உள்ளடக்கத்துக்குச் செல்

பூமருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கதலி (மலர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கதலி
கதலி மலர்கள்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. speciosa
இருசொற் பெயரீடு
Lagerstroemia speciosa
(லாம்.) Pers.
வேறு பெயர்கள் [1]
  • Adambea glabra லாம்..
  • Lagerstroemia augusta Wall. nom. inval.
  • Lagerstroemia flos-reginae Retz.
  • Lagerstroemia macrocarpa Wall. nom. inval.
  • Lagerstroemia major Retz.
  • Lagerstroemia munchausia Willd.
  • Lagerstroemia plicifolia Stokes
  • Lagerstroemia reginae Roxb.
  • Munchausia speciosa லின்..

பூமருது, செம்மருதம், கதலி[2] (ஒலிப்பு) (Lagerstroemia speciosa (giant crepe-myrtle, Queen's crepe-myrtle, banabá plant, or pride of India, or Queen's Flower or Jarul[3][4]) என்பது வெப்பமண்டல தென் ஆசியாவை சேர்ந்த ஒரு மரமாகும். கோடை காலத்தில் இதன் மலர்கள் பூத்து குலுங்கும். இது பிரகாசமான இளஞ்சிவப்பு முதல் வெளிர் ஊதா நிற பூக்களைக் கொண்ட ஒரு இலையுதிர் மரமாகும். குளிர் காலத்தில் இலைகள் உதிரும் முன்னே இதன் இலைகள் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். இந்த தாவரம் கொண்ட அஞ்சல் தலையை இந்தியா வெளியிட்டுள்ளது.[5] இதன் மரம் வலிமையில் தேக்கு மரத்திற்கு அடுத்ததாக உள்ளது.[3]

சங்கம் பாடிய மருதம்

[தொகு]

வயலும் வயல் சார்ந்த நிலமான மருதம் திணைக்குரிய மரம் பூமருது என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சங்கப் பாடல்களில் வருணிக்கப்படும் மருதப் பூ பற்றிய குறிப்புகள் செம்மருதுவின் பூவுக்கே பொருந்துவதாக கூறுகின்றனர். அதாவது முடக்காஞ்ச்ச் செம்மருதின் (வரி 189) என்ற பொருநராற்றுப்படையும், செவ்வி மருதின் செம்மலோடு தாஅய் (50-2) என்ற குறுந்தொகை வரியும் அதை உறுதிப்படுத்துகின்றன. இம்மரத்தின் மலர்கள் இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிறத்தைக் கொண்டவை. பேராசிரியர் கு. வி. கிருஷ்ணமூர்த்தி தன் தமிழரும் தாவரமும் என்ற நூலில் மருத தினைக்குரிய மரம் பூமருதே என்று வலியுறுத்துகிறார்.[2]

சொற்பிறப்பியல்

[தொகு]

லத்தீன் மொழியில் ஸ்பெசியோசா 9speciosa) என்ற குறிப்பிட்ட அடைமொழிக்கு 'அழகான' என்று பொருளாகும்.[6]

வளர்ச்சி

[தொகு]
பூ மருது மரம்.

இந்த மரம் 15 மீட்டர் (49 அடி) உயரம் வரை வளரக்கூடிய சிறியது முதல் நடுத்தர அளவு முதல் பெரியதாக வளரும் மரமாகும். மென்மையான, செதில்களான வெளிர் சாம்பல் அல்லது பாலேட்டு நிற பட்டைகள் கொண்ட மரமாகும்.[3] உதிரக்கூடிய இதன் இலைகள், நீள்வட்ட வடிவமானது, தடிமனான இலைக்காம்புடன், 8–15 செ.மீ (3.1–5.9 அங்குலம்) நீளமும் 3–7 செ.மீ (1.2–2.8 அங்குலம்) அகலமும், கூர்மையான நுனியும் கொண்டவை. பூக்கள் நீண்ட காம்பில் 20–40 செ.மீ (7.9–15.7 அங்குலம்) நீள பூங்கொத்தாகப் பூக்கக்கூடியவை. ஒவ்வொரு பூவும் 2–3.5 செ.மீ (0.79–1.38 அங்குலம்) நீளமுள்ள ஆறு வெளிர் ஊதா, கருஞ்சிவப்பு நிற இதழ்களைக் கொண்டுள்ளன. இதன் மூங்கொத்துகள் மரத்தின் உச்சியில் கிரீடம்போலப் அழகாகப் பூக்கும். இது உரோமங்களற்ற, பெரிய, நீள்வட்ட ஈட்டி வடிவிலான எளிய இலைகளைக் கொண்டிருக்கும்.[3]

