ஓமிக்குரோன் திரிபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓமிக்குரோன் திரிபு (SARS-CoV-2 Omicron variant) தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரசு வேற்றுருவம் ஆகும்.[1][2] இந்த மாறுபாடு முதலில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதியன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து உலக சுகாதார அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டது. [3] இப்புதிய வகை கொரோனா வைரசு போட்சுவானா, பெல்சியம், ஆங்காங், இசுரேல், செருமனி, இத்தாலி, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.[4]

ஆல்பா, பீட்டா, டெல்டா என்ற உருமாற்றங்களைத் தொடர்ந்து வைரசின் மரபணு வரிசையில் ‘பி.1.1.529’ எனும் புதிய பிறழ்வு[5] ஏற்பட்டு ஓமைக்ரான் வேற்றுருவம் தோன்றியுள்ளது என உலக சுகாதார நிறுவனம் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று அறிவித்துள்ளது.[6] [7] டெல்டா வகை கொரோனா திரிபுடன் ஒப்பிடுகையில் ஓமைக்ரான் ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டதா என்பது குறித்து துல்லியமாக முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. ஆர்டி-பி சி ஆர் பரிசோதனைகள் மூலம் இத்தீநுண்மி பரவல் தன்மையைக் கண்காணிக்க முடியும்.[8]

வரலாறு[தொகு]

தென் ஆப்பிரிக்காவில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஏஞ்சலிக் கோட்சி என்பவர் அங்கு வந்த சில நோயாளிகளிடம் புதிய வகை கொரோனாவிற்கான அறிகுறிகள் தென்பட்டதை முதன்முதலில் கண்டறிந்தார்.

நோய் அறிகுறிகள், டெல்டா வகை நோய் அறிகுறிகளை விட வித்தியாசமாக உள்ளதாக ஏஞ்சலிக் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறைவான அறிகுறிகள் மட்டுமே கொண்டுள்ள இந்த ஓமைக்ரான் கொரோனா நோய் வாசனை மற்றும் சுவை இழப்பு, ஆக்சிசன் குறைவு போன்ற பெரிய அளவு பாதிப்புகளை நோயாளிகளுக்கு ஏற்படுத்தவில்லை என்றும் இந்த வகை கொரோனா வந்தவர்களுக்கு 1-2 நாட்கள் பசியின்மையும் தலைவலி மற்றும் உடல் வலி ஆகிய பாதிப்புகள் மட்டுமே அறியப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.[9]

40 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதினரை இந்த ஓமைக்ரான் கொரோனா தாக்குகிறது என்று குறிப்பிடுகிறார். ஓமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் இதுவரை தடுப்பூசி எதுவும் எடுத்து கொள்ளாதவர்கள் என்றும் கூறியுள்ளார்.

தடுப்பூசி பரிந்துரை குழுவில் முக்கிய பொறுப்பிலும் உள்ள இவர் ஓமைக்ரான் வைரசு பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே இதற்கான சிகிச்சைகளை எடுத்து கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் கிடைத்த முக்கிய தரவுகளின் அடிப்படையில், ஓமைக்ரான் வகை கொரோனா மிக வேகமாக பரவுகிறதே[10] தவிர இது டெல்டா வகையை போன்று மோசமானதாக இல்லை என்று வைரசு ஆராய்ச்சியாளர் மார்க் வான் ரான்சுட் கூறுகிறார். ஓமைக்ரான் கொரோனா டெல்டா வகையை விடவும் அதி வேகமாக பரவ கூடியதாக உள்ளது என்று உலக சுகாதார நிறுவனமும் குறிப்பிடுகிறது.

இசுரேலைச் சேர்ந்த கொரோனா வைரசு துறையின் தலைவரும் பேராசிரியருமான திரோர் மெசோராக்கும் இந்த புது வகை கொரோனா வைரசு தொற்று பெரிய அளவிற்கு பாதிப்பு கொண்டதாக இல்லை என்று கூறியுள்ளார்.

