கட்டூர்
கட்டூர் என்பது பொதுவாகப் போர்ப்பாசறையைக் குறிக்குமாயினும் கட்டூர் என்னும் பெயரில் ஓர் ஊர் இருந்ததாகவும் தெரியவருகிறது.
- கட்டூர் என்பது போஒர் என்னும் ஊரைக் குறிக்கும்.
பெரும்பூட் சென்னியின் படைத்தலைவனும், போஒர் என்னும் ஊரில் இருந்துகொண்டு சென்னிக்காக ஆட்சி நடத்தியவனுமான பழையனுக்கும் அவனைத் தாக்கிய எழுவர் கூட்டணிக்குமிடையே போர் நடந்த இடம் கட்டூர். (எழுவர் கூட்டணி 1 நன்னன், 2 ஏற்றை, 3 அத்தி, 4 கங்கன், 5 கட்டி, 6 புன்றுறை, 7 கணையன்) [1]
- போருக்காகக் கட்டி அமைக்கப்படும் படைவீடு, அல்லது பாசறையைக் குறிக்கும் பொதுச்சொல் கட்டூர்.
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் பலமொழிகள் பேசும் கட்டூரில் தங்கியிருந்தபோது அவனிடம் போரிட யாரும் வரவில்லையாம். அதற்காக வருந்திய குட்டுவன் (தன் வேல்களைக் கடலில் நட்டுக்) கடலைப் பின்னுக்குத் தள்ளிக் கடல்பிறகோட்டிய செங்குட்டுவன் என்னும் சிறப்பினைப் பெற்றிருக்கிறான். [2]
வேல்கள் விளையாடும் போர்க்களம் கட்டூர். [3]
கட்டூர் என்பது அரசன் போர்க்காலத்தில் தங்கும் பாசறை [4]
அரசன் தங்கி இறை தண்டுமிடம் கட்டூர். [5]
போர்வீரர்கள் தங்குமிடம் கட்டூர்.[6]
கட்டூர் என்னுமிடத்தில் காட்டுப்பசு ஒன்றைக் காளை தழுவிச் சென்ற காட்சியைப் பார்த்த தலைவி பிரிந்திருக்கும் தன் கணவனை நினைத்துக்கொண்டாளாம். [7]