கள்ளிகுளம் அதிசய பனிமாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கள்ளிகுளம் அதிசய பனிமாதா தேவாலயம், திருநெல்வேலி மாவட்டம், கள்ளிகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இயேசுவின் தாய், புனித கன்னி மரியாவின் நினைவாக ஒப்புக் கொடுக்கப்பட்ட இந்த தேவலயம், இந்திய கிறிஸ்தவத் திருயாத்திரை தலங்களுள் ஒன்றாகும். சமீப காலங்களில், இத்திருத்தலம் அன்னை மரியாளின் திருக்காட்சியினாலும், அற்புதங்களாலும் புகழ் பெற்று விழங்குகிறது. தேவலயம் கட்ட இடம் தேர்வு செய்ய இயலாமல் கிராம மக்கள் குழம்பியிருந்தபோது, கடுமையான கோடை காலத்தில் பனியை பொழிவித்து ஆலயம் கட்ட எல்லையை அன்னை மரியாள் அறிவுறுத்தினார். எனவே இங்கு அன்னை மரியாள் பனிமாதா என்று போற்றப் படுகிறார்.

வரலாறு[தொகு]

கள்ளிகுளம் பனிமாதா தேவாலயம் இந்தியாவின் முன்னணி அன்னை மரியின் தேவாலங்களில் ஒன்றாக உள்ளது. இது தென் இந்திய மாநிலமான திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த அன்னையின் அற்புதங்களால் தேவாலயத்தின் புகழ் எட்டுதிக்கும் பரவி நிற்கின்றது. சில வலுவான எழுதப்படாத நிகழ்வுகள் அன்னைக்கும் கள்ளிகுளம் ஊருக்குமான உறவை பரைசாற்றுகின்றன.

1884 - ம் வருடம் கிராமமக்கள் அன்னை மரியின் புகழ் பாட ஒரு ஆலயம் அமைப்பதென முடிவெடுத்தனர். அவர்களால் ஆலய அளவு மற்றும் இடம் தொடர்பனா ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. அவர்கள் அன்னையை வேண்டினர். அது ஒரு கோடை காலம். ஒரு நாள் காலை நேரம் ஊர் மக்கள் ஆச்ச்ர்யபடத்தக்க ஒர் நிகழ்வை கண்டனர். அந்த கோடை காலத்திலும் ஊரின் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் பனியலான போர்வை போர்த்தியிருந்தது. அன்று தான் மக்கள் அன்னையின் ஆசீரை கண்டுணர்ந்தனர். 1885 - ம் ஆண்டு விண்ணெட்டும் உயர ஆலயத்தை அவ்விடத்தில் கட்டி அன்னையின் திருவுருவச்சிலையை நிறுவினர்.

