ஐ நூன்
| ஐ நூன் | |
|---|---|
திரையரங்கு வெளியீட்டுச் சுவரொட்டி | |
| இயக்கம் | பிரெட் சின்னேமன் |
| தயாரிப்பு | இசுடான்லி கிரேமர் |
| மூலக்கதை | "த டின் ஸ்டார்" படைத்தவர் யோவான் டபுள்யூ. கன்னிங்கம் |
| திரைக்கதை | கார்ல் போர்மன் |
| இசை | திமிட்ரி தியோம்கின் |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | புலாய்ட் கிராஸ்பி |
| படத்தொகுப்பு | எல்மோ வில்லியம்ஸ் ஹாரி டபுள்யூ. கெர்ஸ்டாட் |
| கலையகம் | இசுடான்லி கிரேமர் புரடக்ஷன்ஸ் |
| விநியோகம் | யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் |
| வெளியீடு | சூலை 24, 1952 |
| ஓட்டம் | 1:25 மணி நேரம் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | ஐஅ$0.73 மில்லியன் (₹5.2 கோடி)[1] |
| மொத்த வருவாய் | ஐஅ$12 மில்லியன் (₹85.8 கோடி)[2] |
ஐ நூன் (High Noon) என்பது 1952ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்தியத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இசுடான்லி கிரேமர் தயாரித்திருந்தார். கார்ல் போர்மென் திரைக்கதை அமைத்திருந்தார். பிரெட் சின்னேமன் இந்தத் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் கேரி கூப்பர் நடித்திருந்தார். நிகழ்நேரத்தில் விரிவதாக இதன் கதைக்களம் அமைந்துள்ளது. பட்டணத்தின் பாதுகாவலர் (மார்ஷல்) ஒருவர், ஒரு கொலைகாரர்களின் கூட்டத்தைத் தனியாகச் எதிர்கொள்வதா அல்லது தனது புது மனைவியுடன் பட்டணத்தை விட்டு வெளியேறுவதா என அவர் முடிவெடுக்க வேண்டிய சூழல் எழும்போது, அவரது கடமையுணர்வு சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது.
வெளியான சமயத்தில், அதன் அரசியல் சார்ந்த கருப்பொருள் காரணமாகப் பல சர்ச்சைகளில் சிக்கியபோதிலும், இப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அவற்றில் நான்கு விருதுகளை (சிறந்த நடிகர், படத்தொகுப்பு, பின்னணி இசை, பாடல்)[3] பெற்றது. மேலும் நான்கு கோல்டன் குளோப் விருதுகளையும் (சிறந்த நடிகர், துணை நடிகை, பின்னணி இசை, கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவு)[4] தட்டிச் சென்றது. விருதுகளை வென்ற பின்னணி இசையை, உக்ரைன்/உருசியப் பின்னணியைச் சேர்ந்த இசையமைப்பாளர் டிமிட்ரி டியோம்கின் அமைத்திருந்தார்.
வெளியானதும், ஹை நூன் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வழக்கமான மேற்கத்திய அதிரடித் திரைப்படங்களை எதிர்பார்த்த விமர்சகர்களும் பார்வையாளர்களும், படத்தின் தார்மீக மற்றும் உணர்ச்சி மோதல்கள் மீதான கவனத்தால் ஆச்சரியமடைந்தனர். இருந்தபோதிலும், இது வணிகரீதியாக வெற்றி பெற்றது. காலப்போக்கில், இதுவரையில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 1989-இல், "பண்பாட்டு ரீதியாக, வரலாற்று ரீதியாக அல்லது அழகியல் ரீதியாக குறிப்பிடத்தக்கது" என்ற காரணத்திற்காக, அமெரிக்காவின் தேசிய திரைப்படப் பதிவேட்டில் பாதுகாப்பதற்காக, காங்கிரஸ் நூலகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 25 படங்களில் ஒன்றாக இது இடம்பெற்றது.[5][6] இதன் கதையும் முடிவும், பல மேற்கத்திய திரைப்படங்கள் உட்பட, பிற்காலத்தின் எண்ணற்ற திரைப்படங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளன.
