எழுத்துமொழி
எழுத்துமொழி (written language) என்பது, மொழி ஒன்றின் எழுத்துமூல வெளிப்பாடு ஆகும். எழுத்துமொழி மனிதனுடைய கண்டுபிடிப்பு. அதனால், ஒருவருக்கு எழுத்துமொழியைக் கற்றுக்கொடுக்க வேண்டும். மாறாக, சிறுவயதிலேயே பிறர் பேசுவதைக் கவனித்துத் தாங்களாகவே மனிதர் பேச்சுமொழியைக் கற்றுக்கொள்கின்றனர். வழக்கில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பேச்சுமொழி உண்டு. ஆனால், எழுத்துமொழி எல்லா மொழிகளுக்கும் இருப்பதில்லை.
இயற்கை மொழிகளுள் எழுத்துமொழியை மட்டுமே கொண்ட மொழி எதுவும் கிடையாது. ஆனால், பேச்சுவழக்கு இல்லாதொழிந்து இறந்த மொழி ஒன்றில், எழுத்துமுறை பிழைத்திருக்குமானால், அம்மொழி எழுத்துமொழியை மட்டுமே கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.
பேச்சுமொழியும், எழுத்துமொழியும்
[தொகு]பரந்த நிலப்பரப்பில் வழங்கும் ஒரு மொழியின் பேச்சுமொழி, சமூகம், தொழில்முறை, சூழல் என்பவற்றுக்கு ஏற்ப பல்வேறுபட்டுக் காணப்படும். இவற்றுள் அரசியல், வணிகம், பொருளாதாரம் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்று விளங்கும் பகுதிக்குரிய பேச்சுமொழியைப் பிற பகுதியினரும் புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதால், அப்பேச்சுமொழியே தகுமொழி (standard dialect) என்னும் நிலையை அடையும். எழுத்துமொழி பெரும்பாலும் இத்தகுமொழியை அடிப்படையாகக் கொண்டே அமையும். ஆனாலும் பல்வேறு காரணங்களால் பிற கிளைமொழியின் வழக்குகளும் எழுத்துமொழியில் இடம்பெறுவது உண்டு.[1]
பேச்சுமொழியுடன் ஒப்பிடும்போது, எழுத்துமொழி மிக மெதுவாகவே மாற்றமடைகின்றது. இவ்விரண்டுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருக்கும்போது அது இரட்டைவழக்கு (diglossia) எனப்படுகிறது.[2] தமிழ் மொழி இரட்டைவழக்கு மொழிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். தமிழில் எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் மிகப்பழைய காலம் முதலே ஒன்றாக இருந்ததில்லை.[3] தொல்காப்பியர் இவற்றைச் செய்யுள் வழக்கு, உலக வழக்கு எனக் குறிப்பிட்டுள்ளார்.[4]