உள்ளடக்கத்துக்குச் செல்

கானு சன்யால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கானு சன்யால்

கானு சன்யால் (Kanu Sanyal) (1929[1] – March 23, 2010 ,[2]) இந்தியாவின் நக்சல்பாரி இயக்கத்தினை முன்னெடுத்துச் சென்ற முதன்மையான கம்யூனிசத் தலைவர்களில் ஒருவராவார்.1969ஆம் ஆண்டு இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) நிறுவிய தலைவர்களில் ஒருவருமாவார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

டார்ஜிலிங் மாவட்டத்தில் கார்சியாங்கில் பிறந்த சன்யால் தனது உடன்பிறந்தோர் ஐவரில் மிகவும் இளையவராவார்.அவரது தந்தை ஆனந்த் கோவிந்த் சன்யால் கார்சியாங் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். கார்சியாங்கின் எம்ஈ பள்ளியில் 1946ஆம் ஆண்டு மெட்ரிக் தேர்வில் தேர்ந்து ஜல்பைகுரி கல்லூரியில் இடைநிலைக் கல்விக்காக சேர்ந்தபோதும் பாதியிலேயே விலகினார். டார்ஜிலிங்கின் கலிம்போங் நீதிமன்றத்தில் உதவியாளராகச் சேர்ந்தார்.வங்காள முதலமைச்சர் விதான் சந்திர ராய் (பி.சி.ராய்) வருகையின்போது கருப்புக்கொடி காட்டியமையால் கைது செய்யப்பட்டார். சிறையில் சாரு மஜும்தாரை சந்தித்தார்.சிறையிலிருந்து வெளியேறியதும் முழுநேர உறுப்பினராக இந்திய பொதுவுடமைக் கட்சியில் இணைந்தார்.1964ஆம் ஆண்டு கட்சி பிளவுபட்டபோது மார்க்சியப் பிரிவில் இணைந்தார்.1969ஆம் ஆண்டு டார்ஜிலிங்கின் நக்சல்பாரி கிராமத்தில் வெடித்த ஆயுதப் புரட்சிக்குத் தலைமை தாங்கினார். தனது வாழ்வின் பதினான்கு ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்.மார்ச் 23,2010 அன்று சிலிகுரியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள செஃப்டுல்லாயோட் கிராமத்தில் உள்ள தமது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.[3]

அரசியல் இயக்கம்

[தொகு]

கொல்கத்தாவில் 1969ஆம் ஆண்டு விளாடிமிர் லெனினின் பிறந்தநாளன்று ஓர் பொதுக்கூட்டத்தில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) என்ற கட்சியை அறிவித்தார். இந்தியப் புரட்சிக்கு வித்திடும் டெராய் அறிக்கையைத் தயாரித்தார்.அவரது செல்வத் துறப்பு மற்றும் பாட்டாளிகளுடனான தோழமை மேற்கு வங்கத்தில் அவரது மதிப்பு உயரப் பெரிதும் காரணமாக அமைந்தது. அவரது அமைப்பினரின் செயல்பாடுகள் மிகவும் இரகசியமாக நடைபெற்றன. பிற பொதுவுடமைக் கட்சிகள் பின்பற்றிய அனுசீலன் வழிமுறைக்கு மாறாக இவரது இயக்கம் ஜூகாந்தர் வழிமுறையைப் பின்பற்றியது. இவ்வழிமுறைகளில் உடல்நலமேம்பாட்டு மன்றங்கள் இரகசியமாக இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றன. ஜூகாந்தர் ஆர்வலர்கள் சங்கேதமொழிகளைப் பரிமாறிக்கொண்டு அவ்வப்போது தீவிரவாதத் தாக்குதல்களை நடத்த முன்மொழிந்தார்.தனக்குத் துணையாக பொதுவுடமைக்கடசி ஆட்சியிலிருந்த அடுத்துள்ள சீனாவின் உதவியை நாடினார்.பல நேரங்களில் பொதுமேடைகளில் தனக்கு சீன அரசிடமிருந்து உதவி கிடைப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் அவை தார்மீகமானதா நிதி அல்லது போர்முறை வழியிலானதா என்ற தெளிவு இல்லை.[2] இந்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு கொள்கை சார்ந்த ஆதரவு மட்டுமே கிடைப்பதாக கூறிவந்துள்ளது.[2]

தனது நக்சலைட் புரட்சி தோல்வியடைந்த நிலையில் சன்யால் தலைமறைவானார்.அவரது தோழர் சாரு மசும்தார்|சாரு மசும்தாரின் மறைவிற்குப் பின்னர் நக்சலேட் இயக்கம் பிளவுபடத் துவங்கியது. சன்யால் தனது தீவிரவாதப் போக்கை கைவிட்டு மக்களாட்சி முறையில் தமது புரட்சிகளை முன்னெடுத்துச் செல்ல விரும்பினார்.[4]

கைதும் சிறைவாழ்வும்

[தொகு]

ஆகத்து 1970ஆம் ஆண்டு அவர் கண்டுபிடிக்கப்பட்டு கைதானார். அவரது கைது குறித்த செய்தி பரவியதும் மாநிலமெங்கும் வன்முறை வெடித்தது.[5] பார்வதிபுரம் நக்சலைட் சதி வழக்கில் குற்றவாளியாக ஆந்திராவின் விசாகப்பட்டினம் நகரில் ஏழாண்டுகள் சிறையில் இருந்தார். மேற்க வங்கத்தில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமைக் கட்சி முதலமைச்சர் ஜோதி பாசுவின் முயற்சியால் 1977ஆம் ஆண்டு விடுதலையானார்.[6] விடுதலையானபோது, தனது வன்முறை வழிகளை கைவிட்டதாக பொது அறிவிப்புச் செய்தார்.[7] தமது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து பொதுவுடமை புரட்சியாளர்களின் அமைப்புக்குழுவினை நிறுவினார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nandigram can excel Naxalbari, Statesman, 31 March 2007
  2. 2.0 2.1 2.2 [1]
  3. [2]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-10-17. பார்க்கப்பட்ட நாள் 2010-05-13.
  5. "Naxalites on Hard Times". Archived from the original on 2008-02-19. பார்க்கப்பட்ட நாள் 2010-05-13.
  6. "Bengal Left Front Govt Steps Into 28th Year". Archived from the original on 2012-03-01. பார்க்கப்பட்ட நாள் 2010-05-13.
  7. "The road from Naxalbari". Archived from the original on 2006-10-17. பார்க்கப்பட்ட நாள் 2010-05-13.
  8. naxalism today

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானு_சன்யால்&oldid=3549522" இலிருந்து மீள்விக்கப்பட்டது