கடல் அப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடல் அப்பம்

கடல் அப்பம் (Clypeaster) கடலினடி மணலில் புதைந்து வாழ்கின்ற, முட்தோலித் தொகுதியைச் சார்ந்த விலங்காகும். இவை மிகவும் தட்டையான ஓடு போன்ற வட்ட வடிவிலான உடலமைப்பைக் கொண்டவை. சில வகை கடல் அப்பங்களின் உடலில் 2 முதல் பல நீள்வட்டத் துளைகளுண்டு, உடல் முழுதும் சிறிய முள்கள் மூடியுள்ளன. இவை கடல் அட்டைகளின் முள்களைவிட மிகவும் சிறியவை. ஆயினும், எண்ணிக்கையில் மிகுதியாக உள்ளன. பெரும்பாலான கடல் அப்பங்கள் மணலில் புதைந்து வாழ்கின்றன. சிலவகையில் உடலின் பின் பகுதி மணலுக்கு வெளியே நீண்டிருக்கும். இவற்றின் தட்டையான உடல் மணலில் புதைவதற்கு ஏற்றவாறும், ஆழ்கடலின் அழுத்தத்தைத் தாங்குவதற்கு ஏற்றவாறும் உள்ளது. உடலின் மேல் உள்ள முள்கள் ஊர்வதற்கும், மண்ணில் புதைவதற்கும் உதவுகின்றன. தகடு போன்ற உடலின் நடுவே ஒரு பக்கத்தில் வாயும், எதிர்பக்கத்தில் மலத்துளையும் உள்ளன. கடல் அப்பங்களை பிற முட்தோலிகளைப் போல், ஆரச்சமசீர் கொண்டவையல்லவாயினும், இவ்வகுப்பின் சிறப்பு பண்புகளாகிய குழாய்க்கால்களும் நீர்க்குழாய் மண்டலமும் குறிப்பிடத்தக்கவை. கடல் அப்பங்கள் மண்ணில் புதைந்துள்ள கரிமப் பொருள்களை உண்ணுகின்றன. இவை ஒளி விலக்கிகளாகும். இவற்றின் ஆண், பெண் இனங்கள் தனித்தனியே இருந்தாலும் இவற்றுக்கிடையே புறவேற்றுமைகள் இல்லை. இவற்றுள் கலவி இல்லாமையால் கருவுறுதல் நீரில் நடக்கிறது. தானியங்கும் இளம் பருவமும் உருமாற்றமும் உண்டு. மனிதருக்குக் கடல் அப்பங்களால் பயன் குறைவு.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Thanjavur University, Arivial kalanjiyam, volume -7
  2. "WoRMS - World Register of Marine Species - Clypeaster Lamarck, 1801". www.marinespecies.org. பார்க்கப்பட்ட நாள் 2023-01-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_அப்பம்&oldid=3646210" இலிருந்து மீள்விக்கப்பட்டது