உள்ளடக்கத்துக்குச் செல்

எரிக்சனின் சமூக உளவியல்சார் வளர்ச்சிப் படிநிலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிக் எரிக்சன்

எரிக்சனின் சமூக உளவியல்சார் வளர்ச்சிப் படிநிலைகள் (Erikson's stages of psychosocial development) என்பது எரிக் எரிக்சனால் தெளிவாக்கப்பட்டு அவரால் விளக்கமளிக்கப்பட்ட எட்டுப் படிநிலைகள் பற்றியது. ஆரோக்கியமாக வளரும் மனிதர் குழந்தைப் பருவம் முதல் முதிர் அகவையர் வயோதியப் பருவம் வரை இதைக் கடந்துபோக வேண்டும். ஒவ்வொரு படிநிலையிலும், மனிதன் தாக்குப்பிடித்து, அதில் முதிர்ச்சியடைந்து புதிய சவால்களை எதிர்நோக்க வேண்டும்.

ஒவ்வொரு படிநிலையும் முன்னைய படிநிலையின் வெற்றிகரமான நிறைவில்தான் கட்டப்படுகிறது. வெற்றிகரமான நிறைவேறாத படிநிலைகளின் சவால்கள் எதிர்காலத்தில் பிரச்சனைகளாக மீண்டும் தோன்ற வாய்ப்புள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தபோதிலும், ஒரு படிநிலையின் தேர்ச்சியானது அடுத்த படிநிலைக்கு முன்னேற தேவைப்படுவதில்லை. எரிக்சன் படிநிலைக் கோட்பாடு, தனி நபரின் உயிரியல் வலிமை மற்றும் சமூக கலாச்சார வலிமை ஏற்பாட்டுச் செயல்பாடாக எட்டு வாழ்க்கைப் படிநிலைகள் மூலம் முன்னெடுத்து அந்நபரின் முன்னேற்றம் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு படிநிலையும் இந்த இரண்டு முரண்பட்ட வலிமைகளின் ஒரு உளவியல் சமூக நெருக்கடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (கீழே அட்டவணையில் காட்டப்பட்டுள்ளவாறு). ஒரு தனி நபர் உண்மையில் இவ் வல்லமைகளை வெற்றிகரமாக இணக்கப்படுத்தினால், அந்நபர் ஒத்திசைவான பேராண்மையுடன் படிநிலையிலிருந்து வெளிப்படுவார். உதாரணமாக: ஒரு குழந்தை அவநம்பிக்கையைவிட நம்பிக்கையுடன் பிள்ளைப் பருவத்தை அடைந்தால் (தன்னாட்சி எதிர் அவமானம் மற்றும் சந்தேகம்), அப்பிள்ளை மீதமுள்ள வாழ்க்கை நிலைகளுக்கு நம்பிக்கையின் பேராண்மையைக் கொண்டு செல்லும்.[1]

படிநிலைகள்[தொகு]

சராசரி வயது[2] பேராண்மை உளச்சமூக முரண்பாடுகள் [3] குறிப்பிட்டளவு உறவு[2] வாழ்வு பற்றிய கேள்வி[2] உதாரணங்கள்[2]
0-2 வருடங்கள் நம்பிக்கை அடிப்படை நம்பிக்கை எதிர் அவநம்பிக்கை அம்மா நான் இந்த உலகை நம்பலாமா? உணவருந்தல், கைவிடுதல்
2-4 வருடங்கள் விருப்பம் தன்னாட்சி எதிர் வெட்கம் மற்றும் சந்தேகம் பெற்றோர் நானாக இருப்பது சரியா? மலசலகூடப் பயிற்சி, தானாக உடுத்துதல்
4-5 வருடங்கள் நோக்கம் முயற்சித்தல் எதிர் குற்றவுணர்வு குடும்பம் இதனை நான் செய்வது சரியா? ஆராய்தல், கருவிகள் பாவித்தல் அல்லது படம் வரைதல்
5-12 வருடங்கள் திறமை முயற்சி எதிர் தாழ்வுச் சிக்கல் அயலவர், பாடசாலை உலக மக்களிடையே நான் இதைச் செய்ய முடியுமா? பாடசாலை , விளையாட்டு
13-19 வருடங்கள் மெய்ப்பற்று அடையாளம் எதிர் அடையாளக் குழப்பம் வயதுக் குழுக்கள், அடையாள மாதிரி நான் யார்? நான் எப்படியிருக்க முடியும்? சமூக உறவு
20-24 வருடங்கள் அன்பு நெருக்கம் எதிர் தனிமை நண்பர்கள், பெற்றோர் நான் அன்பு செய்யலாமா? காதல் உறவு
25-64 வருடங்கள் கவனம் உற்பத்தி எதிர் தேக்கம் குடும்பம், வேலைத்தள உறவுகள் நான் என் வாழ்வை எண்ண முடியுமா? வேலை, பெற்றோர் நிலை
65-இறப்பு ஞானம் மன முழுமை எதிர் மனத்தளர்ச்சி மனிதம், தன் இரக்கம் நான் இருந்நதுபோல் இருக்கலாமா? வாழ்வின் பிரதிபலிப்பு

