காந்தளி திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காந்தளி திருவிழா (Kandali Festival) என்பது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தைச் சேர்ந்த ருங் பழங்குடியினரால் நடத்தப்படும் திருவிழா ஆகும்.[1] பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் காந்தளி செடியில் பூக்கும் நாளோடு இத்திருவிழா நடைபெறுகிறது. இது ஆகத்து மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் சௌண்டாசு பள்ளத்தாக்கில் நடைபெறும். 1841-இல் லடாக்கிலிருந்து இந்தப் பகுதியைத் தாக்கிய ஜோராவர் சிங்கின் தரைப்படையின் தோல்வியை இது கொண்டாடுகிறது.[2]

வரலாறு[தொகு]

காளி ஆற்றின் வழியாகத் திரும்பும் வீரர்கள், வழியில் உள்ள கிராமங்களைக் கொள்ளையடித்து, காந்தளி செடிகளுக்குள் ஒளிந்துகொண்டதாக நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன. பெண்கள் இவர்களை எதிர்த்து, காந்தளி செடிகளை அழித்தார்கள். இத்திருவிழாவின் போது மீண்டும் இச்செயலைச் செய்து நிகழ்வினை நினைவு கூறுகின்றனர்.

மற்றொரு கதை, கன்-டலி எனப்படும் புதரிலிருந்து வேரின் பசையினைக் காயத்தின் மீது தடவிய சிறுவன் இறந்ததைப் பற்றிக் கூறுகிறது. கோபமடைந்த இவரது தாயார் இந்தப் புதரைச் சபித்தார். எனவே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கன்-டலி செடியின் வேரைப் பிடுங்கி அழிக்குமாறு ரங் பெண்களுக்கு உத்தரவிட்டார்.

கொண்டாட்டம்[தொகு]

இந்த புனிதமான திருவிழா நடைபெறும் நாளன்று, அதிகாலை சடங்குகளுடன் தொடங்குகிறது. குடும்பத்தினர் அனைவரும் அதிகாலையில் எழுந்து பார்லி மற்றும் ரவை மாவு கலவையின் உதவியுடன் பிரார்த்தனை செய்ய சிவலிங்கத்தை தயார் செய்கிறார்கள். இவர்கள் தங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் மலர்களால் அலங்கரிக்கின்றனர். வெற்றிக் குரல்கள் எழுப்பப்படுகின்றன. மக்கள் எப்போதும் தங்கள் எதிரிகளை வென்றெடுக்க விரும்புவதற்காக அரிசி தானியங்களை காற்றில் வீசுகிறார்கள். அரிசி தானியங்களை எறிவது சர்வவல்லமையுள்ளவருக்கு மரியாதையை கொடுப்பதைக் குறிக்கிறது. இவர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்து, பூசைக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்து சுவைமிகு சமூக விருந்தினை உட்கொள்கின்றனர்.

இவர்கள் வெள்ளை துணியால் புனித மரத்தினைச் சுற்றிக் கட்டி, புனித நீர், தானியங்கள் மற்றும் பிற சடங்கு பொருட்களை வழங்குவதன் மூலம் சடங்குகளை நிறைவேற்றுகின்றனர். குதிரைப்படையின் பின் பெண்கள் ஆயுதங்களுடன் அணிவகுப்பு நடத்துகிறார்கள். அதேசமயம் ஆண்கள் வாள்களுடன் ஆயுதம் ஏந்தியவர்களாக அணிவகிக்கின்றனர். இதைத் தொடர்ந்து குழந்தைகள் அணிவகுப்பு பாடல்களைப் பாடி நடனம் மற்றும் இசையுடன் செல்வார்கள். காளி நதிக்கும் தௌலி நதிக்கும் இடையில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் பாடல் மற்றும் நடனத்தின் கொண்டாட்டம் களைகட்டி மலைகளில் இவர்களின் ஆராவாரம் எதிரொலிக்கிறது. ஆற்றல் மிக்க குதிரைப்படை காந்தளிச் செடி நிறைந்தப் பகுதியினை அடையும் போது பாடல்கள் மெல்லிசையாக மாறி போர்க்குரல்களாகவும் போர் முழக்கங்களாகவும் மாறுகின்றன.

வெற்றி நடனம், காந்தளி புதர்களை வேரோடு பிடுங்கியதும், சுவையான உணவுடன் திருவிழா நிறைவடைகிறது. நாடு முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற கிராமங்களிலிருந்து வரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து இந்த திருவிழாவை மிகவும் அற்புதமான பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை உயிர்ப்பிக்கும் வகையில் கொண்டாடுகின்றனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தளி_திருவிழா&oldid=3662255" இலிருந்து மீள்விக்கப்பட்டது