நோய் அறிகுறிகள்[தொகு]

28 நவம்பர் 2021 இல் உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படி "ஒமிக்ரான் தொடர்புடைய அறிகுறிகள் மற்ற வகைகளில் இருந்து வேறுபட்டவை என்று கூறுவதற்கு தற்போது எந்த தகவலும் இல்லை" என்பதாகும்.[11]

நோய் கட்டுப்பாட்டு மையம் திசம்பர் முதல் தேதியிலிருந்து திசம்பர் 7 வரை ஒரு வாரம் நடத்திய ஆய்வில், "பொதுவாகன அறிகுறிகளாக இருமல், சோர்வு மற்றும் மூச்சு திணறல் அல்லது மூக்கு ஒழுகுதல்" என்று கண்டறியப்பட்டது.[12]

பாதுகாப்பு[தொகு]

கொரோனா தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை ஓமைக்ரான் வகை வைரசு எளிதாக தாக்கும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.[13] எனவே முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற கொரோனா கால விதிகளை எல்லோரும் அவசியம் கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக இது வரையில் தடுப்பூசி போடாதவர்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும் என்று இலண்டனைச் சேர்ந்த நுண்ணுயிரியலாளர் பேராசிரியர் கேலம் செம்பிள் கூறியுள்ளார்.

புதிதாக பரவத் தொடங்கியுள்ள ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றை, மரபணு பகுப்பாய்வு முறையில் கண்டறிய வழக்கமாக 7 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு தக்பாத் என்ற சோதனையை பரிந்துரைத்துள்ளது. இப்பரிசோதனையை மேற்கொண்டால், 3 மணி நேரத்திலேயே மரபணுவில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும்.[14]

மேற்கோள்கள்[தொகு]

 1. Afp (2021-11-26). "B.1.1.529 declared COVID-19 'variant of concern', renamed Omicron". The Hindu (in ஆங்கிலம்). 2021-11-30 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Omicron virus: India expresses solidarity with Africa, assures Made in India COVID vaccines, medical equipment". www.timesnownews.com (in ஆங்கிலம்). 2021-11-30 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Classification of Omicron (B.1.1.529): SARS-CoV-2 Variant of Concern". World Health Organization. 26 November 2021. 26 November 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 26 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 4. "ஓ மைக்ரான் வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை அமைச்சர் தகவல்". தினமணி. https://www.dinamani.com/india/2021/nov/28/information-on-the-ministry-of-intensive-measures-to-prevent-the-spread-of-the-omicron-virus-in-tamil-nadu-3744130.html. பார்த்த நாள்: 30 November 2021. 
 5. "Explained: What we know so far about Omicron variant of Covid-19". The Indian Express (in ஆங்கிலம்). 2021-11-30. 2021-11-30 அன்று பார்க்கப்பட்டது.
 6. "ஓமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் வராமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமைச் செயலாளர் காணொளிக்காட்சி மூலம் இன்று ஆய்வு". தினகரன். https://www.dinakaran.com/news_detail.asp?Nid=723603. பார்த்த நாள்: 30 November 2021. 
 7. "ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு". Dinamalar. 2021-11-29. 2021-11-30 அன்று பார்க்கப்பட்டது.
 8. "ஓமைக்ரான் ஆபத்தானதா? உலக சுகாதார அமைப்பு பகிர்ந்துள்ள ஐந்து முக்கியத் தகவல்கள்". Hindu Tamil Thisai. 2021-11-30 அன்று பார்க்கப்பட்டது.
 9. Piper, Elizabeth; Sterling, Toby (2021-11-28). "Omicron variant detected in more countries as scientists race to find answers". Reuters (in ஆங்கிலம்). 2021-11-30 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Omicron: WHO classifies new variant as 'highly transmissible' virus". The Economic Times. 2021-11-30 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Update on Omicron". World Health Organization. 28 November 2021. 30 November 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 30 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 12. CDC COVID-19 Response Team (17 December 2021). "SARS-CoV-2 B.1.1.529 (Omicron) Variant — United States, December 1–8, 2021". MMWR. Morbidity and Mortality Weekly Report (Center for Disease Control) 70 (50): 1731–1734. doi:10.15585/mmwr.mm7050e1. பப்மெட்:34914670. https://www.cdc.gov/mmwr/volumes/70/wr/mm7050e1.htm. பார்த்த நாள்: 17 December 2021. 
 13. narendran.s. "உஷார்… கொரோனா பாதித்தவர்களை ஓமைக்ரான் எளிதாக தாக்கும்… எச்சரிக்கை விடுக்கும் WHO!!". Asianet News Network Pvt Ltd. 2021-11-30 அன்று பார்க்கப்பட்டது.
 14. "ஒமைக்ரான் வைரசை 3 மணி நேரத்தில் கண்டறிய தமிழகத்தின் 4 நகரங்களில் ஆய்வகம்". News18 Tamil. 2021-11-30. 2021-11-30 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமிக்குரோன்_திரிபு&oldid=3387887" இருந்து மீள்விக்கப்பட்டது