நம்பிக்கை: அடிப்படை நம்பிக்கை எதிர் அவநம்பிக்கை (பிறப்பு - 2 வயது)[தொகு]

பிறப்பு முதல் 2 வயது வரையுள்ள குழந்தைப்பருவம் எனும் படிநிலை அதிக முக்கியத்துவமானது. பிள்ளைகள் அடிப்படை நம்பிக்கை உணர்வை விருத்தி செய்யும் காலம் இதுவாகும். ஒரு பிள்ளையிடத்து ஆளுமை வளரவேண்டுமாயின் நம்பிக்கை ஏற்பட வேண்டும். அவர்களின் தேவைகளான உணவு, உடை, ஓய்வு என்பன கிடைக்கப்பெறும் போது நம்பிக்கை பிறக்கின்றது. பெற்றௌர், மற்றும் தம்மைச் சூழவுள்ளோர் மீது பிள்ளை நம்பிக்கைவைத்து இவ்வுலகினைத் தனது பாதுகாப்பான இடமாகவும் அடையாளங் காண்கின்றது. காரணத்தையும் விளைவையும் கற்றுக்கொள்ளும் நம்பிக்கையானது உணர்ச்சிப் பெருக்கம், கவனம், ஒழுக்கம் என்பனவற்றை பிள்ளைகளிடத்தே வளப்படுத்தும். தனது தேவைகள் கிடைக்கப் பெறாதோ, அல்லது போதாதிருப்பினோ தமக்குள் பிள்ளைகள் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்திக் கொள்வர். இதன் விளைவு ஒத்துழையாமை, மனச்சோர்வு, பின்வாங்கல் போன்ற நடத்தைகளினால் வெளிக்காட்டப்படும் என எரிக்சன் குறிப்பிடுகின்றார்.

விருப்பம்: தன்னாட்சி எதிர் வெட்கம் மற்றும் சந்தேகம் (2-4 வயது)[தொகு]

இரண்டு வயது முதல் 4 வயது வரையுள்ள துள்ளுநடைப்பருவம் இதுவாகும். குழந்தைகள் அவHகளின் உடல்களின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவதற்கு ஆரம்பிப்பர். இக்காலப்பகுதியில் பொதுவாகவே அவர்கள் ஆடையணியும் பயிற்சியும் ஆரம்பமாகும். தான் ஒரு சுதந்திரமானவன் எனவும் ஆனால், முக்கியமான விடயங்களில் ஏனையோரின் உதவியினையும் வழிகாட்டலையும் தன்னால் பயன்படுத்த முடியுமெனவும் கருதுகின்ற உளநிலையை பிள்ளை பெற்றுவிடுகின்றது. உணவு உட்கொள்ளல், கழிவகற்றல் போன்றவற்றில் தானே ஈடுபடப் பிள்ளை எத்தனிக்கின்றது. வலுவான உளநிலையினைப் பெற்ற பிள்ளை வலுக்குறைந்த உடல் நிலையினால் தனக்குள் மனவிரக்தி, தோல்வி போன்ற உணர்வுகளைப் பெறுகின்றது. தனக்கு பாரமான ஒரு பொருளைத் தூக்கிக் கையாள முடியும் என்ற மனபலம் இருந்தபோதும், அவர்களால் அதனைச் செய்ய முடியாது போகலாம். எனவே, பிள்ளைகளிடத்து ஏற்படும் எதிர்பார்க்கைகள் நிறைவேறாது போனால் உளப்பிணியோ அல்லது வளமைக்குப் பறம்பான நடத்தைகளிலே அவர்கள் ஈடுபடுவர்.

