ஒக்குசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒக்குசாய்
北斎
1839ல் வரைந்த தன்னுருவப் படமொன்றில் கட்சுசிக்கா ஒக்குசாய்.
தேசியம் சப்பானியர்
அறியப்படுவது ஓவியம், உக்கியோ-இ மரக்குற்றி அச்சோவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள் பெரிய அலை

ஒக்குசாய் என்று பரவலாக அறியப்படும் கட்சுசிக்கா ஒக்குசாய் (葛飾北斎? அக்டோபர் அல்லது நவம்பர் 1760–மே 10, 1849) எடோ காலத்தைச் சேர்ந்த ஒரு சப்பானிய ஓவியரும், உக்கியோ-இ வகை ஓவியரும், அச்சோவியரும் ஆவார். இவர் காலத்தில் சப்பானில் சீன ஓவியங்களில் இவர் வல்லுனராக விளங்கினார். ஏடோவில் (இன்றைய டோக்கியோ) பிறந்த ஒக்குசாயைப், பூசி மலையின் முப்பத்தாறு காட்சிகள் (富嶽三十六景 Fugaku Sanjūroku-kei?, c. 1831) என்னும் மர அச்சு ஓவியத் தொடரின் ஆக்குனராகப் பலரும் அறிவர். உள்ளூர் சுற்றுப் பயண வளர்ச்சியினால் ஏற்பட்ட தேவையை நிறைவேற்றுவதற்காகவும், பூசி மலையில் அவருக்கு இருந்த தனிப்பட்ட விருப்புக் காரணமாகவுமே ஒக்குசாய் இந்த முப்பத்தாறு காட்சிகளையும் வரைந்தார். இந்த ஓவியத் தொடரே, குறிப்பாக, பெரிய அலை, தெளிவான காலநிலையில் பூசி ஆகியனவே ஒக்குசாய்க்கு சப்பானிலும், வெளிநாடுகளிலும் புகழ் தேடிக் கொடுத்தன.

இதற்கு முந்திய ஒக்குசாயின் ஆக்கங்களும் முக்கியமானவையே ஆயினும், மேற்சொன்ன முப்பத்தாறு ஓவியங்களுக்குப் பின்னரே இவரது பிற ஓவியங்களும் கவனிப்புப் பெற்றன.

இளமைக் காலமும், ஓவியப் பயிற்சியும்[தொகு]

ஒக்குசாய், ஓரெக்கி காலப்பகுதியின் பத்தாவது ஆண்டில், ஒன்பதாம் மாதம் (1760 அக்டோபர்-நவம்பர்) 23 ஆவது நாள், சப்பானின் ஏடோவின் கட்சுசிக்கா மாவட்டத்தில், ஒரு கைப்பணியாளர் குடும்பத்தில் பிறந்தார். இவரது சிறுபராயப் பெயர் தோக்கித்தாரோ. இவரது தந்தையார் ஒரு ஆடி செய்பவராக இருந்தார். இவரது தந்தையார் ஒக்குசாயைத் தனது வாரிசாக ஆக்கவில்லை என்பதால் இவர் அவரது ஆசைநாயகியின் மகனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஒக்குசாய் தனது ஆறாவது வயதிலேயே ஓவியம் வரையத் தொடங்கிவிட்டார். ஆடித் தயாரிப்பிலும் அவற்றின் கரைகளில் கோலங்களை வரைந்து அழகூட்டுவது உண்டென்பதால் ஒக்குசாய் தனது தந்தையிடமே ஓவியம் பழகியிருக்கக்கூடும்.

ஒக்குசாயின் வாழ்க்கைக் காலத்தில் அவருக்கு 30க்கு மேற்பட்ட பெயர்கள் புழங்கியதாகத் தெரிகிறது. அக்காலத்து ஓவியர்களிடையே பல பெயர்களை வைத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தது ஆயினும், ஒக்குசாய் வைத்துக்கொண்ட பெயர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆகும். இவர் அடிக்கடி பெயரை மாற்றிக்கொண்டார். இம் மாற்றங்கள் இவரது கலை உற்பத்தி பாணி என்பவற்றோடு தொடர்பு பட்டிருந்தது. இது, இவரது வாழ்க்கையைக் கட்டங்களாகப் பிரிப்பதற்கு வசதியாக அமைகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒக்குசாய்&oldid=2209932" இருந்து மீள்விக்கப்பட்டது