உள்ளடக்கத்துக்குச் செல்

ஓனோமார்கஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓனோமார்கஸ் (Onomarchus, பண்டைக் கிரேக்கம்Ὀνόμαρχος ) என்பவர் மூன்றாம் புனிதப் போரில் போசியன்களின் தளபதியாக இருந்தவர். இவர் பிலோமீலசின் சகோதரரும், தியோட்டிமசின் மகனும் ஆவார். இவரது சகோதரரின் மரணத்திற்குப் பிறகு இவர் போசியன்களின் தளபதியாக ஆனார். மேலும் இவர் இறுதியாக தோல்வி அடையும் வரை ஒரு போர்வெறிக் கொள்கையைப் பின்பற்றினார்.

போசியன்களின் தளபதி

[தொகு]

ஓனோமார்கஸ் தனது சகோதரர் பிலோமெலசின் தலைமையிலான போசியன் இராணுவத்தின் ஒரு பிரிவுக்கு தளபதியாக இருந்தார். டித்தோரியாவில் நடந்த போர் நடவடிக்கையில் பிலோமெலஸ் இறந்தார். போருக்குப் பிறகு சிதறிய போசியன் படைகளை ஒருங்கிணைத்து ஓனோமார்கஸ் தெல்பிக்கு பின்வாங்கினார். பின்னர் நடந்த மக்கள் கூட்டத்தில் ஓனோமார்கஸ் மிதவாத பிரிவினரின் ஆலோசனைக்கு எதிராக போரைத் தொடர வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தினார்.

கிமு 354 / 353 குளிர்காலத்தில், போசியன்கள் பிலோமெலசுக்கு அடுத்து ஓனோமார்கசை தலைமைத் தளபதியாக நியமிக்க முடிவு செய்தனர். [1] இவரது போர்த்தொடருக்கான நிதியுதவியைப் பொறுத்த வரை, தெல்பியின் அப்பலோ கோயிலின் புனிதப் காணிக்கை நிதியிலிருந்து 'கடன் வாங்கிய' அவரது சகோதரர் மற்றும் முன்னோடிகளை விட ஓனோமார்கஸ் ஒரு படி மேலே சென்று கூச்சமில்லாமல் மிகுதியாக செலவழித்தார். இருப்பினும், துல்லியமான பதிவுகளை வைத்திருந்தார். அவர் உண்மையில் போசிசை எதிர்த்த அனைத்து அரசுகளின் சொத்துக்களையும் பறிமுதல் செய்தார். மேலும் கோயியில் திரட்டப்பட்டிருந்த செல்வத்தை முழுமையாகப் பயன்படுத்தினார். தெல்பியின் செல்வத்தைப் பயன்படுத்தி, பெரிய அளவிலான கூலிப்படையைத் திரட்டி அவற்றை பராமரித்தார். மேலும் பல எதிரி நாடுகளுக்கு கையூட்டு கொடுத்து, தெசாலியர்களின் கூட்ணியில் இருந்து வெளியேறி நடுநிலை நிலையை மேற்கொள்ளுமாறு செய்தார். இவ்வாறு, மிகவும் ஆபத்தான தனது எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொண்ட இவர், மீதமுள்ள எதிரிகளுக்கு சவாலாக இருந்தார்.

போர்த்தொடர்கள்

[தொகு]

ஓனோமார்கசின் போர்த்தொடர்கள் கிமு 353 இல் தொடங்கியது. [1] இவர் லோக்ரிஸ் மீது படையெடுத்தார். திரோனியம் நகரத்தை கைப்பற்றினார். ஆம்பிசாவை சரணடைய வற்புறுத்தினார். டோரியன் டெட்ராபோலிசை அழித்தார். இறுதியாக போயோட்டியாவுக்கு எதிராக தனது ஆயுதங்களைத் திருப்பினார். அங்கு இவர் ஆர்கோமெனசை அழைத்துச் சென்று செரோனியாவை முற்றுகையிட்டார். ஆனால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாமல் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

செரோனியாவின் முற்றுகையைத் தொடர்ந்து, மக்கெடோனின் இரண்டாம் பிலிப்பால் தாக்கப்பட்ட பெரேயின் சர்வாதிகாரி லைகோஃப்ராவிடமிருந்து இவரது உதவி கோரப்பட்டது. முதலில் ஓனோமார்கஸ் 7000 பேர் கொண்ட இராணுவத்துடன் தனது சகோதரர் பைலசை தெசலிக்கு அனுப்பினார். ஆனால் அவர்கள் பிலிப்பின் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர். ஓனோமார்கஸ் லைகோஃப்ரானுக்கு ஆதரவாக தனது முழுப் படையுடன் அணிவகுத்துச் சென்றார். இரண்டு தொடர்ச்சியான போர்களில் பிலிப்பை தோற்கடித்து, அவரை தெசலியிலிருந்து வெளியேற்றினார்.