நோக்கம்: முயற்சித்தல் எதிர் குற்றவுணர்வு (4-5 வயது)[தொகு]

நான்கு வயது முதல் ஐந்து வயது வரையுள்ள முன்பள்ளிப்பருவம் இதுவாகும். இப்பருவத்துப் பிள்ளைகள் முதியவர்கள் போலச் செயற்பட ஆரம்பிப்பர். போட்டிகளை விரும்பி அதில் வெற்றியடையும் போது சந்தேசமடைவர். தனது ஆற்றல் எல்லைகளுக்கு அப்பாலும் சென்று செயல்புரிய விரும்பும் வயது இதுவாகும். இவ்வார்வங்களில் தோல்வியேற்படின் அவHகளிடையே குற்ற உணர்வு ஏற்படுகின்றது. ஆளுமை விருத்தியை பாதிப்பதாக இது காணப்படும். இப்பருவம் முக்கியமாகக் கையாள வேண்டிய விருத்திப்படி நிலையாகும். விளையாட்டு இக்காலகட்டத்தில் முக்கியமானதொன எரிக்சன் நம்பினார். உணர்ச்சி நெருக்கடியைக் குறைப்பதற்கு பாதுகாப்பு வழியாகவும், பிள்ளைகளின் அடையாளத்திற்கு உதவியாகவும் குறியீட்டு வழியில் பிரச்சினைகளைக் கையாள்வது பற்றியும் அவர் எடுத்துரைக்கின்றார்.

திறமை: முயற்சி எதிர் தாழ்வுச் சிக்கல் (5-12 வயது)[தொகு]

5 வயது முதல் 12 வயது வரையுள்ள பள்ளிப்பருவம் இதுவாகும். முதல் மூன்று உள-சமூக விருத்திகளும் சரியாக அமையும்போது இப்பருவம் சிறப்பாக அமையும். இது ஒரு சந்தோசமான கற்பனைப் பருவமாகும். பிள்ளை வன்முறைக்கு செல்லாததும்,அமைதியும்,சரியான வளர்ச்சியும் கொண்ட பருவமாகும். இப்பருவத்தில் அறிவு, திறன், மனித உறவுகள், விளையாட்டு, ஒற்றுமை போன்றன சமூக அமைப்போடு பின்ளை தொடர்புபட்டுக் காணப்படுகிறது. கற்பனை வாழ்வில் இலயித்த இயல்பு படிப்படியாக மாறிவருவதும் இப்பருவத்திலாகும். குடும்பத்திற்கப்பாலும் அவர்களினது அறிவினை விருத்தி செய்ய முற்படுவதோடு தமது கலாசாரத் திறன்களைப் பெறுவதிலும் ஈடுபடுவர். அவர்களது விளையாட்டு மிகவும் பயனுடையதாக்க காணப்படும். தமது பணிகளைச் செய்வதற்குரிய அறிவைத் தேடுதலில் இப்பருவத்தினர் அக்கறை கொள்வர். இத்தேவைகள் நிறைவு பெறாவிடின் அவர்களிடையே தாழ்வு மனப்பாங்கு ஏற்படும். இதனைத் தடுப்பதற்கான முயற்சிகளில் பாடசாலைகளும் பெற்றௌர்களும் ஈடுபட வேண்டும் என்பது எரிக்சனின் இப்படிநிலையில் கூறப்பட்டுகின்றது.

மெய்ப்பற்று : அடையாளம் எதிர் அடையாளக் குழப்பம் (13-19 வயது)[தொகு]

13 வயது முதல் 19 வயது வரையுள்ள கட்டிளமைப்பருவம் இதுவாகும். இப்பருவத்தினரின் பிரதான பணி தமது அடையாள நிலையினை அடைதலாகும். பிள்ளையானது தனது பலம், பலவீனம், இலக்கு, தொழில், பால்வகிபங்கு எனத் தனது இயல்புகளைப்பற்றிய அறிவையும் விளக்கத்தினையும் பெறுகின்றது. இதனை விளக்க எரிக்சன் அ​டையாள ​நெருக்கடி என்ற பதத்தினை விசேடமாகப் பயன்படுத்துகின்றார். இப்பருவத்து பிள்ளையிடத்து உடலியல் மாற்றங்களும் மனவெழுச்சிசார் விளைவுகளும் ஏற்படுவதனால், பல நெருக்கடிகளையும் குழப்பங்களையும் எதிர்கொள்வர். எனவே, இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண்படுவது அவசியமாகும். இல்லயேல் பிள்ளையினது சுய அடையாளம் கரைந்து அவனை நெறிபிறழ்வானவனாக மாற்றிவிடும்.

