எம். சி. சாக்ளா
எம். சி. சாக்ளா | |
---|---|
எம். சி. சாக்ளா | |
பிறப்பு | செப்டெம்பர் 30, 1900 |
இறப்பு | பிப்ரவரி 9, 1981 |
மொகமதலி கரீம் சாக்ளா (30 செப்டெம்பர் 1900–9 பிப்ரவரி 1981) உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் வெளி நாடுகளின் தூதராகவும், நடுவணரசின் கல்வி அமைச்சராகவும் இருந்தவராவார். எம்.சி சாக்ளா என்றும் அறியப்படுகிறார். 1948 முதல் 1958. வரை மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
இளமையும் கல்வியும்
[தொகு]எம். சி. சாக்ளா மும்பையில் செப்டம்பர்30, 1900ல் சியா முஸ்லிம் வணிகக் குடும்பத்தில் பிறந்தார். 1905ல் சாக்ளாவின் தாய் இறந்தார். பம்பாய் தூய சேவியர் பள்ளியிலும், 1919 முதல் 1922 வரை ஆக்ஸ்போர்டு இலண்டன் கல்லூரியில் வரலாறு பாடத்தினையும் படித்தார். மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார்.
பணியும் பதவிகளும்
[தொகு]1922இல் ஆக்சுபோர்டிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியபின், பம்பாய் உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். முசுலீம் லீக்கில் உறுப்பினர் ஆனார். ஜின்னா தேசிய வாதியாக இருந்தபோது அவரிடம் பற்றும் தொடர்பும் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் பாகிஸ்தான் பிரிவினைக் கொள்கையில் கருத்து வேறுபட்டதால் அவரிடமிருந்தும் முசுலீம் கட்சியிலிருந்தும் விலகினார். 1927 இல் அரசு சட்டக் கல்லூரியில் பேராசிரியர் ஆனார். 1946இல் பம்பாய் பல்கலைக் கழக துணைவேந்தராக பொறுப்பேற்றார். 1947 ஆகஸ்ட்டு 15 இல் பம்பாய் உயர்நீதி மன்ற நீதிபதி பதவியை ஏற்றார். அக்டோபர் 4, 1956இல் மகாராட்டிர தற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்றார். அப்பதவியில் இரண்டு மாதங்கள் இருந்தார்.
அமெரிக்கத் தூதராகவும் (ஏப்பிரல் 1958—சூன் 1961) இங்கிலாந்து தூதராகவும் (ஏப்பிரல் 1962—செப்டெம்பர் 1963) பணியாற்றினார். அமெரிக்காவில் தூதராகப் பணியாற்றும்போதே மெக்சிகோவிலும் கியூபாவிலும் இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.
இங்கிலாந்திலிருந்து திரும்பியதும் மத்திய கல்வி அமைச்சரானார். செப்டம்பர் 1957இல் பன்னாட்டு நீதி மன்றத்தில் தற்காலிக நீதிபதியாக பொறுப்பு வகித்தார். ஜனவரி 17, 1958இல் டி. டி. கிருஷ்ணமாச்சாரி நிதி அமைச்சராக இருந்தபோது நடந்த முறைகேட்டை விசாரிக்க சாக்ளா அமர்த்தப்பட்டார். ஒரு மாத இடைவெளிக்குள் விசாரணையை முடித்து அறிக்கையையும் அரசுக்குச் சமர்ப்பித்தார்.
அக்டோபர் 1965இல் யுனஸ்கோ தூதுக் குழு தலைவர் ஆனார். ந்வம்பர் 1966இல் இந்திரா காந்தி அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சர் பதவி வகித்தார். ஆகஸ்ட் 31, 1967 இல் இந்தியைக் கட்டாய மொழியாக இந்திய அரசு கொண்டு வந்தபோது அதை எதிர்த்து அமைச்சர் பதவியைத் துறந்தார். ஜூன் 25, 1975இல் அன்றைய பிரதம அமைச்சர் இந்திராகாந்தி நெருக்கடி நிலைமையை நடைமுறைப் படுத்தியதை சாக்ளா எதிர்த்தார்.
கருத்துகளும் எண்ணங்களும்
[தொகு]இந்தியா ஒற்றுமையாக இருக்கவேண்டும், மதச்சண்டையால் பிளவுபடக் கூடாது என்று கருதினார். ஆங்கிலத்தை வெறுத்து இந்தியை திடீரென ஆட்சிமொழி ஆக்குவதை எதிர்த்தார். எழுத்துரிமை, பேச்சுரிமை, மக்களாட்சி ஆகியவற்றுக்குத் தீங்கு ஏற்பட்டபோது எதிர்த்துக் குரல் கொடுத்தார். காசுமீர் மாநிலம் இந்தியாவுக்கே சொந்தம் என்றும் காசுமீர் சிக்கலில் ஐ. நா. அவை குறுக்கிடக்கூடாது என்றும் ஐக்கிய நாடுகள் அவையில் பேசினார்.
பிறப்பில் இசுலாமியராக இருந்தபோதும் மதப்பற்று இல்லாமல் வாழ்ந்தார். அவர் இறந்ததும் அவர் விருப்பப்படி இசுலாம் மத மரபுக்கு மாறாக அவருடைய உடல் எரிக்கப்பட்டது.
1985இல் பம்பாய் உயர்நீதி மன்ற வளாகத்தில் அவருடைய சிலை திறக்கப்பட்டது. அச்சிலையின் பீடத்தில் "சாக்ளா ஒரு உயர்ந்த நீதிபதி, உயர்ந்த குடிமகன், உயர்ந்த மனிதர்" என்று எழுதப்பட்டுள்ளது.
சாக்ளா எழுதிய தன் வரலாற்று நூலான "ரோசஸ் இன் திசம்பர்" இது வரை எட்டு பதிப்புகள் வெளியாகியுள்ளது
மேற்கோள் நூல்
[தொகு]- CHIEF JUSTICE MAHOMMEDALI CURRIM CHAGLA
- ROSES IN DECEMBER (First Edition 1973) Published by Bharatiya Bhavan,Bombay.