கதை
[தொகு]நியூ மெக்சிகோ பிரதேசத்தில் உள்ள ஹேட்லிவில் என்ற சிறிய நகரில் ஒரு தேவாலயத்தில் ஏமி ஃபௌலருக்கும், மார்ஷல் வில் கேனுக்கும் திருமணம் நடக்கிறது. வில்லுக்கு அந்த நகரைக் காக்கும் பொறுப்பு இன்றுடன் முடிவடைவதால், அதிலிருந்து ஓய்வு பெறத் தயாராகிறான். அந்த மகிழ்ச்சியான இணையர், மற்றொரு கிராமத்தில் புதுவாழ்வு துவக்க விரைவில் புறப்படவிருக்கின்றனர். இந்நிலையில், கேனால் சிறைக்கு அனுப்பப்பட்ட கொடூரக் குற்றவாளியான ஃபிராங்க் மில்லர் விடுதலையாகிவிட்டதாகவும், நண்பகல் தொடருந்தில் வந்து சேரவிருப்பதாகவும் செய்தி வருகிறது. மில்லரை வரவேற்க, அவனின் தம்பி பென், ஜாக் கோல்பி, கூட்டாளி ஜிம் பியர்ஸ் ஆகியோர் தொடருந்து நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
தீவிர குவாக்கர் மதப்பற்றுள்ளவளும், அமைதியை விரும்புவளுமான ஏமி, மில்லர் வருவதற்குள் ஊரை விட்டு வெளியேறிவிடுவதுதான் சரி என்கிறாள். ஆனால், கேனின் கடமையுணர்வும் கௌரவமும் அவனை அங்கேயே தங்க வைக்கின்றன. அதுமட்டுமின்றி, மில்லரும் அவனது கூட்டாளிகளும் எப்படியும் தன்னைத் தேடிப்பிடித்துவிடுவார்கள் என்றும் அவன் கூறுகிறான். ஏமி கேனுக்கு ஒரு இறுதி கோபத்துடன் அவன் வந்தாலும் அல்லது, வராவிட்டாலும், அவள் நண்பகல் தொடருந்தில் கிளம்பிவிடுவேன் என்கிறாள்.
கேன் தன் பழைய நண்பர்களையும் கூட்டாளிகளையும் சந்தித்து தன் உதவிக்கு அழைக்கிறான். ஆனால் யாரும் வரவில்லை. மில்லருக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி பெர்சி மெட்ரிக் தப்பி ஓடுகிறார், மேலும் கேனையும் தப்பிச் செல்லுமாறு வற்புறுத்துகிறார். கேனின் இளம் துணை அதிகாரியான ஹார்வி பெல், கேன் தன்னைத் தனக்குப் பிறகு அவனது பதவிக்குப் பரிந்துரைக்காததால் கசப்புடன் இருக்கிறான். நகரத் தலைவர்களிடம் கேன் தனக்காகப் பரிந்துரை செய்தால் மட்டுமே கேனுக்கு உதவியாக நிற்பேன் என்று கூறுகிறான். கேன் அதற்கு மறுத்ததும், பெல் தனது அடையாள அட்டையையும் கைத்துப்பாக்கியையும் கேனிடம் ஒப்படைக்கிறான். மதுக்கடையில் நுழையும் கேன், தனது உதவிக்கு ஆறுபேரை அழைக்கிறான். ஆனால் யாரும் வர முன்வரவில்லை. தேவாலயத்தில் வில்லுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசி நீங்கள் இல்லையென்றால் கொடியவன் மில்லர் இங்கே வரமாட்டான் எனவே