அன்பு: நெருக்கம் எதிர் தனிமை (20-24 வயது)[தொகு]

20 வயது தொடக்கம் 24 வயது வரையுள்ள இளவளர்ந்தோர் பருவம் இதுவாகும். இப்படிநிலையில் பிள்ளைகளிடம் பிறரிடம் நேசமாதல் வளர்ச்சியடையும். ஒத்த பாலாருடனோ, எதிர்ப்பாலாருடனோ, தன்னுடைய சுயத்துடனோ நேசம் ஏற்படலாம். இதுவரை இடம்பெற்ற படிநிலையான ஆளுமை விருத்தி போதுமானவையாக அமையாதவிடத்து நேச உணர்வினைப் பிள்ளையால் அடையமுடியாது போகும். இதன்விளைவாகப் பிள்ளை ஒதுங்கத் தொடங்கும். பாலியல் நேசம் என்பது நேசத்தின் தூரத்தில் வைத்தே எரிக்சனால் நோக்கப்படுகின்றது. பிள்ளை தனது சிந்தனை, உணர்வு, செயற்பாடு போன்றவற்றை எல்லாம் மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வது இந்த நேசத்தினாலேயாகும். இங்கு நேசத்திற்கான மற்றவரின் தேவையினையும் எரிக்சன் ஏற்றுக்கொள்கின்றார்.

கவனம்: உற்பத்தி எதிர் தேக்கம் (25-64 வயது)[தொகு]

25 வயது தொடக்கம் 64 வயது வரையுள்ள நடுவளர்ந்தோர் பருவம் இதுவாகும். நமக்கும் சமூகத்திற்கும் பயனுடைய ஆற்றலே உற்பத்தி எனக் கருதப்படும். இவ்வயதினர் உற்பத்திச் செயற்பாடுகளில் முன்னிற்பர். ஆளுமை நிறைவுணர்வினை நோக்கியதான படைப்பும் இங்கு உருவாகும். இப்பருவத்தினருக்கு பொதுவாக உலகில் நல்லதோர் இடத்தினை அடையமுடியும். நல்லறிஞர்களாக விளங்கும் இவர்கள் தமக்குள் அறிவினைப் பகிர்ந்து கொள்வதுடன், வாழ்க்கையின் தத்துவத்தினையும் பகிர்ந்து கொள்வர். இனவிருத்தியிலும் பொருளாதார விருத்தியிலும் அக்கறை கொள்ளும் இப்பருவத்தினர் சமூகத்திலே ஒரு கௌரவமான இடத்தினை எதிர்பார்ப்பர். இவ்வாறான உற்பத்தி நிலையினை அடைய முடியாது போனால், அவர்களிடையே தேக்கம் - அசைவற்ற தன்மை காணப்படும். இது அவர்களிடையே சலிப்பை ஏற்படுத்துவதுடன் தங்களால் சமூக நலனுக்கு உதவமுடியாமையின் தன்மையினையும் உணர்த்தும்.

ஞானம்: மன முழுமை எதிர் மனத்தளர்ச்சி (65 - இறப்பு)[தொகு]

65 வயதிற்கு மேற்பட்ட முதிர்பருவம் இதுவாகும். வாழ்வின் இறுதியை நோக்கிய நிலையில் நபர்கள் தமது வாழ்வில் சந்தித்த வெற்றிகளையும் தோல்விகளையும் வயது முதிர்ச்சியையும் இயல்புகளையும் ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாடு இப்பருவத்திற்குரிய இயல்பாகும். முதல் ஏழு பருவங்களையும் தீர்மானிப்பதில் வெற்றியடைந்த இவர்கள் சொந்த மேலாண்மையை அடைவர். மேலாண்மை உணர்வுடைய இவர்கள் தமது வாழ்க்கை நன்றாகவே கழிந்ததாக ஏற்றுக் கொள்வர். அவர்கள் பிறமக்களுடைய கலாசாரம், எதிர்காலத் தலைமுறையினர் என்பனவற்றௌடு உறவுகளை ஏற்படுத்துவர். எப்பிடியிருப்பினும் இவர்கள் தமது வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து தாங்கள் பிழையான தீர்மானத்தை எடுத்ததாக உணர்வார்களாயின் அவர்கள் தம் வாழ்வைக் குறைவான மேம்பாடாகவே காண்பர். சரியான விடயத்தைச் செய்வதற்கு மேலும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற தமது இயலாமையின் தன்மையை உணர்வர். இறுதியில் வெறுப்பு, இறுமாப்பு, அருவருப்பு, கசப்பு, இகழ்வு என்பனவற்றிற்கு உள்ளாகின்றனர்.

