எலிப்பொறிக் கூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூண்டுப் பொறியில் சிக்கியுள்ள எலி

எலிப்பொறிக் கூண்டு என்பது வீட்டில் தொல்லை கொடுக்கும் சுண்டெலிகளைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருளாகும். இது நீள்வடிவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். இம்மரக்கூண்டின் பின்பகுதி முழுவதும் கம்பிகளைக் கொண்டு இருக்கும். பெட்டியின் மேல் பகுதியின் நடுவில் மூன்று கம்பிகள் இருக்கும். இந்தக் கம்பிகளில் நடுக் கம்பியிலிருந்து மேல்புறம் வளைக்கப்பட்ட நிலையில் கூண்டுக்குள் ஒரு கம்பி தொங்கவிடப்பட்டிருக்கும். முன்பகுதியில் சாய்வாகத் திறந்து மூடக்கூடிய அமைப்பில் இருக்கும். சில எலிப்பொறிக் கூண்டுகளில் கீழ்பகுதி மட்டும் மரத்தினாலும், பிற பகுதிகள் அனைத்தும் சிறிய அளவிலான இரும்புக் கம்பிகள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். கீழ் பகுதியில் சுண்டெலிகள் விரும்பி சாப்பிடக்கூடிய தேங்காயின் சிறு துண்டு அல்லது கருவாடு என்று ஏதாவது ஒரு உணவை, எலிப்பொறிக் கூண்டின் மேலிருந்து கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும் கம்பியின் கீழ் பகுதியில் செருகி வைத்து விடுவார்கள். இந்தக் கம்பியின் மேல் பகுதியில் திறந்து மூடக்கூடிய அமைப்பின் மேல் பகுதியை இலேசாகப் பிடித்தபடி வைத்து விடுவார்கள். இதனால் எலிப்பொறிக் கூண்டின் முன்பக்கம் திறந்திருக்கும். சுண்டெலி இந்தக் கூண்டின் முன்பகுதி வழியாக உள்ளே நுழைந்து கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் உணவுப் பொருளைச் சாப்பிடும் நோக்கத்தில் இழுக்க முயலும் போது, மேல் பகுதியில் இருக்கும் கம்பி விலகி முன்பகுதிக்கான சாய்வு அமைப்பு மூடிக் கொள்ளும். இரை தேடிச்சென்ற எலி உள்ளே மாட்டிக் கொள்ளும். மாட்டிக் கொண்ட எலிகளைப் பின்னர் விடுவித்துக் கொன்று விடுவர். தற்போதும் இந்த எலிப்பொறிக் கூண்டு தமிழ்நாட்டின் கிராமப்பகுதிகளில் பயன்பாட்டில் இருக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிப்பொறிக்_கூண்டு&oldid=1051751" இலிருந்து மீள்விக்கப்பட்டது