இதன் கனிகள் நீள்வட்ட வடிவிலானவை. முதலில் அவை பச்சை நிறத்தில் இருக்கும், ஆனால் பின்னர் பழுப்பு நிறமாகவும் இறுதியாக கருப்பு நிறமாகவும் மாறும். கனிகள் மரங்களில் தொங்கும். இது விதைகள் மூலம் எளிதில் பரவுகிறது. இது வளமான வண்டல் களிமண்ணில் சிறப்பாக வளரும். சூடான, ஈரப்பதமான மண்ணில் நன்கு வளரும். மேலும் நீர் தேங்கினாலும் தாங்கும்.[3]

நடவு செய்த 3-5 ஆண்டுகளுக்குப் பிறகு பூக்கும். இது முக்கியமாக பூக்கும் பருவம் ஏப்ரல்-சூன் ஆகும், சூலை-ஆகத்து மாதங்களில் இரண்டாவது முறை பூக்கும். நவம்பர்-சனவரி மாதங்களில் காய்க்கும்.[3] p. 198

சாகுபடியும், பயன்பாடும்

[தொகு]

இது தென்கிழக்காசியா, சீனா, இந்தியா, வங்காளதேசம், பிலிப்பீன்சு ஆகிய நாடுகளில் வளர்க்கப்படுகிறது, மேலும் இது ஆத்திரேலியா வரை கூட பரவியுள்ளது. இம்மரம் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டது, குறிப்பாக பெல்காம், வடக்கு மற்றும் தெற்கு கனரா, மலபார், திருவிதாங்கூர் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், அசாம் மற்றும் மேற்கு வங்காளத்திலும் காணப்படுகிறது.[3] இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் அலங்காரத் தாவரமாகவும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. இதன் இலைகளும் பிற பகுதிகளும் பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான் போன்ற நாடுகளில் தேநீர் தயாரிப்பாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் இலை மூலிகையாக வகைப்படுத்தபட்டு பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறையால் (DOH) ஊக்குவிக்கப்பட்ட 69 மூலிகை தாவரங்களில் ஒன்றாக உள்ளது.[7] வியட்நாமில், இந்த தாவரத்தின் தளிர்கள் கீரையாக உட்கொள்ளப்படுகின்றது. மேலும் இதன் முதிர்ந்த இலைகளும், முதிர்ந்த பழங்களும் இரத்தத்தில் குளுக்கோசைக் குறைக்க பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.[8] இதன் விதைகள் போதைப்பொருள் பண்புகளைக் கொண்டுள்ளன.[9]

இது ஒரு உறுதியான மரமாகும். கதவு, சன்னல் போன்ற மரச்சாமான்கள் செய்யப்பயன்படுகிறது. நீரில் இருந்தாலும் எளிதில் உளுத்துப் போகாமல் நீடித்து இருக்கும். இதனால் படகு செய்யவும், துறைமுகங்களில் ஆதரவுக் கம்பங்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. மியான்மரில் தேக்குக்கு அடுத்து இம்மரமே பயன்படுத்தப்படுகிறது.[2]

வேதியியல்

[தொகு]

