ஏ. ஆர். சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. ஆர். சீனிவாசன்
பிறப்பு8 ஏப்ரல் 1933 (1933-04-08) (அகவை 91)
மதராசு மாகாணம், இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்ஏ. ஆர். சீனிவாசன்
ஏ. ஆர். எஸ்
பணிநடிகர், வழக்கறிஞர்
செயற்பாட்டுக்
காலம்
1963 (தற்போது வரை)
பெற்றோர்ஏ. எஸ். இராமமூர்த்தி
ஏ. ஆர். சரஸ்வதி

ஏ. ஆர். சீனிவாசன் (பிறப்பு: ஏப்ரல் 8, 1933) மற்றும் ஏ. ஆர். எஸ் என்றும் அழைக்கப்படும் ஆலங்குடி இராமமூர்த்தி சீனிவாசன் ஓர் இந்திய மேடை நாடக நடிகர், தொலைக்காட்சி நாடக நடிகர் மற்றும் திரைப்பட நடிகராவார்.[1][2][3]

இளமைக்காலம்[தொகு]

இவர் 1933 ஏப்ரல் மாதம் 8ஆம் நாள் சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை ஏ. எஸ். இராமமூர்த்தி மற்றும் தாயார் ஏ. ஆர். சரஸ்வதி.

ஏ. ஆர். எஸ் வழக்கறிஞருக்கான சட்டக்கல்வி பயின்றவர். பிலிப்ஸ் நிறுவனத்தில் சிலகாலம் பணியாற்றியவர் மற்றும் துடுப்பாட்ட வீரராவார். இவர் சீ ஹாக்ஸ் (Sea Hawks) என்ற கழகத்துக்காகவும், தென்சென்னை மண்டலத்துக்காகவும் விளையாடியுள்ளார்.

நாடகத்துறை[தொகு]

தமிழ் நாடகவியலாளரும் திரைப்பட நடிகருமான ஒய்.ஜி. பார்த்தசாரதியால் 1964 இல் மேடைநாடகத்துறைக்கு வந்தார். ஏ. ஆர். எஸ். ஒய் ஜி பியின் யுனெடெட் ஆர்டிஸ்ட் அசோசியேசன் அமைப்பில் இணைந்து ஐம்பதாண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். வாணி கலா மந்திர், ஜெய் தியேட்டர் நிறுவனங்களின் நாடகங்களிலும் நடித்துள்ளார். பதினேழு நாடகங்களை இயக்கியுள்ளார். வெர்டிக்ட், இன்வஸ்ட்மெண்ட் அன்லிமிட்டட், அண்டர் செகரட்டரி, கண்ணன் வந்தான், மெழுகு பொம்மைகள், சுஜாதா, பாமினி, சுபேதார் சுதர்சனம் ஆகிய நாடகங்கள் இவர் நடித்த நாடகங்களுள் குறிப்பிடத்தக்கன.

திரைத்துறை[தொகு]

1964இல் ராமன் பரசுராமன் என்னும் தெலுங்கு மொழிப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவற்றுள் ஏறத்தாழ 27 படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். பல படங்களில் கிறித்துவப் பாதிரியாராகவும் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி நாடகத்துறை[தொகு]

1980இல் சென்னை தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து தொலைக்காட்சி நாடகங்களிலும் ஆவணப்படங்களிலும் நடித்துவந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவள் தொடரிலும், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூர்யபுத்திரி தொடரிலும் நடித்துள்ளார்

விருதுகள்[தொகு]

நடிப்புத்துறையில் பொன்விழா (ஐம்பதாண்டுகள்) கண்ட ஏ ஆர் எஸ் தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றவர். 2005ஆம் ஆண்டு நாடக அகாடமி வழங்கும் நாடகரத்னா விருதினைப் பெற்றவர். மேடைநாடகத்துறையில் நடிகராய் வழங்கிய பங்களிப்பிற்காக 2011 ஆம் ஆண்டு நடுவணரசின் சங்கீத நாடக புரஸ்கார் விருதையும் பெற்றிருக்கிறார்.

படப்பட்டியல் (முழுமையற்றது)[தொகு]

  1. பூந்தளிர் 1979
  2. ரங்கா 1982
  3. நான் மகான் அல்ல 1984
  4. நாயகன் 1987
  5. சட்டத்தின் திறப்பு விழா 1989
  6. வாட்ச்மேன் வடிவேலு 1994

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._சீனிவாசன்&oldid=3769294" இலிருந்து மீள்விக்கப்பட்டது