நீங்கள் இங்கிருந்து செல்வதே நல்லது என்று தங்கள் சுயநலத்தைக் காட்டுகின்றனர். துப்பாக்கிச் சண்டை நகரத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்று கவலைப்படும் சில நகரவாசிகள், மோதலைத் தவிர்க்கும்படி கேனிடம் வற்புறுத்துகின்றனர். அவர்களில் சிலர் மில்லரின் நண்பர்கள், ஆனால் மற்றவர்கள் கேன் நகரத்தை முதலில் தூய்மைப்படுத்தியதற்காக அவர் மீது கோபம் கொள்கிறனர். கேனின் போராட்டத்திற்கும் நகரத்திற்கும் பொறுப்பல்ல என்று பிறர் நம்புகின்றனர். சாம் ஃபுல்லர் அவரது வீட்டில் ஒளிந்துகொள்கிறான், இதனால் அவரின் மனைவி மில்ட்ரெட், அவர் வீட்டில் இல்லை என்று கேனிடம் பொய் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறாள். ஜிம்மி உதவ முன்வருகிறான், ஆனால் அவனுக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை, உடல் நலமும் இல்லை. கேனை ஊரை விட்டுச் செல்ல மேயர் ஊக்குவித்ததால், உதவத் தயாராக இருப்பதாகத் தோன்றிய சில தன்னார்வலர்களும் உதவ முன்வரவில்லை. ஹெர்ப் பேக்கர் உதவ ஒப்புக்கொள்கிறான், ஆனால் தான் மட்டுமே தன்னார்வலராக உள்ளதை உணர்ந்ததும் பின்வாங்கிவிடுகிறான். 14 வயது ஜானி கடைசியாக உதவிக்கு வர முன் வருகிறான். கேன் அவனது தைரியத்தைப் பாராட்டி, அவனது உதவியை மறுத்துவிடுகிறான்.
ஒரு காலத்தில் மில்லரின் காதலியாகவும், பின்னர் கேனின் காதலியாகவும், அதன்பின் பெல்லின் காதலியாகவும் இருந்த ஹெலன் ரமீரஸை ஏமி எதிர்பாராத விதமாக சந்திக்கிறாள். கேன் ஊரை விட்டுச் செல்ல மறுப்பதற்குக் காரணம், அவன் ஹெலனைப் பாதுகாக்க விரும்புவதே என்று ஏமி கருதி இருந்தாள். ஆனால், கேனுக்கு அவள் மீது எந்தப் பற்றுதலும் இல்லை என்றும், தானும் ஊரை விட்டுச் செல்வதாகவும் ஹெலன் அவளிடம் கூறுகிறாள். ஏமி ஏன் கேனுடன் தங்க மறுக்கிறாள் என்று ஹெலன் கேள்வி எழுப்புகிறாள். அதற்கு ஏமி தன் சகோதரனும் தந்தையும் துப்பாக்கிக்கு பலி கொடுத்திருப்பதால், அந்தத் துயர நிகழ்வு தன்னை குவாக்கர் மதத்திற்கு மாற்றியதாகவும் ஏமி விளக்குகிறாள். இருப்பினும், அவளின் கணவனுக்குத் தேவைப்படும் நேரத்தில் துணையாக நிற்காததற்காக ஹெலன் ஏமியைக் கடிந்துகொள்கிறாள். ஏமியின் இடத்தில் தான் இருந்திருந்தால், துப்பாக்கியை ஏந்தி கேனுடன் சேர்ந்து போராடியிருப்பேன் என்றும் கூறுகிறாள்.
