கமலாபூர் செவ்வாழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமலாபூர் செவ்வாழை
வகைபழம்
இடம்கமலாபூர், குல்பர்க்கா
நாடுஇந்தியா
பொருள்செவ்வாழை

கமலாபூர் செவ்வாழை (Kamalapur Red Banana) என்பது ஒரு சிறப்பு வகை செவ்வாழையாகும். இது இந்தியாவின் கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள கமலாபூர் கிராமத்தின் பள்ளத்தாக்கு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பிரத்தியேகமாக வளர்க்கப்படுகிறது. இது "பணக்கார பழம்" என்று அழைக்கப்படுகிறது. அதிக அளவிலான உரம், நீர் மற்றும் பணியாளர்கள் மூலம் அதிக கவனம் செலுத்தி வளர்க்கப்படுவதால் இதன் விலை மற்ற வாழை வகைகளுடன் ஒப்பிடும்போது அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.[1][2] இதன் தோல் சிவப்பு நிறத்திலிருந்தாலும், பழமானது நுரை நிறத்தில் சுவையுடன் இருக்கும். இந்த பழத்தில் உயிர்ச்சத்து சி மற்றும் பி6 உடன் அதிக கலோரி மதிப்புடன் சத்தான உணவாக அமைகிறது.[3]

இந்த விவசாயப் பொருளானது இந்திய அரசாங்கத்தின் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் (ஜிஐ சட்டம்) 1999 கீழ் பாதுகாக்கப்படுகிறது. இது "கமலாபூர் செவ்வாழை" என்ற தலைப்பில் தோட்டக்கலைப் பொருளாக வகுப்பு 31-ன் கீழ் புவிசார் குறியீடுகள் விண்ணப்ப எண் 133-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.[1] இது கமலாபூர் விவசாய சமூகத்தின் அறிவுசார் சொத்தாக அங்கீகரிக்கப்படுகிறது.[2]

நிலவியல்[தொகு]

கமலாபூர் செவ்வாழைப் பழம், கமலாபூர் மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளான ராஜானல் மற்றும் நவனிகால் கிராமங்களில் சுமார் 100 எக்டேர்கள் (250 ஏக்கர்கள்) நிலப்பரப்பில் பயிரிடப்படுகிறது. மூன்று பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கின் மலைச் சரிவுகளில் மட்டுமே வளர்க்கப்படுகிறது. இந்த மரம் மிக உயரமாக வளர்வதால் வீசும் காற்றினால் சேதமடையாமல் இச்சூழல் பயிர்களைப் பாதுகாக்கிறது. இந்த ரகத்தைச் சமவெளி நிலத்தில் வளர்க்க முடியாது.[1]

வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் இயற்கையான மழைப்பொழிவு சூழலில் இவ்வாழை வளரக்கூடியது. குறைந்த நிலப்பரப்பில் பயிரிட்டால் சால் நீர்ப் பாசனம் அல்லது சொட்டு நீர்ப் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. இது வளர்க்கப்படும் மண் வகை சிவப்பு களிமண் மண்ணைக் கொண்டுள்ளது. உள்நாட்டில், இந்த மண் "ஹலுபிலாபு" என்று அழைக்கப்படுகிறது. அதாவது "களிமண் மண்" என்று பொருள்படும். இந்த மண் கரிம கார்பனுடன் ஓரளவிற்குச் சுண்ணாம்பு மற்றும் குறைந்த அளவு காரத்தன்மை உடையது. இப்பகுதியில் வருடாந்திர மழையளவு சுமார் 777 மில்லிமீட்டர்கள் (30.6 அங்) ஆகும்.[1]

சிறப்பியல்புகள்[தொகு]

இந்த வாழை சுமார் 22 முதல் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதனுடைய தண்டடி சுமார் 3 முதல் 3.2 அடிகள் (0.91 முதல் 0.98 m) சுற்றளவு உடையது. பச்சை மற்றும் மஞ்சள் நிறமுடையது. இதன் இலைகள், நீள்வட்ட வடிவில், பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில், நீளமாகவும் உடையக்கூடியதாகவும் உள்ளன. தாவரத்தின் பூக்கள் மற்றும் பழங்கள் சுமார் 10 முதல் 11 மாதங்களில் தோன்றுகின்றன. அதன் பிறகு முதிர்ச்சியடைய 7-8 மாதங்கள் எடுத்துக்கொள்கின்றது. சுமார் 18வது மாதத்தில் அறுவடை செய்யப்படும். ஒவ்வொரு மரமும் 15 முதல் 20 கிலோ வரை மகசூல் தரவல்லது. ஒரு ஏக்கருக்குச் சராசரியாக 11 டன்கள் எடையுள்ள வாழைப்பழங்கள் கிடைக்கின்றன.[4] பொதுவாகப் பூச்சிகள் இல்லாமல் இருக்கும். பழத்தின் தோல் மிதமான சிவப்பு நிறத்திலும், அதன் கூழ் நுரை வண்ணத்திலும் அனைவரும் விரும்பத்தக்கச் சுவையிலும் இருக்கும்.[1]

வேதிப்பண்புகள்[தொகு]

கமலாபூர் செவ்வாழைப் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பினை மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் சோதனை செய்தது. இந்த பழத்தில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை மற்ற வாழை வகைகளை விட மிகவும் அதிகமாக உள்ளது. இதன் சக்தி, உயிர்ச்சத்து சி மற்றும் பி6 ஆகியவையும் அதிகமாக உள்ளது.[3] இதில் மொத்த கரையக்கூடிய திடப்பொருள்கள் 20-22 பாகை பிரிக்சு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[1]

பெங்களூரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையானது கமலாபூர் செவ்வாழைப் பழத்தின் தரத்தினை ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக உள்ளது.[1]

ஊக்கத்தொகை[தொகு]

தோட்டக்கலைத் துறையானது, இந்த வாழைப்பழச் சாகுபடியின் பரப்பை விரிவுபடுத்த விவசாயிகளை ஊக்குவித்து, சான்றழிக்கப்பட்ட விதைகளை மானிய விலையில் சலுகைகளுடன் வழங்கி ஊக்கப்படுத்துகிறது.[4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலாபூர்_செவ்வாழை&oldid=3338350" இருந்து மீள்விக்கப்பட்டது