ஜமால் அப்துல் நாசிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கமால் அப்துல் நாசர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜமால் அப்துந் நாசிர்

ஜமால் அப்துந் நாசிர் ஹுசைன் என்னும் முழுப் பெயர் கொண்ட ஜமால் அப்துந் நாசிர் (Gamal Abdel Nasser, கமால் அப்துல் நாசர், சனவரி 15, 1918 - செப்டெம்பர் 28, 1970) எகிப்தின் இரண்டாவது சனாதிபதியாக இருந்தார். 1956 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டில் இறக்கும்வரை அவர் இப் பதவியை வகித்தார். எகிப்து நாட்டும் படையில் கேணல் தரத்தில் இருந்த அப்துந் நாசிர், பின்னர் நாட்டின் முதலாவது சனாதிபதியாக இருந்த முகம்மது நகீப்புடன் இணைந்து, 1952 ஆம் ஆண்டில் இடம்பெற்ற எகிப்தியப் புரட்சிக்குத் தலைமை தாங்கினார். இப் புரட்சி மூலம் எகிப்து, சூடான் முடியாட்சி கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் எகிப்தில் நவீனமயமாக்கத்துக்கான பாதை திறந்துவிடப்பட்டது. குறுகிய காலமே நிலைத்திருந்த எகிப்து-சிரியா இணைப்பு உட்படப் பேரரேபியத் தேசியவாதம் பெருமளவு வளர்ச்சி பெற்றதுடன் எகிப்தில் சோசலிசச் சீர்திருத்தங்களும் இடம்பெற்றன.


நாசிர் தற்கால அராபிய வரலாற்றிலும், 20 ஆம் நூற்றாண்டில் அரசியலிலும் ஒரு முக்கியமான தலைவராகக் கருதப்பட்டார். இவரது தலைமையின் கீழ் எகிப்து சூயெசுக் கால்வாயை நாட்டுடைமை ஆக்கியதுடன், அரபு உலகிலும், ஆப்பிரிக்காவிலும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கியமான பங்களிப்பையும் செய்தது. சூயெசு நெருக்கடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது அரபு உலகம் முழுவதிலும் நாசிர் ஒரு வீரராகக் கருதப்பட்டார். அனத்துலக அணிசேரா இயக்கத்தைத் தொடங்குவதில் நாசிரின் பங்கு முக்கியமானது. நாசிர், அவரது தேசியவாதக் கொள்கைக்காகவும், நாசிரியம் என அழைக்கப்பட்ட இவரது வகைப் பேரரேபியவாதத்துக்காகவும் பெரிதும் அறியப்பட்டவர். இவரது இக் கொள்கைக்கு 1950 களிலும், 1960களிலும், அரபு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்தது. இசுரேலுடனான ஆறு நாள் போரில் அரேபியப் படைகள் தோல்வியடைந்தது, அரபுலகின் தலைவர் என்ற இவரது நிலைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமால்_அப்துல்_நாசிர்&oldid=1670888" இருந்து மீள்விக்கப்பட்டது