கனடாவில் நலம் பேணல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனடாவில் நலம் பேணல் என்பது மக்களின் உடல் உள சமூக நலம் எவ்வாறு கனடிய நாட்டில் பேணப்படுகிறது என்பது பற்றிய கட்டுரை. கனடாவில் முழுப்பொது நலம் பேணல் முறைமை உள்ளது. அதாவது ஒருவருக்கு அவசியமான அனைத்து மருத்துவ சேவைகளுக்கும் அவரின் பொருளாதார நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் அரசே நிதி வழங்கும். OECD நலம் பேணல் தரத்தில் கனடா நான்காவது இடத்தில் இருக்கிறது. இது இதன் சிறந்த நலம் பேணல் முறைக்குச் சான்றாகும்.[1]

அரசின் பங்கு[தொகு]

நடுவண் அரசு நிதியின் ஒரு பங்கை வழங்க, மிகுதி நிதி தந்து சேவையை வழங்குவது மாகாண அரசுகளின் பொறுப்பு. மேலும் நடுவண் அரசு நலம் புள்ளியியல், ஆய்வு, இயங்குவிதிகள், மற்றும் பழங்குடிகள், படைவீரர் ஆகியோருக்கான நேரடி மருத்துவ வசதிகளுக்கும் பெறுப்புடையது.

நிதியாக்கம்[தொகு]

2007 ஆம் ஆண்டில் கனடாவின் நலம் பேணல் செலவு 160 பில்லியன் கனடிய டொலர்கள் ஆகும். இது GDP இன் 10.6 விழுக்காடு ஆகும். 70% செலவுகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. 30% செலவுகள் தனியார் காப்புறுதி அல்லது நேரடிச் செலவு ஆகும்.

வரலாறு[தொகு]

18 ஆம் நூற்றாண்டிலேயே ஐரோப்பியரின் குடியேற்றம் பெரிதும் நிகழ்ந்தது. அதற்கு முன் வாழ்ந்த பழங்குடி மக்களிடம் மருத்துவம் பற்றிய மரபுவழி அறிவு இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கங்களில் பொது நலம் தொடர்பாக ஒரு வலுவான அமைப்பொழுங்கு இருக்கவில்லை. தொற்று நோய்களைத் தடுப்பதற்காக நோயாளிகளை ஒதுக்கி வைக்கும் (isolation) நடவடிக்கை மட்டுமே நடந்தது. 1842 பிரித்தானியாவில் "Report on the Sanitary Conditions of the Labouring Population of Great Britain" என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. 1875 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் ஆங்கில பொதுநலச் சட்டம் 1875 கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து 1884 ஒன்ராறியோ மாகாணமும் இதை ஒத்த சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த சட்டம் உள்ளூர் ஆட்சிகள் ஒவ்வொன்றிலும் பொது நலச் சபை அமைக்கப்பட்டு, சுகாதாரம், தொற்று நோய் கட்டுப்பாடு, ஏழை மக்களுக்கு அவசிய மருத்துவ சேவை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பதை சட்டமாக்கியது. இதே போல பிற மாகாணங்களிலும் நடைபெற்றது.

நடுவண் அரசு நலத் துறையை 1919 ஆம் ஆண்டில் அமைத்தது. இக்காலத்தில் மருத்துவம் தனியாரிடமே பெரிதும் இருந்தது. அடித்தட்டு மக்களுக்கு மருத்துவசேவை போதிய அளவு கிடைக்கவில்லை. இலாபத்தை குறிவைத்த மருத்துவத்துறை நோய்களை வரும்முன் காப்பதை விட வந்தபின் குணப்படுத்துவதிலேயே அக்கறை காட்டியது. இப்படிப்பட்ட குறைகளை முன்னிறுத்திய தொழிலாளர்களும், Co-operative Commonwealth Federation கட்சியும் கிளர்ச்சி செய்தன. மேலும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மக்களின் பொது நலத்தைப் பேணுவது நாட்டின் பாதுகாப்புக்கும் அவசியம் என்று உணரப்பட்டது. இவற்றின் நீட்சியாக மருத்துவ மனைகளுக்கு அரசு நிதியுதவி செய்யத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவர்கள் சேவையும் மருத்துவர்களின் எதிர்ப்பை மீறியும் நிதியுதவி பெற்றது. எந்த எந்த மருத்துவ சேவைகளுக்கு அரசு நிதியுதவி செய்வது தொடர்பாக ஆய்வதற்காக அமைக்கப்பட்ட 1960 Royal Commission on Health Services, முழுப் பொது நலம் பேணல் முறைமையைப் பரிந்துரைத்தது. இது பின்னர் வந்த அரசுகளால் நிறைவேற்றப்பட்டது.

கனடா நலச் சட்டம் 1984 ஆம் ஆண்டு நடுவண் அரசால் பொது நலம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாகும். இது நடுவண் அரசிடம் இருந்து மாகாணங்கள் நிதி பெறுவதற்கான அடிப்படை விதிகளையும், நிபந்தனைகளையும் வரையறுக்கிறது. இவை முழுப்பொது நலம் பேணல் சேவைகளை வலியுறுத்தி அமைகின்றன.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gregory Marchildon. (2005). Health Systems in Transitions: Canada. European Observatory on Health Systems and Policies.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடாவில்_நலம்_பேணல்&oldid=3417671" இருந்து மீள்விக்கப்பட்டது