தூத்துக்குடியை அலங்கரிக்கும் புனித பனிமய அன்னை பேராலயத்திற்கு அடுத்தபடியாக தென்னகத்தில் பனிமயத்தாயின் பெயரால் புகழ் பெற்று விளங்கும் திருத்தலம், திருநெல்வேலி, தெற்கு கள்ளிகுளத்தில் வானளாவ உயர்ந்து நிற்கும் அதிசய பனிமாதா ஆலயமாகும். இந்த ஆலயத்தின் அருகேயுள்ள காட்சி மலையின் உச்சியிலுள்ள மாதா கெபி, ஆண்டு முழுவதும் பக்தர்களை ஈர்த்துக்கொண்டேயிருக்கின்றது. ஒரு காலத்தில் கள்ளிச்செடிகளும் முட்புதர்களும் இங்கே மண்டிக் கிடந்தன. இங்கு முதன் முதலில் குடியேறியவர்கள் காயாமொழியிலிருந்து வந்த இந்த நாடார் குலமக்கள் என்பர். அவர்கள் குடியேறிய ஆண்டு ஏறத்தாழ 1700. கள்ளிகுளம் விசுவாச ஒளி பெறுவதற்கு மூலகாரணமாக இருந்தவர்கள் சவரிமுத்து நாடார். அவரது மகன் சூசை நாடார் என்னும் சான்றோர்கள். சவரிமுத்து நாடார் பணகுடியைச் சேர்ந்தவர். இவர் 1768ம் ஆண்டில் திருமறையைத் தழுவி, வடக்கன்குளத்தில் அருட்திரு.தொம்மாசினி அடிகளாரால் திருநீராட்டுப் பெற்றார். அதன் பின்னர் இவர் காவல் கிணறு என்ற ஊரில் குடியேறினார். இவரது ஆறு பிள்ளைகளில் கடைசி மகனான சூசை நாடார், தனது திருமணத்திற்குப் பின்னர் குடும்பத்தோடு கள்ளிகுளத்தில் குடியேறினார். அங்கு 1798ம் ஆண்டு ஓலைக்குடிசைக் கோயில் ஒன்றைக் கட்டி தனது குடும்பத்தினரோடு வழிபாடு செய்து வந்தார். இப்புதிய சிற்றாலயத்திற்கு முன்னால் ஒரு கொடி மரத்தையும் நட்டு வைத்தார்.

1838ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மார்டின், மோசேட் என்ற இரு இயேசு சபை குருக்கள் கள்ளிகுளத்திற்கு வந்தனர். அவர்களின் கண்காணிப்பில் பழைய சிற்றாலயம் சீரமைக்கப்பட்டு பெரிதாகக் கட்டப்பட்டது. கள்ளிகுளம் நீண்ட காலமாகத் தேரைக்குளம் என்றே அழைக்கப்பட்டது. ஆலயம் அமைந்திருந்த இடம் தேரைக் குளமேயாகும். இது அணைக்கரையின் இணையூராக இருந்தது.