இதன் சாற்றில் வேதியியல் சேர்மங்களான கோரோசோலிக் அமிலம், லாகர்-ஸ்ட்ரோமின், ஃப்ளோசின் பி மற்றும் ரெஜினின் ஏ ஆகியவை உள்ளன.[10]

மருத்துவப் பயன்பாடு

[தொகு]

பூமருதின் விதைகள் போதைப்பொருளாகவும், பட்டை, இலை போன்றவை மலமிளக்கியாகவும், வேர்கள் துவர் மருந்து, தூண்டி, காய்ச்சலடக்கி (காய்ச்சல் நீக்கி) தன்மை கொண்டவையாக உள்ளன. இலைகளின் கசாயம் நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது. மணிப்பூரில், இதன் காய்கள் வாய்ப் புண்ணுக்குப் தடவப்படுகின்றது.[11]

பல இடங்களில் அலங்கார செடியாக வளர்க்கப்படுகிறது. இத்தாவரம் வயிற்றுப்போக்கு, ரத்த அழுத்தம் முதலிய பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.[12] கல்லீரல் நோய்க்கு தீர்வு காணும் வகையில் ஆராய்ச்சி நடைபெற்றுவருகிது.[13]

அங்கிகாரம்

[தொகு]

இந்த மரத்தின் மலரானது மகாராட்டிர மாநில மலராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[14]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lagerstroemia speciosa (L.) Pers. — The Plant List". Archived from the original on 2018-10-03. Retrieved 2013-02-11.
  2. 2.0 2.1 2.2 சங்கம்பாடிய மருதம் எது?, ஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை, 7 சூன் 2025
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Swaminathan, M.S.; Kochar, S.L. (2019). Major Flowering Trees of Tropical Gardens. Cambridge University Press. p. 197. ISBN 978-1-108-48195-3.
  4. "Lagerstroemia speciosa (L.) Pers. pride of India." PLANTS Profile, United States Department of Agriculture / Natural Resources Conservation Service. Retrieved 2008-07-15.
  5. "Pride Of India". Retrieved ஃபிப்ரவரி 11, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "Speciosa meaning in English". Retrieved 3 July 2024.
  7. Eduardo B. Principe and Aurora S. Jose (2002). "Propagation Management Of Herbal and Medicinal Plants" (PDF). Research Information Series On Ecosystems. Retrieved 25 January 2013. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. Tanaka, Yoshitaka; Van Ke, Nguyen (2007). Edible Wild Plants of Vietnam: The Bountiful Garden. Thailand: Orchid Press. p. 90. ISBN 978-974-524-089-6.
  9. Hargreaves, Dorothy; Hargreaves, Bob (1970). Tropical Trees of the Pacific. Kailua, Hawaii: Hargreaves. p. 16.
  10. Klein, G.; Kim, J.; Himmeldirk, K.; Cao, Y.; Chen, X. (2007). "Antidiabetes and Anti-obesity Activity of Lagerstroemia speciosa". Evidence-Based Complementary and Alternative Medicine 4 (4): 401–407. doi:10.1093/ecam/nem013. பப்மெட்:18227906. 
  11. Khatri, Vikas (2020). Herbal Cure – Medicinal Plants that heal naturally. V&S Publishers. p. 43. ISBN 978-93-5057-184-2.
  12. "Banaba". medicalhealthguide.com. Retrieved 2012-08-15.
  13. V. Vinoth Prabhu, N. Chidambaranathan, G. Nalini, S. Venkataraman, S. Jayaprakash, M. Nagarajan (October-December 2010). Evaluation of Anti-fibrotic effect of Lagerstroemia Speciosa (L) pers. on Carbon Tetrachloride Induced Liver Fibrosis. 1. பக். 6. http://cpronline.in/PDF/7-12.pdf. பார்த்த நாள்: 2013-02-11. 
  14. "Maharashtra State Symbols". www.onlinesaraswati.com. Retrieved 2019-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமருது&oldid=4290961" இலிருந்து மீள்விக்கப்பட்டது