக்கு வந்தது; மலைத்தொடரின் பிரெஞ்சு பகுதியில் இருந்த பாலத்தில் தொடர்வண்டி தடம் புரண்டதால் அந்தப் பாலம் பழுதடைந்தது. இதனை சீராக்கும் பணியைக் கைவிட பிரான்சு தீர்மானித்ததால் இந்த எல்லைத் தொடர்வண்டி இணைப்பு மூடப்பட்டது; பின்னர் திறக்கப்படவில்லை.

முதன்மை கட்டிடத்தின் மேற்கூரை மீளமைக்கப்பட்டாலும் சீரழிந்த நிலையில் உள்ளது; சுற்றிலும் வேலி இடப்பட்டுள்ளது. சூலை, ஆகத்து மாதங்களில் உள்ளூர் சுற்றுலாத் துறையினால் நடத்தப்படும் வழிகாட்டப்பட்ட சுற்றுலாக்களின்போது மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தப் பரந்த இடத்தில் பெரும் இழுபொறி பணிமனை, பிரெஞ்சு,எசுப்பானிய தொடர்வண்டிகளிடையே சரக்குகளை மாற்றிட இரு கொட்டகைகள், பல்வேறு பிற கட்டிடங்கள், இருப்புப்பாதைகளின் பெரிய தளவமைப்பு ஆகியன உள்ளன. பெரும்பாலான கட்டிடங்கள் சிதையாமல் உள்ளன.

இந்த தொடர்வண்டி நிலையத்திலிருந்து சரகோசாவிற்கு நாளும் இரண்டு பயணிகள் வண்டிகள் இயக்கப்படுகின்றன. அவ்வப்போது இங்கிருக்கும் தானியக்கிடங்கிற்கு சரக்கு வண்டிகளும் இயக்கப்படுகின்றன.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]