ஓனோமார்கஸ் பின்னர் போயேட்டியா திரும்பினார். பின்னர் இவர் ஒரு போரில் வீழ்த்தி கொரோனியா நகரத்தை கைப்பற்றினார். மீண்டும் தெசலி மீது படையெடுத்த பிலிப்பிற்கு எதிராக போரிட லைகோஃப்ரானால் உதவிக்கு இவர் மீண்டும் அழைக்கப்பட்டார். 20,000 பேர் கொண்ட காலாட்படை, 500 பேர் கொண்ட குதிரைப்படை (மற்றொரு தரவின்படி 3000 குதிரைகள் [2] ) கொண்ட தனது படையுடன் தன் கூட்டாளிக்கு ஆதரவாக ஓனோமார்கஸ் விரைந்தார். இருப்பினும், பிலிப் இவரை விட மிகுதியான படை வலிமையோடு இருந்தார்: அங்கே ஒரு கடும் சண்டை நடந்தது. இதில் தெசலியன் குதிரைப்படையின் மேன்மை பிலிப்புக்கு ஆதரவாக போர் முடிவு ஏற்பட காரணமாயிற்று.

தோல்வி

[தொகு]

குரோக்கஸ் ஃபீல்ட் போரில் ஓனோமார்கஸ் தோற்கடிக்கப்பட்டார். இந்தப் போர் கி.மு. சு 352 இல் ஓனோமார்கோசின் தலைமையிலான போசிசின் படைகளுக்கும், பிலிப்பின் கீழ் ஒருங்கிணைந்த தெசாலியா மற்றும் மாசிடோனிய இராணுவத்திற்கும் இடையே நடந்தது. போசியன்கள் பிலிப்பின் படைகளால் தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்டனர். [3] [4]

இறப்பு

[தொகு]

கிமு 352 இல் இறந்த ஓனோமார்கசின் மரணம் பற்றி எழுதபட்டுள்ள விவரங்களில் மாறுபாடுகள் உள்ளன. [5] போரில் இருந்து தப்பிப் பிழைத்த ஓனோமார்கஸ் மற்றும் பலர் கடலோரத்தில் ஏதெனிய தளபதி சார்சின் கீழ் இருந்த ஏதெனியன் கப்பல்களை நீந்தி அடையலாம் என்ற நம்பிக்கையில் நீந்திச் சென்று கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. உரோமானிய வரலாற்றாசிரியர் யூசிபியஸ் கப்பலுக்கு நீந்திச் செல்லும் இந்த முயற்சியில் மூழ்கிவிட்டார் என்று கூறுகிறார். [6] பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியரான டியோடோரஸ் (XVI 35 [7] ) இவர் பிலிப்பால் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறுகிறார். [8] இவர் தன் சொந்த வீரர்களாலேயே ஈட்டிகளால் குத்தப்பட்டு இறந்ததாக பாசேனியஸ் கூறுகிறார்.

ஓனோமார்கசின் உடல் பிலிப்பால் கைப்பற்றப்பட்டது அவர் செய்த பலிகளுக்கான தண்டனையாக சிலுவையில் அறையப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெல்பியில் உள்ள அப்பல்லோ சிற்றாலயத்திற்கு எதிராக அவர்கள் செய்த செயல்களுக்கு தண்டனையாக அவர் 3000 போசியன் பணயக்கைதிகளையும் கொன்றதாக சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Sealey, R. (1976). A History of the Greek City States, Ca. 700-338 B.C. University of California Press. p. 467. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0520031776.
  2. von Ranke, L.; Prothero, G.W. (30 October 2014). Universal History. Cambridge University Press. p. 380. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781108075183. பார்க்கப்பட்ட நாள் 2015-04-12.
  3. Buckley, T. (21 August 2006). Aspects of Greek History: A Source-Based Approach. Routledge. p. 351. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1134857330.
  4. Carney, E.; Ogden, D. (26 May 2010). Philip II and Alexander the Great: Father and Son, Lives and Afterlives. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199890002.
  5. Roisman, J. (12 July 2011). Ancient Greece from Homer to Alexander: The Evidence. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1405127752.
  6. Gabriel, R.A. (31 Aug 2010). Philip II of Macedonia: Greater Than Alexander. Potomac Books, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1597975681.
  7. Parker, V. (19 November 2013). A History of Greece, 1300 to 30 BC. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1118559338.
  8. Anthon, Charles (1841). A Classical Dictionary: Containing ... Proper Names Mentioned in Ancient Authors, and Intended to Elucidate ... Points Connected with the Geography, History, Biography, Mythology and Fine Arts of the Greeks and Romans ... an Account of Coins, Weights and Measures. Harper & Bros.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓனோமார்கஸ்&oldid=3604215" இலிருந்து மீள்விக்கப்பட்டது