கந்த முருகேசனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கந்த முருகேசனார்
Kantha murukesanar.jpg
ஈழத்துத் தமிழறிஞர் கந்த முருகேசனார்
பிறப்புஏப்ரல் 27, 1902
தென் புலோலி, யாழ்ப்பாணம்
இறப்புசூன் 14, 1965(1965-06-14) (அகவை 63)
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிதமிழாசிரியர்
அறியப்படுவதுதமிழறிஞர்
சமயம்சைவ சமயம்
பெற்றோர்கந்தப்பர், தெய்வானைப் பிள்ளை

கந்த முருகேசனார் (ஏப்ரல் 27, 1902 - சூன் 14, 1965) ஈழத்துத் தமிழறிஞர். 'உபாத்தியாயர்' என்றும் 'தமிழ்த் தாத்தா' என்றும் அழைக்கப்பட்டவர். தமிழ் அறிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, தர்க்கவாதியாக, பல்துறை விற்பன்னராக வாழ்ந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இலங்கையின் வட மாகாணத்தில் தென் புலோலியில் கந்தப்பர், தெய்வானைப் பிள்ளை ஆகியோருக்கு இரண்டாவது மகனாக 27.04.1902 ஆம் ஆண்டு பிறந்தவர் முருகேசனார்.

கல்வி[தொகு]

அறிஞர் கந்த முருகேசனார் ஒரு வறிய விவசாய குடும்பத்தில் பிறந்து தமது ஆரம்பக் கல்வியை தரம் 1 முதல் 4 வரை தட்டாதெரு மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் அதன் பின்னர் புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையென அழைக்கப்பட்ட வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் கற்றதுடன் கல்வியை வறுமையின் காரணமாக இடையில் நிறுத்தினார். இதன் பின்னர் ஈழமணி ஆசிரியர், புலவர் என்று அன்றைய காலத்தில் அழைக்கப்பட்ட க. முருகேசபிள்ளை என்ற பெரியாரிடம் சிறிது காலம் கந்தபுராணமும் நன்னூல் காண்டிகையுரையும் கற்றார். பின்பு நன்னூல் யாப்பிலக்கண காரிகை போன்ற சிற்றிலக்கணங்களையும், தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களையும் தானாகவே எவரினதும் உதவியுமின்றிப் படித்து ஒரு தலைசிறந்த அறிஞரானார்.

கந்த முருகேசனாருக்கு ஏறத்தாழ 25 ஆவது வயதில் கால்கள் வலுவிழந்தன. அதற்கு முன்பு புராணங்களுக்குப் பயன் சொன்னவர், பின்பு அதைத் தொடர முடியவில்லை. இளமைக்காலத்தில் கோயில்களில் புராணங்களுக்குப் பயன் சொன்ன இப்பெரியார் கால்கள் வலுவிழந்து, முடமான பின்னர் ஒரு நாத்திகவாதியாக மாறி விட்டார். நாத்திகவாதியாக மாறினாலும் இரவு, பகல் என்று பாராது சகலவற்றையும் கற்றுப் பாண்டித்தியம் அடைந்தார். சிறந்த சிந்தனையாளராக மாறி பொதுவுடைமைத் தத்துவங்கள் வாழ்க்கைத் தத்துவங்கள் யாவற்றையும் நன்கு கற்றார்.

உபாத்தியாயர்[தொகு]

கந்த முருகேசனார் ஆரம்பத்தில் புற்றளை சாரதா வித்தியாசாலையில் (தற்போதைய புற்றளை மகா வித்தியாலயம்) ஆசிரியராகப் பணீயாற்றினார். பின்னர் அவரது உறைவிடமான 'தமிழகம்' ஒரு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது. இயற்கைச் சூழலில், வெண் மணற்பரப்பில், இப்பள்ளிக் கூடம் பாலர் வகுப்பு முதல் பண்டிதர், வித்துவான் வகுப்பு வரை எப்போதும் மாணாக்கர்களால் நிறைந்திருக்கும். இங்கு தமிழ் மட்டுமின்றி சமயம், தர்க்கம், புவியியல், கணிதம் யாவும் இவரால் இத்திண்ணைப் பள்ளியில் கற்பிக்கப்பட்டன.

கந்த முருகேசனாருக்கு அறிஞர் அண்ணாத்துரை, இரா. நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகிய தமிழக அரசியல் தலைவர்களோடும், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பொன் கந்தையா, பீற்றர் கெனமன் போன்றவர்களோடு நேரடித் தொடர்பும் தபால் மூலத் தொடர்பும் கொண்டிருந்தார்.

நூல்கள் எழுதியமை[தொகு]

கந்த முருகேசனார் பல நூல்களை எழுதி வெளியிட்டிருந்தார். அவரின் 'நல்லை நாவலன் கோவை' 1930 ஆம் ஆண்டு எழுதப்பட்டாலும் 69 ஆண்டுகளுக்குப் பின்பே புத்தக உருவாக வெளிவந்தது.

நினைவகம்[தொகு]

கந்த முருகேசனாரின் நினைவாக புற்றளை மகா வித்தியாலயம், புற்றளை சனசமூக நிலையம், மந்திகை சந்தி ஆகியவற்றில் முருகேசனாரின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்த_முருகேசனார்&oldid=1331138" இருந்து மீள்விக்கப்பட்டது