ஒம்புட்ஸ்மன் (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒம்புட்ஸ்மன் (Ombudsman) என்பது இலங்கையின் நிர்வாக அமைப்புகளில் உள்ள ஒரு பதவியாகும். அரசின் அலுவலர்கள் தவறிழைத்தாலோ, உரிமைகளை மீறினாலோ அதனைப் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும் அதிகாரி ஒம்புட்ஸ்மன் என்று அழைக்கப்படுகிறார். உலக அரசியல் வரலாற்றில் ”ஒம்புட்ஸ்மன்” (குறைகேள் அதிகாரி) எனப்படும் நிர்வாகத்திற்கான நாடாளுமன்ற ஆணையாளர் என்ற பதவி சுவிச்சர்லாந்து நாட்டில் 1809ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பின்லாந்தில் 1819ம் ஆண்டிலும், டென்மார்க்கில் 1954ம் ஆண்டிலும், நியுசிலாந்தில் 1962ம் ஆண்டிலும், இங்கிலாந்தில் 1967ம் ஆண்டிலும் ஏற்படுத்தப்பட்டது. இலங்கையில் 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இலங்கையில் ஒம்புட்ஸ்மன் பதவி[தொகு]

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது அரசியலமைப்பில் (1978) முதற் தடவையாக ஒம்புட்ஸ்மன் பதவி ஏற்படுத்தப்பட்டது. அரசியலமைப்பின் 156வது உறுப்புரை இது பற்றிய ஏற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.

156வது உறுப்புரை 1ம் பந்தி பின்வருமாறு கூறுகின்றது. அரசாங்க அலுவலர்கள், பகிரங்கக் கூட்டுத்தாபன அலுவலர்கள், உள்ளூர் அதிகாரசபை அலுவலர்கள், அதையொத்த வேறு நிறுவனங்களின் அலுவலர்கள் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார்கள் என்றும், அநீதிகளை இழைத்துவிட்டார்கள் என்றும் கூறுகின்ற முறைப்பாடுகள் அல்லது சார்த்தல்கள் பற்றி அத்தகைய சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்கவும் அவற்றுக்கமைவாகவும் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்குப் பொறுப்பாகவுள்ளவரான நிர்வாகத்துக்கான நாடாளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) என்ற பதவியைத் தாபிப்பதற்காகச் சட்டத்தின் மூலம் நாடாளுமன்றம் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

நிர்வாகத்துக்கான நாடாளுமன்ற ஆணையாளர் சனாதிபதியினால் நியமிக்கப்படல் வேண்டும் என்பதுடன், நன்னடத்தை உடையவராயிருக்கும் காலத்தின்போது அவர் பதவி வகித்தலும் வேண்டும். அவரின் சம்பளம் நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும். அதேநேரத்தில் பதவிக்காலத்தில் அவரின் சம்பளம் குறைக்கப்படவும் மாட்டாது.

பதவி வறிதாதல்[தொகு]

நிர்வாகத்திற்கான நாடாளுமன்ற ஆணையாளரினது பதவி வறிதாதல் சம்பந்தமாக 4ம் பந்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

அ. அவர் இறப்பதன் மேல்.

ஆ. இராஜினாமாச் செய்வதன் மேல்.

இ. சட்டத்தினால் நிர்ணயிக்கப்படும் வயதை அடைவதன் மேல்.

ஈ. சுகவீனம் அல்லது உடல்பலவீனம், மனப்பலவீனம் காரணமாக ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்வதன் மேல்.

உ. அவரைப் பதிவிலிருந்து அகற்றுமாறு கூறும் நாடாளுமன்றத்தின் தீர்மானத்தின் மீது ஜனாதிபதியினால் அவர் பதவியிலிருந்து அகற்றப்படுவதன் மேல்.

செயற்பாடுகள், அதிகாரங்கள்[தொகு]

நாடாளுமன்றத்தின் 1981ம் ஆண்டு 15ம் இலக்க சட்ட மூலம் ஒம்புட்ஸ்மனின் செயற்பாடுகள், அதிகாரங்கள் பற்றிக் குறிப்பிடும் முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • ஒம்புட்ஸ்மனுக்குச் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் நாடாளுமன்ற முறைப்பாட்டுக் குழுவாலேயே சமர்ப்பிக்கப்படும்.
  • ஆகவே முறைப்பாடுகள் நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாகவே அனுப்பப்படுதல் வேண்டும்.
  • குறித்த முறைப்பாட்டை ஒம்புட்ஸ்மனுக்குச் சமர்ப்பிப்பதா? இல்லையா? என தீர்மானிப்பது நாடாளுமன்ற முறைப்பாட்டுக் குழுவேயாகும்.
  • ஒம்புட்ஸ்மனுக்குச் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாட்டை (தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கிணங்க) விசாரணை செய்து அறிக்கையை சபாநாயகருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

நடைமுறை[தொகு]

பிரஜைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி வழங்கப்படும் என்ற நோக்கில் எமது அரசியலமைப்பில் ஒம்புட்ஸ்மன் பதவி ஏற்படுத்தப்பட்ட போதிலும் நடைமுறையை நோக்குமிடத்து உரிய விசாரணையை ஒம்புட்ஸ்மனுக்கு வழங்கக் கையாளும் வழிமுறையானது சிக்கல்மிக்கது என்பதுடன், அரசியலமைப்பு ரீதியாகவும் நாடாளுமன்ற சட்டமூலத்தின் மூலமாகவும் ஒம்புட்ஸ்மனுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைவானதாகும் என்பதும் கூறப்பட்டு வரும் குறைபாடுகளாகும்.

ஆதாரம்[தொகு]

  • இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது அரசியலமைப்பு (156வது உறுப்புரை, 156வது உறுப்புரை 1ம் பந்தி)
  • நாடாளுமன்றத்தின் 1981ம் ஆண்டு 15ம் இலக்க சட்ட மூலம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒம்புட்ஸ்மன்_(இலங்கை)&oldid=3480284" இலிருந்து மீள்விக்கப்பட்டது