பெல் ஒரு குதிரைக்கு சேணம் பூட்டி, அதை எடுத்துக்கொள்ளும்படி கேனை வற்புறுத்துகிறான். இறுதியில் அவர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்படுகிறது. அதில் பெல் மயக்கமடைகிறான். பிறகு, கேன் தனது அலுவலகத்திற்கு வந்து தனது உயிலை எழுதுகிறான். நண்பகலை நெருங்கும் வேளையில், மில்லரையும் அவனது கும்பலையும் எதிர்கொள்ள கேன் தெருவுக்குச் சென்று காத்திருக்கிறார். ஏமியும் ஹெலனும் தொடருந்தை நோக்கிச் செல்லும் ஒரு வண்டியில் அவ்வழியே செல்கிறனர். தொடருந்து வந்து சேர, அந்த இரு பெண்களும் ஏறியதும் மில்லர் கீழே இறங்குகிறான்.
கேன் ஆள் நடமின்றி வெறிச்சோடிய பிரதான வீதியில் தனியாக நடந்து செல்கிறான். மில்லரின் ஆட்கள் துப்பாக்கியுடன் தயாராகின்றனர். முதல் தாக்குதலிலேயே ஃபிராங்க் மில்லரின் சகோதரனான பென்னை கேன் கொன்றுவிடுகிறான். தொடருந்து புறப்படுவதற்குச் சற்று முன்பு, துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்ட ஏமி, நகரத்தை நோக்கி திரும்பி ஓடி வருகிறாள். கேன் ஒரு குதிரைக் கொட்டகையில் தஞ்சம் அடைகிறான், அவனைப் பின்தொடர்ந்து உள்ளே வந்த கோல்பியைக் கொல்கிறான். அவனை வெளியே வரவழைப்பதற்காக மில்லர் அந்தக் கொட்டகைக்குத் தீ வைக்கிறான். கேன் குதிரைகளைத் திறந்துவிட்டு, அவற்றில் ஒன்றின் மீது ஏறித் தப்பிக்க முயற்சிக்கிறான், ஆனால் சுடப்பட்டு கீழே தள்ளப்பட்டு சுற்றிவளைக்கப்படுகிறான். தனது சமய நம்பிக்கைகளுக்கு மாறாக, ஏமி பெல்லின் கைத்துப்பாக்கியை எடுத்து, பியர்ஸை பின்னாலிருந்து சுடுகிறாள். இறுதியில் ஃபிராங்க் மில்லர் மட்டுமே எஞ்சியிருக்க, அவன் கேனை மறைவிடத்தில் இருந்து வெளியே வரவழைப்பதற்காக ஏமியை மனிதக் கேடயமாகப் பிடித்துக்கொள்கிறான். ஏமி மில்லரின் முகத்தைக் கீறுகிறாள். அதனால் அவன் அவளைத் தரையில் தள்ள, கேன் அவனைச் சுட்டுக் கொல்கிறான்.
தம்பதியினர் ஒருவரையொருவர் தழுவிக்கொள்கின்றனர். ஒட்டுமொத்த ஊர் மக்களும் கேனை நோக்கி வர, கேன் ஜானியைப் பார்த்துப் புன்னகைக்கிறான். ஆனால் மற்றவர்களை வெறுப்புடன் நோக்குகிறான். தனது மார்ஷல் நட்சத்திரத்தைத் வீதியில் போட்டுவிட்டு, ஏமியுடன் புறப்பட்டுச் செல்கிறான்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Champlin, C. (October 10, 1966). "Foreman hopes to reverse runaway". Los Angeles Times. ProQuest 155553672.
- ↑ Tino Balio, United Artists: The Company That Changed the Film Industry, University of Wisconsin Press, 1987, p. 47.
- ↑ "The 25th Academy Awards – 1953". oscars.org. October 4, 2014. Retrieved July 3, 2020.
- ↑ IMDB List of nominations and awards for Stanley Kramer's High Noon.
- ↑ "Entertainment: Film Registry Picks First 25 Movies". Los Angeles Times. September 19, 1989. https://www.latimes.com/archives/la-xpm-1989-09-19-mn-347-story.html.
- ↑ "Complete National Film Registry Listing". Library of Congress. Retrieved October 30, 2020.