உள்ளடக்கத்துக்குச் செல்

ஒடியல் புட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒடியல் பிட்டு அல்லது ஒடியல் புட்டு என்பது ஒடியல் மாவில் இருந்து தயாரிக்கப் படும் ஒருவகை உணவுப் பண்டம். இது இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. இது மிகவும் சத்தான உணவு என தமிழ் மக்களால் கருதப்படுகிறது. ஒடியல் பிட்டு கூடுதலாக மதிய உணவாகவே உண்ணப்பட்டது. சாதாரண ஒடியல்பிட்டு தேங்காய்ப்பூ போட்டு அவிக்கப்பட்டு மதியஉணவாக சோறுடன் சேர்த்து உண்ணப்படும். வயல் வேலைக்குச் செல்பவர்கள் ஒடியல்பிட்டை அவித்து உதிர்த்தாமல் வைத்து விடுவார்கள். இது கட்டியாக இறுகி விடும். அடுத்தநாள் காலையில் கடினமாக இருக்கும் அப்பிட்டை மெது மெதுவாக உதிர்த்தி தேநீருடன் சேர்த்துச் சாப்பிட்டுச் செல்வார்கள். ஒடியல் பிட்டுக்கு மரக்கறிகள் போட்டும் அவிப்பார்கள். இது காய்ப்பிட்டு எனப்படும். இப்பிட்டை அவித்து இறக்கியவுடன் சூடாக இருக்கும் போதே நல்லெண்ணெய் விட்டுக் கிளறிச் சாப்பிடுவார்கள். நெத்தலி போட்டு அவிக்கப்படும் நெத்தலிப்பிட்டும் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒன்று.

செய்முறை[தொகு]

தேவையான பொருட்கள் :

 • ஒடியல் மா
 • தேங்காய்ப் பூ
 • தண்ணீர்
 • உப்பு (சிறிதளவு )

விரும்பினால்

 • கத்தரிக்காய்
 • கீரை
 • பச்சை மிளகாய்
 • நெத்தலி

செய்முறை

 • ஒடியல் மாவை ஒன்றுக்கு மூன்று என்ற அளவு தண்ணீரில் கரைத்து பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும்.
 • மா கீழே அடைந்ததும் மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விடவும். இப்படி இரண்டு மூன்று தடவைகள் செய்யவும். இதனால் மாவின் காறல் தன்மை குறையும்.
 • பின்னர் மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து, பிழிந்தெடுக்கவும்.
 • இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போல சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அவிப்பதற்குத் தேவைப் படும் தண்ணீரை விட மிகக் குறைந்த அளவு தண்ணீரே இதைக் குழைப்பதற்குத் தேவைப்படும்.
 • குழைத்த மாவுள் நிறையத் தேங்காய்ப்பூ போட்டு ஆவியில் அவிக்கவும். தேங்காய்ப்பூவை ஒரு தரம் தண்ணீர் விட்டுப் பிழிந்து பாலை எடுத்த பின்னரே ஒடியல் பிட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். தேங்காய்ப்பூ பாலுடன் ஈரலிப்பாக இருந்தால் பிட்டு நீர்த்து விடும்.
 • இந்தப் பிட்டு மாவுக்குள் கத்தரிக்காய், கீரை.. போன்ற காய்கறிகள், சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பச்சை மிளகாய், தாராளமான தேங்காய்ப் பூ... போன்றவைகளைப் போட்டு அவித்தால் மிகவும் சுவையாக இருக்கும். காய்கள் போட்டு இப்படி அவிக்கும் பிட்டுக்கு தேங்காய்ப்பூவிலிருந்து பாலைப் பிழிந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
 • பச்சை மிளகாய், நெத்தலி போட்டும் அவிக்கலாம்.
 • பிட்டை அவித்து இறக்கியதும் உடனேயே பிரித்து, உதிர்த்து விட வேண்டும். இல்லாவிடில் பிட்டு கட்டியாக இறுகி விடும்.

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடியல்_புட்டு&oldid=2743051" இலிருந்து மீள்விக்கப்பட்டது