காலப்போக்கில் கள்ளிகுளத்தில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை பெருகியது. அதனால் புதியதோர் பெரிய ஆலயம் தேவை என்பதை மக்கள் உணர்ந்தனர். அதே நேரத்தில் கள்ளிகுளம் வட்டாரத்தைக் கண்காணித்து வந்த இயேசு சபை அதிபர் அருட்திரு.கிரகோரி அடிகளார் அவ்வூரைப் பல வழிகளில் முன்னேற்றத் திட்டங்கள் தீட்டினார். அதன்படி நிர்வாகத் திறன் பெற்றிருந்த அருட்திரு. விக்டர் டெல்பெக் அடிகளாரை கள்ளிகுளத்திற்கு அனுப்பி வைத்தார். இவர் ஏற்கனவே கள்ளிகுளம் மக்களுக்கு ஓரளவு அறிமுகமானவர். அணைக்கரையிலிருந்து வடக்கன்குளத்திற்கு குதிரையில் போகும்போதெல்லாம் இம்மக்களோடு உரையாடுவார். 1865ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் நள்ளிரவில் ஆலயத்தை அடுத்த காட்சி மலையின் உச்சியில் ஒரு பெரிய சிலுவையை நிர்மாணித்தார். 1866ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி அவர் நாகப்பட்டனத்திற்கு மாற்றலாகிப் போய்விட்டார். உடல்நலக் குறைவால் அவர் அங்கிருந்து ஐரோப்பாவுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். 1875ம் ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி அவர் மீண்டும் கள்ளிகுளத்திற்குப் பணி செய்ய அனுப்பப்பட்டார். 3 ஆண்டுகளாக வடக்கன் குளத்தில் தங்கி கள்ளிகுளத்தைப் பராமரித்து வந்தார். கள்ளிகுளத்தின் இதயமாக சிறப்புற்று விளங்குவது அங்கு வெண்பனிமயமாக வானளாவ உயர்ந்து நிற்கும் அதிசய பனிமாதா ஆலயம். அதன் வண்ணக் கோபுரம், தொலை தூரத்தில் நடமாடும் மக்களையும் அன்னையின் ஆசி பெற அழைப்பது போன்ற தோற்றம், கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் சிற்பி, அருட்திரு.விக்டர் டெல்பெக் அடிகளார். சிலுவை வடிவத்தில் இவ்வாலயத்தை அமைக்க அவர் திட்டமிட்டார். 1884ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய ஆலயம் அமைய வேண்டிய இடத்தையும் அதன் அளவையும் அன்னை மரியாளே பனி வடிவில் அற்புதமாகக் குறித்துக் காட்டினாள் என்று சொல்வார்கள். தங்களின் சொந்த உழைப்பினால் மக்கள் இவ்வாலயத்தை கட்டியெழுப்பினர். 1885ம் ஆண்டில் ஆலயக்கட்டுமான பணி ஆரம்பமானது. அருட்திரு.விக்டர் டெல்பெக் நினைவாக மக்கள் இவ்வாலயத்தை ஜெயநாதர் ஆலயம் என அழைப்பார்கள். காரணம், அவரை மக்கள் எப்போதும் ஜெயநாதர் சுவாமி என்றுதான் அழைத்து வந்தனர். ஜெயநாதர் என்றால் விக்டர் (க்ஷிவீநீtஷீக்ஷீ) என்றுதான் பொருள். பழைய ஆலயத்தைப் போல் இப்புதிய ஆலயமும் பனிமய அன்னைக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் 190 அடி உயரம் கொண்டது. பெரிய கோபுரம் மட்டும் 150 அடி உயரம். 1938ம் ஆண்டு மார்ச் திங்கள் 23ம் நாள் கள்ளிகுளம் வரலாற்றில் பொன்னான நாள். பாறைக்கிணறு குருசடி அருகே மாலை 6.30 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த ஆறு சிறுவர்களுக்கு மலையில் மாதா காட்சியளித்தாள். காட்சியின்போது அன்னையின் பொற்பாதம் பதிந்த இடத்தில் அழகியதோர் கெபி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தூத்துக்குடி முதல் ஆயர், மேதகு பிரான்சிஸ் திபுர்சியுஸ் ரோச் ஆண்டகை 1940ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் நாள் அர்ச்சித்துத் திறந்து வைத்தார். அப்போது அவர் கள்ளிகுளத்தைத் ‘தென்பாண்டி நாட்டின் லூர்துபதி’ என அழகு பெயர் சூட்டி அழைத்து மகிழ்ந்தார். அன்னையின் அற்புதக் காட்சியினால் கள்ளிகுளத்தின் சிறப்பு தென்னகமெங்கும் பரவியது. மரியாளின் திருத்தலமாக மாறியது. அன்னை காட்சி தந்த மலையானது பற்பல காலங்களில் பங்குத் தந்தையர்களால் அழகுபடுத்தப்பட்டது. மாதா கெபி வரை, முறையான படிகள் வெட்டப்பட்டன. இன்று மலையேறும் படிக்கட்டைத் தழுவிய வண்ணம் அழகிய தேவ ரகசிய தலங்களையும் சிலுவைப் பாதைத் தலங்களையும் காணலாம். இன்றும் மக்கள் கூட்டம் மலை மாதாவை தரிசித்து பல வரங்களைப் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக் கிழமையில் மாதாவின் பக்தர்கள் கூட்டம் பனி மலையில் அலை மோதுகிறது. கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயமும், அன்னையின் காட்சி மலையும் வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய அதிசயத் திருத்தலமாகும். இத்திருத்தலத்தின் திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் திங்கள் 5ம் நாள் சிறப்புறக் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் வாழ்க்கையில் மலைபோல் வருகின்ற துன்பங்களெல்லாம் அன்னையின் அருளால் பனிபோல் மறையும் என்பதை, பனிமாதாவை அணுகுவோர் அனைவரும் உணர்வர்.