பிரயிட்க்குப் கொள்கைக்குப் பின்னான அபிவிருத்தி/வளர்ச்சி[தொகு]

எரிக்சன் உளப்பகுப்பாய்வு மரபுகளைப் பின்பற்றுபவராக இருந்தும் கூட பிரயிட் வாதிகள் போல் இவற்றின் மீது அதிகநம்பிக்கை வைக்காது அகம் என்பதன் மீதோ கவனஞ் செலுத்தி தனது கோட்பாட்டினை முன்வைத்தார். இவரது கோட்பாட்டில் பின்வரும் விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

 • ஆளுமை விருத்தி என்பது புரெயிட் குறிப்பிடுவது போல் ஐந்து வயதளவில் நிறைவு பெறுவதில்லை, மாறாக ஒவ்வெரு தனிளாளும் ஆளுமை விருத்தியின் தொடர்ச்சியான நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்கின்றார்.
 • தான் குறிப்பிடும் படிநிலைகளினூடான விருத்தியின் ஒரு பகுதி முதிர்ச்சியாலும் மற்றப்பகுதி அவன் வளரும் சமூகத்தினாலும் தீர்மானிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றார்.
 • இப்படிநிலைகள் ஒவ்வொன்றும் பிள்ளை அடைய வேண்டிய குறிப்பான விருத்திக்குரிய பணிகளைக் கொண்டிருக்கும். இதனை அடைவது பிள்ளையானது பெற்றௌர், ஆசியர்கள், ஏனைய வயதுவந்தவர்கள் ஆகியோருடன் கொள்ளுகின்ற இடைவினைகளில் தங்கியிருக்கும் என்கிறார்.
 • ஒரு பருவத்தில் அடைய வேண்டிய விருத்திக்குரிய அம்சங்களில் தோல்வி ஏற்படின் அவை இனிவரும் பருவ வளர்ச்சிகளில் செல்வாக்குச் செலுத்தும்.

எனவே, எரிக்சன் குறிப்பிடுகின்ற எட்டு உள-சமூக விருத்திப்படி நிலைகளில் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் சமூகச் சூழ்நிலையின் செல்வாக்கு சில போராட்ட நிலைகளைத் தோற்றுவிப்பதனைக் காணமுடிகின்றது. இவற்றிற்கு ஆக்கபூர்வமான தீர்வு காண்பது குழந்தைகளிடையே சமூகவியல்பின் விருத்திக்கு காரணமாய் அமைவதோடு சிறந்த ஆளுமை மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்பவும் உதவும்.

உசாத்துணை[தொகு]

 1. Crain, William (2011). Theories of Development: Concepts and Applications (6th ed.). Upper Saddle River, NJ: Pearson Education, Inc.
 2. 2.0 2.1 2.2 2.3 "PSY 345 Lecture Notes – Ego Psychologists, Erik Erikson" (PDF). Archived from the original (PDF) on 2010-12-14. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
 3. http://web.cortland.edu/andersmd/ERIK/welcome.HTML

வெயியீடுகள்[தொகு]

 • Erikson, Erik H. (1959) Identity and the Life Cycle. New York: International Universities Press.
 • Erikson, Erik H. (1968) Identity, Youth and Crisis. New York: Norton.
 • Sheehy, Gail (1976) Passages: Predictable Crises of Adult Life. New York: E. P. Dutton.
 • Stevens, Richard (1983) Erik Erikson: An Introduction. New York: St. Martin's.
 • முத்துலிங்கம், ச. (2002) கல்வியும் உளவியலும் - கொழும்பு, லங்கா புக் டிப்போட்.
 • ஜமாஹிர், பி.எம். (200) பொது உளவியல் ஓர் அறிமுகம், கண்டி, இலங்கைத் தென்கிழக்கு ஆய்வமையம்.
 • ஜெயராசா, சபா. (2007) தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும், கொழும்பு, முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை மற்றும் கார்த்திகேசன் நினைவுக்குழு.
 • அருள்மொழி, செ. (2008) பிள்ளை வளர்ச்சியும் கற்றலும், மட்டக்களப்பு, திருமதி. சத்தியா அருள்மொழி.
 • John S. Dacey John .F Travers, (2002) Human development across the Lifespan, Mc Graw-Hill, New York
 • Microsoft Encarta encyclopedia. 1993–2001 Microsoft corporations

வெளி இணைப்புக்கள்[தொகு]