அல் கிதார் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எல் கெட்டார் சண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எல் கெட்டார் சண்டை
துனிசியப் போர்த்தொடரின் பகுதி

துனிசியப் போர்க்களம்
நாள் மார்ச் 23 – ஏப்ரல் 7, 1943
இடம் அல் கிதார், துனிசியா
அமெரிக்க வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா  ஜெர்மனி
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா ஜார்ஜ் பேட்டன் நாட்சி ஜெர்மனி ஹான்ஸ்-யூர்கன் வோன் ஆர்ணிம்
இத்தாலி ஜியோவானி மெஸ்சே
இழப்புகள்
35-55 டாங்குகள்

4,000-5,000 பேர்

40+ டாங்குகள்

4,000-6,000 பேர்

எல் கெட்டார் சண்டை (Battle of El Guettar) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. துனிசியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் அமெரிக்கப் படைகள் நாசி ஜெர்மனியின் படைகளைத் தோற்கடித்தன.

மார்ச் 1943ல் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்த அச்சுப் படைகள் துனிசியா நாட்டின் ஒரு முனையில் சுற்றி வளைக்கப்பட்டன. மேற்கிலிருந்து அமெரிக்கப் படைகளும் கிழக்கிலிருந்து பிரித்தானியப் படைகளும் அவற்றை முற்றுகையிட்டிருந்தன. கிழக்கில் பிரித்தானிய 8வது ஆர்மி அச்சுப் படைகளின் மாரெத் அரண்கோட்டினை மார்ச் 19ம் தேதி தாக்கியது, இத்தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போதே மேற்கில் தளபதி ஜார்ஜ் பேட்டன் தலைமையிலான அமெரிக்க 2வது கோர் அச்சு நிலைகளைத் தாக்கியது. இத்தாக்குதலைச் சமாளிக்க ஜெர்மானிய 10வது கவச டிவிசன் அனுப்பபட்டது. அல் கிதார் பள்ளத்தாக்கில் இரு படைகளும் மோதின. ஜெர்மானிய டாங்குகளுக்கு கண்ணி வெடிகள் மற்றும் பீரங்கி குண்டு வீச்சின் மூலம் அமெரிக்கர்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். பல டாங்குகளை இழந்த ஜெர்மானியர்கள் தங்கள் தாக்குதலைக் கைவிட்டுப் பின் வாங்கினர். ஆனால் வெற்றிபெற்ற அமெரிக்கப்படைகள் அவற்றை விரட்டிச் செல்லவில்லை. ஒரு வாரம் கழித்து மாரெத் அரண்கோடு மீதான பிரித்தானியத் தாக்குதல்கள் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் அமெரிக்கப் படைகள் முன்னேறத் தொடங்கின. மார்ச் 30 தொடங்கிய இந்த இரண்டாம் கட்ட முன்னேற்றத்தில் ஜெர்மானியர் வசமிருந்த பல குன்றுகளும் அரண்நிலைகளும் கைப்பற்றப்பட்டன. இரு திசைகளிலும் நேச நாட்டுப் படைகளின் தாக்குதலைச் சமாளிக்க இயலாத ஜெர்மானியப் படைகள் துனிசியாவின் தெற்குப் பகுதியைக் காலி செய்து விட்டு, வடக்குப் பகுதிக்குப் பின் வாங்கி விட்டன. ஏப்ரல் 7ம் தேதி மேற்கிலிருந்து முன்னேறி வந்த அமெரிக்கப் படைகளும் கிழக்கிலிருந்து முன்னேறி வந்த பிரித்தானியப் படைகளும் கைகோர்த்தன.

அல் கிதார் சண்டைக்குப் பின் தெற்கு துனிசியா முழுவதும் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தது. அடுத்து துனிசியப் போர்த்தொடரின் இறுதிகட்ட சண்டைகள் தொடங்கின.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_கிதார்_சண்டை&oldid=2917583" இலிருந்து மீள்விக்கப்பட்டது